இருவாய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இருவாட்சி (பறவை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இருவாட்சி
மலபார் சாம்பல் இருவாச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: கொர்டேட்டா
வகுப்பு பறவைகள்
வரிசை: கொரேசிஃபார்மல்
குடும்பம்: புசெரோடிடே
Rafinesque, 1815
பேரினம்

14

இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" என அழைப்பார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு உலங்கு வானூர்தி பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே கொண்டை (காஸ்க்) போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது.

இனப்பெருக்கம்[தொகு]

இனப்பெருக்க காலம்[தொகு]

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இனப்பெருக்க காலமாகும்.

கூடு[தொகு]

இருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.

பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். இப்பறவைகளை மழைக்காட்டின் குறியீடு என்பர்.

உணவு[தொகு]

அனைத்துண்ணிகளான இருவாச்சிகள் பழங்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் முதலியவற்றை உண்ணும். மேலும் இவற்றின் நாக்கு குட்டையாக இருப்பதால் இவற்றால் இரையை விழுங்க இயலாது. எனவே உணவை அலகின் நுனியில் இருந்து தூக்கிப்போட்டு சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தும்.

இந்தியாவில் உள்ள வகைகள்[தொகு]

உலகம் முழுவதும் 54 வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இருவாச்சிகளை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் 1. பெரும் பாத இருவாச்சி, 2. மலபார் இருவாச்சி, 3.சாம்பல் நிற இருவாச்சி, 4. மலபார் பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்னிந்தியாவில் காணப்படுபவை.

பெரும் பாத இருவாச்சி: அலகு மற்றும் அலகுக்கு மேலே உள்ள பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கருப்பு இறக்கையில் வெள்ளைக் கோடுகள் இருக்கும் சிறிய பகுதி மட்டும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்ற மூன்று வகைகளைக் காட்டிலும் இந்த வகை சற்று பெரிதாக இருக்கும்.

மலபார் பாத இருவாச்சி: இது பார்ப்பதற்குக் பெரும் பாத இருவாச்சி போல இருந்தாலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும். அலகில் வெள்ளை கலந்த மஞ்சள் நிறம் இருக்கும். கொண்டை பகுதியில் கருப்பு நிறம் காணப்படும். கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த உடலைப் பெற்றிருக்கும்.

இந்திய சாம்பல் நிற இருவாச்சி: மேலே குறிப்பிட்ட இரண்டைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். சாம்பல் வண்ணத்தில் காணப்படும்.

மலபார் சாம்பல் நிற இருவாச்சி: இவற்றுக்குக் கொண்டைப் பகுதி இருக்காது. சாம்பல் நிறத்தில் காணப்படும்

இவை தவிர, மேலும் 5 வகைகள் இந்தியாவில் உள்ளன. அவை 1. நார்கொண்டான் இருவாச்சி (அந்தமான் தீவுகளில் காணப்படுவன) 2. வளையமுள்ள இருவாச்சி, 3.ரூஃவெஸ்ட் நெக்டு இருவாச்சி, 4. பழுப்பு இருவாச்சி (வடகிழக்கு இந்தியாவில் காணப்படுவன) 5. இந்திய பாத இருவாச்சி - நேபாளம் மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன.

வெளியிணைப்பு[தொகு]

Search Wikimedia Commons விக்கிமீடியா பொதுவகத்தில் இருவாட்சி தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவாய்ச்சி&oldid=1830458" இருந்து மீள்விக்கப்பட்டது