உள்ளடக்கத்துக்குச் செல்

இடையமெரிக்க எழுத்துமுறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா, மெசொப்பொத்தேமியா, சீனா, எகிப்து போன்ற பகுதிகளைப் போலவே இடையமெரிக்கப் பகுதியும், உலகில் தனியான எழுத்துமுறைகள் தோன்றி வளர்ந்த மிகச் சில இடங்களுள் ஒன்று. இதுவரை வாசித்தறியப்பட்ட இடையமெரிக்க எழுத்துக்கள் குறியசை (logosyllabic) எழுத்து வகையைச் சேர்ந்தவை. இவை அசையெழுத்துக்களுடன் குறியெழுத்துக்களையும் (logograms) சேர்த்து எழுதப்பட்டு உள்ளன. இவற்றைப் பொதுவாக hieroglyphic எழுத்துக்கள் என்கின்றனர். இடையமெரிக்கப் பகுதியில் ஐந்து அல்லது ஆறு வகை எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தொல்லியல் முறைகள் மூலம் இவற்றின் கால வரிசையை அறிவது கடினமாக இருப்பதால், இவற்றில் எந்த எழுத்து முறையில் இருந்து மற்றவை வளர்ச்சியடைந்தன என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இடையமெரிக்க எழுத்து முறைகளுள் மிகவும் கூடிய அளவுக்கு ஆவணப்படுத்தி உள்ளதும், வாசித்து அறிந்து கொண்டதும், அதனால் உலகின் பரவலாக அறியப்பட்டதும் செந்நெறிக்கால மாயா எழுத்துமுறை ஆகும். தாயக எழுத்துக்களில் எழுதப்பட்டனவும், பின்னர் லத்தீன் எழுத்துக்களில் படியெடுக்கப்பட்டனவுமான பெருமளவு இடையமெரிக்க இலக்கியங்கள் உள்ளன.

ஒல்மெக் எழுத்துக்கள்[தொகு]

62 குறியீடுகளுடன் கூடிய கசுகசல் குற்றி.

தொடக்ககால ஒல்மெக் வெண்களிப் பாண்டங்களில் எழுத்துத் தொகுப்புக்கள் என்று கருதத் தக்க குறியீடுகள் காணப்படுகின்றன. இது, அக்காலத்தில் அமாத்தே வகைத் தாளில் எழுதப்பட்ட தொகுப்புக்களும், வளர்ச்சியடைந்த எழுத்து முறையும் இருந்ததைச் சுட்டுவதாகலாம். "தூதர் நினைவுச்சின்னம்" என அழைக்கப்படும் "லா வெந்தா நினைவுச்சின்னம் 13" போன்ற ஒல்மெக் நினைவுச் சின்னங்களில் காணப்படும் குறியீடுகள், தொடக்ககால ஒல்மெக் எழுத்துக்களாக இருக்கக்கூடும் என நீண்ட காலமாகவே ஆய்வாளர்கள் கருதி வருகிறார்கள். 2002 ஆம் ஆண்டில் சான் ஆன்ட்ரெசு என்னும் இடத்தில் இது போன்ற குறியீடுகளைக் கண்டுபிடித்ததை அடுத்து இந்தக் கருத்து மேலும் வலுப்பெற்றுள்ளது.

2005 ஆம் ஆண்டு செப்டெம்பரில், சயன்சு சஞ்சிகை, "கசுகாசல் கற்பலகை" (Cascajal Block) எனப் பெயரிடப்பட்ட, இதுவரை அறியப்படாத எழுத்துக்களுடன் கூடிய கற்பலகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பற்றி அறிவித்தது. பாம்புக்கல்லால் ஆன இது 62 குறியீடுகளைக் கொண்டது. இதை, ஒல்மெக் இதயப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்கள் கண்டுபிடித்தனர். அதனுடன் கிடைத்த பிற பொருட்களை வைத்து. இக் குறியீட்டுப் பலகையின் காலம் கிமு 900 என மதிப்பிட்டு உள்ளனர். இது சரியாக இருந்தால் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டவற்றுள் மிகப் பழைய இடையமெரிக்க எழுத்து இதுவாக இருக்கும்.

