இனிசந்த நாகனார்
இனிச்சந்த நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. நற்றிணை நூல் தொகுப்பில் 66 எண்ணுள்ள பாடலாக இது அமைந்துள்ளது. இது பாலைத் திணைப் பாடல். பாடலில் சொல்லப்பட்ட செய்தி மனைமருட்சி.
புலவர் பெயர்
[தொகு]நாகனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பலர் உள்ளனர். இவரை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவேண்டி இந்த அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. புறா உகாய் விதையை உடைத்துத் தின்றுவிட்டுக் காரம் தாங்கமாட்டாமல் உயவும் சந்தத்தை இவர் இனிசந்தம் (இனிய சந்தம்) என்று குறிப்பினுவதால் புலவரின் பெயர் தெரியாத நிலையில் நற்றிணையைத் தொகுத்தவர் இவருக்கு 'இனிசந்த' என்னும் அடைமொழியைச் சேர்த்துப் பெயர் சூட்டியுள்ளார்.
பாடலில் உள்ள செய்தி
[தொகு]உகாய் செடியின் காய் வெடித்து உதிர்ந்த விதை மிளகு போல் காரமுடையது. சிறிய புறா ஒன்று அந்த விதையை உடைத்து உண்டது. அதன் காரம் தாங்க முடியாமல் தன் கழுத்திலுள்ள மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு உயவிற்று. இந்த மரம் இயவு என்னும் பாலைநில வழியில் இருந்தது. இந்த இயவில்தான் அவள் அவனோடு சேர்ந்தாள். அப்போது அந்தப் புறாவைப் போலவே கண் சிவந்து கலங்கினாள். இப்போது தன் தலையிலுள்ள கோதை (பூமாலை) கசங்கியதற்காகவும், வளையல் கழலுவதற்காகவும், அல்குலை மூடிய காசுமாலை முறைமாறிக் கிடப்பதற்காகவும் கலங்குகிறாள்.
பழந்தமிழ்
[தொகு]கோழி கூவும். காக்கைக் கரையும். என்பன போல் புறா உயவும் என்பது பழந்தமிழ். கற்பு என்பது மாட்சிமை உடைய நலமாதலால் அதனை இப்பாடல் 'மாணலம்' என்னும் அரிய சொல் தந்து வழங்குகிறது.