உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டின் முதுமலையில் இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தி

இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தி அல்லது இந்தியப் பெரிய கருப்பு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dryocopus javensis hodgsonii) என்பது வெள்ளை வயிற்று மரங்கொத்தியின் துணையினம் ஆகும்.

விளக்கம்

[தொகு]

இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தியானது காக்கையைவிடப் பெரியதாக சுமார் 48 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு சிலேட் கறுப்பு நிறமாகவும், விழிப்படலம் மஞ்சள் தோய்ந்த வெண்மை நிறமாகவும், கால்கள் சாம்பல் சிலேட் நிறமாகவும் இருக்கும். ஆண் பறவையின் நெற்றி, உச்சி, கொண்டை, கன்னங்கள் ஆகியன நல்ல ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி வெண்பிட்டம் தவிர கறுப்பு நிறமாக இருக்கும். கீழ்ப்பகுதியான வயிறும் வாலடியும் வெண்மையாக இருக்கும். மற்ற பகுதிகள் கறுப்பாக இருக்கும். பெண் பறவையின் பிடரியில் மட்டும் ஆழ்ந்த சிவப்பு நிறம் காணப்படும். எஞ்சிய உடல் தோற்றம் ஆணைப்போலவே இருக்கும்.[1]

பரவலும் வாழிடமும்

[தொகு]

இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தியானது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முதன்மையாகக் காணப்படுகிறது. ஆனால் மத்திய இந்தியா [2] மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிலும் உள்ளதாக அறியப்படுகிறது. [3] குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த மழை மிகுந்த மூங்கிற் காடுகளிலும் ஏலக்காய் தோட்டங்களிலும் காணப்படுகின்றன. மலைகளில் சுமார் 1200 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன.

நடத்தை

[தொகு]

இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தியானது இணையாகவோ, மூன்று நான்கு பறவைகள் சேர்ந்த ஒரு குடும்பமாகவோ திரியக் காணலாம். மரக்கிளைகளில் தனித்து இரை தேடும்போது ஒன்றுக்கொன்று குரல் கொடுத்தபடி தொடர்பு கொள்ளும். ஒன்றன் பின் ஒன்றாக மரம் விட்டு மரம் பறந்து செல்லும். சீராக இறக்கையடித்துக் காக்கைப் போல பறக்கும் இயல்புடையது. இதன் முதன்மை உணவாக எறும்புகள், கரையான்கள், அவற்றின் முட்டைகள் போன்றவை உள்ளன. ஒரு பறவையின் வயிற்றில் இருந்து தேனீக்கள் கண்டுக்கப்பட்ட குறிப்பு உண்டு.[1]

'ச்சியாங்' என ஒற்றைக் குரலில் கணீர் என குரல் எழுப்பும். இனப்பெருக்க காலத்தில் மரங்களில் அதிர்ச்சி தரத்தக்கதாக தட்டி தட்டி ஒலி உண்டாக்கும் பழக்கம் உண்டு. ஒரு பறவை ஓரிடத்தில் இவ்வாறு தட்டும்போது அதற்கு பதில் கூறுவதுபோல வேறொரு பறவை தொலைவில் தட்டுவது உண்டு.[1]

இவை சனவரி முதல் மே வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. முக்கியமாக பெரிய காய்ந்து பட்டுப்போன மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பெரும்பாலும் ஆண்டுதோறும் ஒரே மரத்தைப் பயன்படுத்துகின்றன.[4] மரங்களில் 14 செ.மீ. விட்டமுள்ள பொந்துகளைக் குடைந்து அதில் இரண்டு வெள்ளை முட்டைகளை இடும். இதன் பொந்தானது 50 முதல் 60 செ. மீ ஆழமுள்ளதாக, மரங்களில் எட்டு முதல் 16 மீட்டர் உயரத்தில் அமைக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 326–328.
  2. Ali, S. (1951). "Discovery of the so-named 'Malabar' Black Woodpecker [Dryocopus javensis hodgsoni (Jerdon) in Bastar (East Madhya Pradesh)"]. J. Bombay Nat. Hist. Soc. 49 (#4): 787–788. https://biodiversitylibrary.org/page/48182351. 
  3. Ralph Camroux Morris (1939). "On the occurrence of the Banded Crake (Rallus e. amuroptera) and the Malabar Woodpecker (Macropicus j. hodgsoni) in the Billigirirangan Hills, S. India". J. Bombay Nat. Hist. Soc. 40 (#4): 763. https://biodiversitylibrary.org/page/47591982. 
  4. Santharam, V. (2003). "Distribution, ecology and conservation of the White-bellied Woodpecker Dryocopus javensis in the Western Ghats, India". Forktail 19: 31–38. http://www.orientalbirdclub.org/publications/forktail/19pdfs/Santharam-Woodpecker.pdf.