சான் யோசு மொகோட்டேயில் உள்ள நினைவுச்சின்னம் 3. உருவத்தின் கால்களுக்கு இடையில் நிறந்தீட்டிக் காட்டியுள்ள இரண்டு எழுத்துக்கள் அம் மனிதனது பெயரைக் குறிக்கக்கூடும்.

சப்போட்டெக் எழுத்துக்கள்[தொகு]

இடையமெரிக்காவின் இன்னொரு பழைய எழுத்துமுறை சப்போட்டெக் பண்பாட்டினரின் எழுத்துமுறை ஆகும். முன்செந்நெறிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஒல்மெக் நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சப்போட்டெக்குகள் எழுச்சி பெற்றனர். இன்றைய ஒவாக்சாக்கா பகுதியைச் சேர்ந்த இவர்கள், மொன்ட்டே அல்பானைச் சூழத் தமது பேரரசைக் கட்டி எழுப்பினர். இவர்கள் தொடர்பான தொல்லியல் களங்கள் சிலவற்றில் எழுத்துக்களைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றுட் சில குறியீடுகள் காலக்கணிப்புத் தொடர்பானவை. எனினும் இவ்வெழுத்துக்களை இன்னும் வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலிருந்து கீழாக வாசிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இவ்வெழுத்துக்கள், செந்நெறிக்கால மாயா எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது திருத்தம் குறைந்தவையாக உள்ளன. இதனால், இது, பெருமளவுக்கு அசையெழுத்துக்களாக அமைந்த மாயா எழுத்துமுறையை விடக் குறைந்த ஒலியெழுத்துத் தன்மை கொண்டவை என வெட்டெழுத்தியலாளர்கள் கருதுகின்றனர். இக்கருத்துக்கள் இன்னும் ஊகங்களாகவே உள்ளன.

சப்போட்டெக் எழுத்துக்களுடன் கூடிய மிகப் பழைய நினைவுச்சின்னம் "தன்சாந்தேக் கல்" எனப்படும் நினைவுச்சின்னம் 3 ஆகும். இக்கல்லை ஒவாக்சாக்காவில் உள்ள சான் யோசு மொகொட்டேயில் கண்டுபிடித்தனர். இக்கல்லில் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது. இது குருதிக் கறையுடன் இறந்துபோன ஒரு கைதியைக் குறிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இந்த உருவத்தின் கால்களுக்கு இடையே எழுத்து எனக் கருதத்தக்க இரண்டு குறியீடுகள் உள்ளன. இது அம்மனிதனுடைய பெயராக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலில் இது கிமு 500 - 600 வரையான காலப்பகுதிக்கு உரியது எனக் கணித்து, இதுவே இடையமெரிக்காவின் மிகப் பழைய எழுத்து வடிவம் எனக் கருதினர். ஆனால், இந்தக் காலக் கணிப்புக் குறித்து ஐயங்கள் உள்ளன. செந்நெறிக் காலத்தின் பிற்பகுதியிலேயே சப்போட்டெக் எழுத்துமுறை வழக்கொழிந்தது.

பின் ஒல்மெக் அல்லது குறுநில எழுத்துமுறை[தொகு]

கிபி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லா மொசாரா நினைவுக்கல் 1. மூன்று நிலைக்குத்து வரிகளில் எழுத்துக்கள் அமைந்துள்ளன. இது இப்போது மெக்சிக்கோவின் வேராக்குரூசில் உள்ள சலப்பா மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது. வலப்பக்க வரிகள் இரண்டும் பின் ஒல்மெக் எழுத்துக்கள். இடப்பக்க வரி தேதி 8.5.16.9.9 அல்லது கிபி 162 ஐக் குறிக்கிறது.

