இறையனார்
இறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. குறிஞ்சித் திணைப் பாடல் இது. ஒப்புநோக்குவோம் உறையனார்.
பாடல் - மூலம்
[தொகு]கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவைக் கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
பாடல் தரும் பொருள்
[தொகு]நிகழிடம் என்பது....
[தொகு]யார், எங்கு, எப்போது பேசுகிறார்
நிகழிடம் - நூல் பதிப்பில் உள்ளபடி
[தொகு]இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன், நாணின் நீங்குதற் பொருட்டு, மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திப் பாடுமாற்றாற், கூடிய தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது.
நிகழிடம் - விளக்கம்
[தொகு]தலைவன் தலைவி முதல் மெய்யுறு புணர்ச்சி தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இஃது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான்.
(திருக்குறளில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் உள்ள பாடல்களைப் போன்றது இது.)
செய்தி
[தொகு]தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். (அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.)
தேன் தேடும் வாழ்க்கைக் கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
முறிமேனி முத்தம் முறுவல் வேறிநாற்றம் வேல்உண்கண் வேய்தோள் அவட்கு - என்று பாராட்டும் திருக்குறள் போன்றது இது.
கதை
[தொகு]இறையனார் என்னும் புலவர் கடவுள்-சிவபெருமானே ஆவார், அவர், அரசன் அவையில் பரிசு பெறத்தருமி என்பவனுக்கு இப்பாடலைச் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையைத் திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது. 'திருவிளையாடல்' என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை சுவையேற்றப்பட்டுள்ளது.