இந்தோனேசியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தோனேசியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (Science and technology in Indonesia) பல வளரும் நாடுகளைப் போல முன்னேற்றம் காணவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உலகின் முன்னணி நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியதாகவும் இல்லை. எனினும், நாட்டின் வரலாறு முழுவதும், இங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் இருந்திருக்கின்றன. தற்போது, இந்தோனேசியக் குடியரசின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், நாட்டின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திக்குப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. 2010 ஆம் ஆண்டில் இந்தோனேசிய அரசு சுமார் 205 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்தது. இத்தொகை நாட்டின் மொத்த செலவீனத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது ஆகும்[1].

வரலாறு[தொகு]

பினிசி படகின் ஓவியம்

விவசாய மற்றும் கடல்சார் கலாச்சாரத்தில் வாழ்ந்த இந்தோனேசியத் தீவுநாட்டின் மக்களான இவர்கள், குறிப்பாக விவசாயம் மற்றும் கடல்சார்ந்த, சில பாரம்பரிய தொழில்நுட்பங்கள்களில் சிறந்து இருந்துள்ளனர். உதாரணமாக விவசாயத்தில், இந்தோனேசிய மக்கள், மேலும் பல இதர தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்கள் போலவே நெல் பயிரிடல் நுட்பத்தில் பிரபலமாக இருந்துள்ளனர். பூகிசு இன மக்களும் மக்காசார் இனத்தவரும் பினிசி[2]எனப்படும் மரப்படகுகள் செய்யும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர். போரோபுதூர் நினைவுச் சின்னமும் வேறு சில கோவில்களும் இந்தோனேசியர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குகின்றன.

== கட்டுமானத் தொழில்நுட்பம் ==
காசா சி.என்-235 எசுப்பானிய கடல் மீட்புப்பணி சேவை

சுதந்திரத்துக்குப் பிறகான நவீன இந்தோனேசியாவில், இந்தோனேசியர்களின் குறிப்பிடத்தக்க கட்டுமானத் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துச்சொல்ல சில சான்றுகள் உள்ளன. தியோகோர்டோ ராகா சுகாவதி என்ற இந்தோனேசியப் பொறியாளர் 1980 களில் கண்டறிந்த சோசுரோபாகு எனப்படும் சாலைக் கட்டுமானத் திட்டம் மிகவும் பிரபலமானது. போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மேம்பாலங்கள் கட்டும் இம்முறை பின்னாளில் பல நாடுகளில் பின்பற்றப்பட்டது. பிலிப்பைன்சு, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இத்தொழில் நுட்பம் 1995 இல் இந்தோனேசியாவிற்கு காப்புரிமையைப் பெற்றுக் கொடுத்தது[3].

விண்வெளியும் போக்குவரத்தும்[தொகு]

விண்வெளித் தொழில் நுட்பத்தில், இந்தோனேசியாவிற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. தனது நாட்டு இராணுவத்திற்குத் தேவையான சிறியரக கணிணி வானூர்திகளை, சொந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரித்துக் கொள்ளும் ஒரே நாடாக தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா விளங்கியது. போயிங், ஏர்பசு விமானங்களுக்குத் தேவையான பகுதிக்கூறுகளை இந்தோனேசியாவில் 1976 இல் நிறுவப்பட்ட வானூர்தி நிறுவனத்தில் தயாரித்து பயன்படுத்தியது. எசுப்பானியாவின் வானூர்தி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்தோனேசிய வானூர்தி நிறுவனம் சி.என்.235 வகை வானூர்திகளைத் தயாரித்தது. இவ்வகை வானூர்திகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முன்னாள் இந்தோனேசியக் குடியரசுத் தலைவரான பச்சாருதீன் யூசூப் அபிபி, இந்தோனேசியாவின் வானூர்தித் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். செருமனியில் பேராசியராக இருந்தபோது இப்பொருள் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். வெப்ப இயங்கியல் கொள்கை தொடர்பான அபிபி காரணி, கட்டுமானம் தொடர்பான அபிபி தேற்றம், காற்று இயங்கியல் தொடர்பான அபிபி முறை முதலானவற்றை உருவாக்கியிருக்கிறார்[4]. தென்கொரிய வானூர்தி தொழிற்சாலையும் இந்தோனேசிய வானூர்தித் தொழிற்சாலையும் இணைந்து நவீன போர்விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டன[5]

இந்தோனேசிய விமான நிறுவனமான கருடா இந்தோனேசியாவின் முன்னாள் இயக்குநரான விவேக்கோ சொய்பனோவும் ஒரு நவீனக் கண்டுபிடிப்பாளராக சிறப்புப் பெற்றுள்ளார். கருடா இந்தோனேசியா ஏர்பசு வானூர்திக்கான இருவர் பயணக் கட்டுப்பாட்டு அறையை கண்டறிந்தார்[6]

மேலும், இந்தோனேசியாவில் நன்கு வளர்ச்சியடைந்த இரயில்வே தொழிற்சாலைகள் உள்ளன. மடியுன், கிழக்கு சாவகம் போன்ற மாகாணங்களில் இந்த இரயில்வே தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 1982 ஆம் ஆண்டு முதல் இத்தொழிற்சாலைகளில் பயணிகள் இரயில் பெட்டிகள் மற்றும் சரக்கு இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மலேசியா, வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன[7].

தகவல் தொழில்நுட்பம்[தொகு]

1970 களில் சொந்தமாக தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோள்கள் வைத்திருந்த நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும். 1976 ஆம் ஆண்டுமுதல் பலாப்பா என்ற இந்தோனேச்சியத் தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள்கள் இந்தோசெயற்கைக்கோள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டு வருகின்றன. இணையதளத் தொழில்நுட்பத்தில், இந்நாட்டு விஞ்ஞானியான ஒன்னோ டபிள்யூ புர்போவின் முயற்சியால் இணையதள கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு கிராமப்புறப் பகுதிகளிலும் மக்கள் இணையதள வசதியைப் பெற்றுள்ளார்கள்[8]

எந்திரனியல்[தொகு]

இந்தோனேசிய மாணவர்களும் கூட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல சர்வதேச போட்டிகள் கலந்து வெற்றிகளை ஈட்டிவருகின்றனர். 2010 ஆம் ஆண்டில், இந்தோனேஷியா கணினியியல் பல்கலைக்கழகத்தின் எந்திரன் குழு, அமெரிக்காவின் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற எந்திரன்விளையாட்டுகளில் தங்க பதக்கம் வென்றதன் மூலம் தங்கள் வெற்றிச் சாதனையை நிலைநிறுத்திக் கொண்டது[9]. இதே விருதை இரண்டு வருடங்களுக்கு முன்பு 2009 இல், இவர்கள் வென்றிருந்தனர். 2008 இல் மற்றொரு இந்தோனேசியக்குழு இந்தியாவின் புனேயில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்தது[10]

மேற்கோள்கள்[தொகு]