தெகுவாந்தப்பெக் குறுநிலப் பகுதியில் கிடைத்த குறைந்த எண்ணிக்கையிலான கலைப்பொருட்கள் சிலவற்றில் இன்னொரு வகை இடையமெரிக்க எழுத்துமுறையைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் காலக்கணிப்புத் தொடர்பான தகவல்கள் இருப்பது தெரிகிறது எனினும் இவ்வெழுத்துக்களை இன்னும் எவரும் வாசித்து அறியவில்லை. இவ்வெழுத்துக்களில் எழுதப்பட்ட நீண்ட உரைப்பகுதி, லா மொசாரா நினைவுக்கல் 1 இலும், துக்சுத்லா சிலையிலும் உள்ளன. இவற்றில் இள்ள எழுத்துமுறை மாயா எழுத்துமுறைக்கு மிகவும் நெருங்கியது. ஆனால் சப்போட்டெக் எழுத்துமுறையில் உள்ளது போல் இதனை மேலிருந்து கீழாக எழுதியுள்ளனர். இந்த எழுத்துமுறையில் இருந்தே மாயா எழுத்துமுறை உருவானது என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் மாயா எழுத்துக்களுக்கு, மாயா அல்லாத மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு நினைவுச்சின்னமான சியாப்பா டி கோர்சோ நினைவுக்கல்லிலும் இவ்வகை எழுத்துக்கள் உள்ளன. கிமு 36 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த நினைவுக்கல்லே எழுதிய ஆண்டையும் குறித்து எழுதிய அமெரிக்காவின் மிகப் பழைய நினைவுச்சின்னம் ஆகும். இதில் ஆண்டு நீண்ட காலக்கணக்கு முறையில் எழுதப்பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டில் யோன் யசுட்டர்சன், டெரென்சு கோஃப்மன் என்னும் இருவர் ஒரு கட்டுரையில் இவ்வெழுத்துக்களின் வாசிப்பை முன்வைத்தனர். இதற்காக 2002 ஆம் ஆண்டில் அவர்களுக்கு குகென்கெய்ம் ஆய்வுதவித் தொகையும் கிடைத்தது. அடுத்த ஆண்டில் இசுட்டீபன் ஊசுட்டன் (Stephen Houston), மைக்கேல் டி கோ (Michael D. Coe) என்னும் இருவர், முன்னைய வாசிப்புச் சரியல்ல என்று வாதிட்டனர். அதுவரை காலமும் அறியப்படாதிருந்த முகமூடி ஒன்றின் பின்பக்கத்தில் இருந்த இவ்வகை எழுத்துக்களை 1997 ஆம் ஆண்டின் வாசிப்பை அடிப்படையாகக் கொண்டு வாசிக்க முடியாதிருந்ததை அவர்கள் சான்றாகக் காட்டினர். இந்தச் சர்ச்சை இன்னும் தொடர்ந்து வருகிறது.

அபாச் தக்காலிக், கமினல்யுயு எழுத்துமுறைகள்[தொகு]

மாயா நாகரிகத் தொல்லியல் களங்களான அபாச் தக்காலிக், கமினல்யுயு ஆகியவற்றில் இசப்பப் பண்பாட்டைச் சேர்ந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முன்செந்நெறிக் காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் மிக்சே-சோக்கு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழைய மொழியொன்றைப் பேசியிருக்கலாம் என்றும், கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்கள் இத்தகைய மொழியொன்றுக்கு உரியதாக இருக்கலாம் என்றும், இது மாயா மொழிக்கு உரியது அல்ல என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் சில எழுத்துக்கள் மாயா மொழியின் எழுத்துக்களுடன் ஒத்திருப்பதால் இவற்றை வாசிக்க முடிந்துள்ளது. ஆனால், இவ்வெழுத்துக்களையும் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. இத்தொல்லியல் களங்கள் சிதைவின் உச்ச நிலையில் இருப்பதால் இது போன்ற எழுத்துக்களைக் கொண்ட புதிய தொல்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது. இதனால் இவ்வெழுத்துக்களை வாசிப்பதற்கான வாய்ப்புக்களும் மிகவும் குறைவே.

