இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி
Iosif Samuilovich Shklovsky
பிறப்பு1 ஜூலை 1916
கிளிக்கீவ், உருசியப் பேரரசு (இன்றைய உக்கிரைன்)
இறப்பு3 மார்ச்சு 1985(1985-03-03) (அகவை 68)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் (இன்றைய உருசியா)
குடியுரிமைசோவியத் ஒன்றியம்
துறை[வானியற்பியல்
கதிர்வீச்சு வானியல்
புவிப்புற அறிதிறன் தேட்டம் (சேதி) (Search for extraterrestrial intelligence)]]
பணியிடங்கள்உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம்]]
சுtட்டென்பர்கு வானியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்சாலமன் போரிசோவிச் பிக்கெல்னர்
நிகொலாய் கரதழ்சோவ்
விருதுகள்இலெனின் பரிசு
புரூசு பதக்கம்

இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி (Iosif Samuilovich Shklovsky) (உருசியம்: Ио́сиф Самуи́лович Шкло́вский) (ஜூலை 1, 1916- மார்ச்சு 3, 1985) ஒரு சோவியத் உக்கிரைனிய வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் கோட்பாட்டு வானியற்பியலிலும் பிற தலைப்புகளிலும் பங்களிப்புகள் செய்துள்ளார், மேலும் இவர் 1962 இல் புவிப்புறத்தே வாழும் உயிர்வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். இதனுடைய திருத்தி விரிவாக்கிய பதிப்பு, 1966 இல் அமெரிக்க வானியலாளர் கார்ல் சேகன் அவர்களால், புடவியில் அறிதிறன் வாழ்க்கை (Intelligent Life in the Universe) எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர் 1960 இல் இலெனின் பரிசும் 1970 இல் புரூசு பதக்கமும் பெற்றார். குறுங்கோள் 2849 சுக்லோவ்சுகியும் செவ்வாயின் நிலாவாகிய போபோசின் சுக்லோவ்சுகி குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இவர் 1966 இல் இருந்து சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் உயராய்வு உறுப்பினர் ஆவார்.

இளமை[தொகு]

இவர் உருசியப் பேரரசின் கீழமைந்த உக்கிரேனியாவில் உள்ள குளிக்கீவ் நகரில் ஓர் ஏழ்மையான உக்கிரேனிய யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஏழாண்டு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்றதும், ஒரு கட்டுமான முகவராக பைக்கால் ஆமூர் முதன்மைத் தெருவில் பணிபுரிந்தார். இவர் 1933 இல் மாஸ்கோ பல்கலைக்கழக இயற்பியல்சார் கணிதவியல் புலத்தில் சேர்ந்தார்.

இவர் இங்கு 1938 வரை கல்வி பயின்றார். பின்னர், இவர் சுட்டென்பர்கு வானியல் நிறுவனத்தில் வானியற்பியலில் முதுவர் பட்டத்தில் சேர்ந்து பயின்றார். பிறகு அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் பணி செய்தார். இவர் மாஸ்கோவில் தன் 68 ஆம் அகவையில் இறந்தார்.

ஆராய்ச்சி[தொகு]

சுக்லோவுசுகி (இடது), யாக்கோவ் போரிசோவிச் செல்டோவிச் உடன், 1977

இவரது சிறப்புப் புலங்களாக, கோட்பாட்டு வானியல், கதிர்வீச்சு வானியல், சூரிய ஒளிப்புறணி(ஒளிமுகடு), பெருவிண்மீன் வெடிப்புகள், அண்டக் கதிர்களும் அவற்றின் தோற்றமும் போன்றவை அமைந்தன. இவர் கதிர்வீச்சுகள் சூரியப்புறணியின் மின்னணுவாக்க அடுக்குகளில் இருந்து வெளியேறுகின்றன எனக் கூறினார். இவர் நாம் வாழும் பால்வெளியின் வெப்ப, வெப்பமல்லாத கதிர்வீச்சு அலைகளுக்குத் தனித்தனி கணிதவியல் படிமங்களை உருவாக்கினார். நண்டு ஒண்முகில் கதிர்வீச்சு ஒத்திணக்க முடுக்கிவகைக் கதிர்வீச்சே ஆகும் எனக் குறிபிட்டார். இவை காந்தப் புலத்தில் ஒளிவேகத்துக்கு நெருங்கிய வேகத்தில் சுழலும் ஆற்றல் மிகுந்த மின்னன்களால் உருவாகின்றன என்றார். இவர் புவிக்கோளப் பெருந்திரளான உயிரினப் பேரழிவுக்குச் சூரியனில் இருந்து முந்நூறு ஒளியாண்டுக்கும் குறைந்த தொலைவில் ஏற்பட்ட பெருவிண்மீன் வெடிப்புகளில் இருந்து வெளியேறிய அண்டக்கதிர்கள் தாம் காரணமாகலாம் என முன்மொழிந்தார்.

இவர் 1959 இல் செவ்வாயின் அகக் கோளான போபோசுவின் வட்டணையை ஆய்வு செய்து அதுபிறழ்ந்து கொண்டே வருவதை அறிந்தார். இந்த பிறழ்வு, செவ்வாய் வளிமண்டலத்தோடான உராய்வால் ஏற்படுகிறது என்றால், இந்நிலவின் அடர்த்தி மிகமிக குறைவாக இருக்கவேண்டும் என்றார். இது தொடர்பாக, மேலும் அவர் போபோசு போலானதாக இருக்கலாம் என்றும் இது ஒரு செயற்கையாகத் தோற்றுவித்ததாகவும் இருக்கலாம் எனவும் கருத்துரைத்துள்ளார் இந்த விளக்கத்துக்குப் பல அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்தப் புறவெளி மாந்தர் தலையீட்டுக் கருதுகோள் மக்களின் கற்பனையைப் பெரிதும் கவர்ந்திழுத்துள்ளது. என்றாலும், இவர் இந்த விளக்கத்தை எவ்வளவு உண்மையெனக் கருதினார் என்பதிலும் ஓரளவு கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. என்றாலும், இவரும் கார்ல்சேகனும்[1] புறவெளி மாந்தரின் தொல்பழங்காலத் தொடர்பு பற்றி மிகவும் சீரியநிலையோடே விவாதிதுள்ளது மட்டுமன்றி, இதற்கான சான்றுகளைத் தொன்மங்களிலும் சமய உரையாடல் களிலும் தேடி ஆராயவேண்டும் எனக் கருதினர்.

இவரது Вселенная, жизнь, разум (புடவி, உயிர்வாழ்க்கை, அறிதிறன்) எனும் நூல் 1962 இல் விரிவாக்கப்பட்டு, கார்ல் சாகனை இணயாசிரியராகக் கொண்டு 1966 இல் மீள, புடவியில் அறிதிற உயிர்வாழ்க்கை எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இந்நூல் தான் இப்புலம் பற்றிய விவாதம் சார்ந்த சுருக்கமான முதல் வெளியீடாகும். இந்நூல் இப்புலம் சார்ந்த உயிரியல், வானியற் சிக்கல்களைத் தனித்த போக்கிலும் அமைப்பிலும் சுக்லோவுசுகியும் கார்ல் சாகனும் ஒவ்வொரு ஒன்றுவிட்ட பத்தியிலும் தத்தம் விவாதங்களைச் சமரசமில்லாமல்,முன்வைத்த படைப்பாகும். மேலும், இந்நூல் இவர்கள் இருவருக்கும் இடையில் நிலவிய நெருக்கமான உறவையும் எடுத்துகாட்டுகிறது.

துடிமீன்களை 1967 இல் கண்டுபிடிப்பதற்கு முன்பே, , இவர் கடகம்(தேள்) எக்சு -1 விண்மீன்குழுவை ஒளியியலாகவும் புதிர்க்கதிர்முறை(எக்சுக்கதிர்முறை)யிலும்) நோக்கீடுகள் செய்து, சரியாகவே அங்கிருந்துவரும் கதிர்வீச்சு அகந்திரளும் ஒரு நொதுமி(நியூட்ரான்) விண்மீன் வெளியிடுவதென்ற முடிவுக்கு வந்துள்ளார்.[2]

இவரது சில கூற்றுகள்[தொகு]

சோவியத் வாழ்க்கையின் 1965 ஆம் ஆண்டுச் சிக்கல்களைச் சார்ந்து, [3] இவர் வருங்கால மாந்த குலத்துக்கு நேரவுள்ள வாய்ப்புகளைப் பற்றி பின்வரும் கூற்றுகளை வலியுறுத்தினார்:

நாகரிக வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் வல்லமையுள்ள பின்வரும் ஆழ்நெருக்கடிகளில் ஒன்று இறுதிப் பேரழிவினை ஏற்படுத்தலாம். நாம் ஏற்கெனவே இதையொத்த பல உய்யநிலைச் சூழல்களை நன்கு அறிவோம்:


(அ) வெப்ப அணுக்கருப் பேரிடரால் சமூக அழிவு அல்லது முன்கணிக்கவியலாத கட்டுபடுத்த முடியாத விளைவுகள் கொண்ட வேறொரு கண்டுபிடிப்பு.
(ஆ) மரபியல் அச்சுறுத்தம்.
(இ) மிகைத் தகவலாக்கம்.
(ஈ) உயர்தனிச் செம்புலமைக்கு வித்திடும் குறைந்த திறன் மூளையுள்ள தனியர் உருவாதலின் விளைவால் ஏற்படவுள்ள சமூகச் சிதைவாக்க அச்சுறுத்தல்கள்.
(உ) செயற்கை அறிதிறன் வாழிகளின் படைப்பால் எழும் நெருக்கடி.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவரது நினைவலைகள் பதிவாகிய, நிலாவுக்குச் சென்ற ஐந்து பில்லியன் வோத்கா குடுவைகள்: ஒரு சோவியத் அறிவியலாளரின் கதைகள் எனும் நூல் இவரது இறப்புக்குப் பிறகு 1991 இல் W.W. நார்ட்டன் குழுமத்தால் வெளியிடப்படுகிறது.. “நிலாவுக்குச் சென்ற ஐந்து பில்லியன் வோத்கா குடுவைகள்” நூலில் சுக்லோவுசுகி 1959 இல் பிலிப்பு மோரிசனிடம் சென்ற பயணம் பற்றி விவரிக்கிறார். மோரிசன் கார்னெல் பல்கலைக்கழகக் கியூசெப்பி கொக்கோனியுடன் இணைந்து இயற்கை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இது புறவெளி உயிரினத் தேடலில் ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது. இந்நூலில் இவருடன் புறவெளி உயிரினத் தேடலைப் பற்றிய சிக்கல்களையும் விவாதங்களையும் விளக்கியுள்ளார். சோவியத் ஒன்றியத்தின் செமித்திய எதிர்ப்பு பற்றிக் கடுமையான காட்டம் வாய்ந்த இவர், இப்புல முன்னோடிகளான கொக்கோனி, மோரிசன், கார்னெல் பக்கலைக்கழகப் பிராங்கு திரேக்(இவர் ஓழ்மா திட்டத்தையும் திரேக சமன்பாட்டையும் உருவாக்கியவர்), கார்ல் சாகன், சுக்லோவுசுகி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். சுக்லோவுசுகி சாகனுடன் தன் யூத அடையாளத்தை, குறிப்பாக உக்கிரேனிய யூத அடையாளத்தைப் பகிர்ந்து கொண்டவர்.

இவர் தன் கூர்மையான நகைச்சுவையால் அனைவராலும் விரும்பப்பட்டார். பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இவரது சமகாலப் பணியாளர்கள் 1970 களில் நிகழ்ந்த இவரது வருகையை ஆர்வமிக நினைவுகூர்கின்றனர். புடவியில் அறிதிறன் வாழ்க்கை பற்றி இவரது ஆர்வத்தை அறிந்த ஒரு மேற்பட்டப்படிப்பு மாணவர் ஒருவர், ஆமெரிக்காவைப் போல சோவியத் ஒன்றியத்திலும் இனங்காணா பறக்குந் தட்டுகள் பற்றிய பதிவுகள் பொதுவாக அமைகின்றனவா எனக் கேட்டுள்ளார். இதற்கு சுக்லோவுசுகி, " இல்லை. இப்புலத்தில் உருசியாவை விட அமெரிக்காவே முன்னேறியுள்ளது" எனப் பதிலிறுத்துள்ளார்.

நூல்தொகை[தொகு]

 • I.S. Shklovsky: அண்டக் கதிர்வீச்சு அலைகள், Cambridge, Harvard University Press, 1960
 • I.S. Shklovsky: Вселенная, жизнь, разум (புடவி, உயிர்வாழ்க்கை, அறிதிறன்), Moscow, USSR Academy of Sciences Publisher, 1962
  • Revised and extended English translation of this book, coauthored with Carl Sagan, was first published in 1966, under the name Intelligent Life in the Universe, one of the latest reissues was published in 1998 by Emerson-Adams Press (ISBN 1-892803-02-X)
 • I.S. Shklovsky: சூரிய ஒளிமுகட்டு இயற்பியல், Pergamon Press, Oxford, UK, 1965
 • I.S. Shklovskii, பெருவிண்மீன் வெடிப்பு, New York: Wiley, 1968
 • I.S. Shklovsky: விண்மீன்கள்: அவற்றின் பிறப்பு, வாணாள், இறப்பு,San Francisco, 1978, ISBN 0-7167-0024-7
 • I.S. Shklovsky: , நிலாவுக்குச் சென்ற ஐந்து பில்லியன் வோத்கா குடுவைகள்: ஒரு சோவியத் அறிவியலாளரின் கதைகள், W.W. Norton & Company, 1991.

மேற்கோள்கள்[தொகு]

 1. Shklovski, I.S and Carl Sagan. Intelligent Life in the Universe. San Francisco: Holden-Day, 1966.
 2. Shklovsky, I.S. (April 1967), "On the Nature of the Source of X-Ray Emission of SCO XR-1", Astrophys. J., 148 (1): L1–L4, Bibcode:1967ApJ...148L...1S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/180001
 3. NSA Technical Journal, Winter 1966 - Vol. XI, No. 1: Communications with Extraterrestrial Intelligence [1] பரணிடப்பட்டது 2011-12-16 at the வந்தவழி இயந்திரம்