சாந்தில் பதிக்கப்பட்ட மாயா எழுத்துக்கள். மெக்சிக்கோவின், பலெங்குவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.

மாயா எழுத்துமுறை[தொகு]

மாயா எழுத்துக்கள், முன்செந்நெறிக்காலத்தின் நடுப்பகுதியில் இருந்து மாயா தாழ்நிலப் பகுதியில் உள்ள பேட்டனில் கிடைக்கின்றன. இம்மாயா எழுத்துக்களே இடையமெரிக்காவின் மிகப் பழமையான எழுத்துக்கள் என்ற கருத்தும் சில ஆய்வாளர்களிடையே உள்ளது. மாயா எழுத்துக்கள் எனத் தெளிவாக அடையாளம் காணக்கூடிய எழுத்துக்களோடு கூடிய மிகப் பழைய கல்வெட்டுக்கள் கிமு 200 - 300 ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை. இவற்றுக்கான பழைய எடுத்துக்காட்டுகளாக, குவாத்தாமாலாவின், எல் பெட்டெனில் உள்ள நாச் துனிச், லா கொபனேரித்தா ஆகிய குகைகளில் கிடைத்த நிறந்தீட்டிய கல்வெட்டுக்களைக் குறிப்பிடலாம். மிகவும் விரிவான கல்வெட்டுக்களாகப் பலெங்கு, கோப்பன், திக்கல் ஆகிய தொல்லியல் களங்களில் கிடைத்தவை அமைகின்றன.

மாயா எழுத்துமுறையே இடையமெரிக்காவின் முழுமையாக வளர்ச்சியடைந்த எழுத்துமுறை என்பது பொதுவான கருத்து. இவற்றின் சிறப்பான அழகியல் தன்மையும், இவை முழுமையாக வாசித்து அறியப்பட்டதும் இதற்கான முக்கிய காரணங்கள். மாயா எழுத்துமுறையில், குறியெழுத்துக்களும், அசைக்குறிகளும் சேர்ந்துள்ளன. ஏறத்தாழ 700 எழுத்துக் குறிகளை ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றுள் 75% வரை வாசித்து விளங்கிக்கொள்ளக் கூடியவை. மாயா எழுத்துக்களில் ஏறத்தாழ 7000 உரைகள் உள்ளன.

பின்செந்நெறிக்காலப் பண்பாடுகளின் எழுத்துமுறைகள்[தொகு]

படக்குறிகளுடன் ஒலிப்பியல் குறிக் கூறுகளையும் பயன்படுத்தியிருப்பதைக் காட்டும் அசுட்டெக்க் போட்டுரினி சுவடியின் முதல் பக்கம்.

மாயா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மாயா எழுத்துமுறை தொடர்ந்தும் பயன்பட்டு வந்தது எனினும், இது மிகவும் குறைவே. பின்செந்நெறிக் காலக் கல்வெட்டுக்கள் யுக்கட்டான் தீவக்குறையில் உள்ள சிச்சென் இட்சா, உக்சுமால் போன்ற களங்களில் கிடைத்துள்ளன. ஆனால், இவை செந்நெறிக்கால மாயா கல்வெட்டுக்களைப் போல் சிறப்பாக அமையவில்லை. அசுட்டெக் போன்ற பிற பின்செந்நெறிப் பண்பாடுகள் எழுத்துமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இவர்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு படக்குறிகளைப் பயன்படுத்தினர். எனினும், இவர்கள் ஒலிப்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதில் வளர்ச்சி பெற்றுவந்ததாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, அசுட்டெக் பெயருக்குரிய குறிகள், ஒலிப்பியல் வாசிப்புக்களோடு கூடிய குறியெழுத்துக் கூறுகளைக் கொண்டுள்ளன. எசுப்பானியர்கள் மெக்சிக்கோவைக் கைப்பற்றி இலத்தீன் எழுத்து முறையைப் புகுத்தியதால் இடையமெரிக்க எழுத்துமுறை வளர்ச்சிபெறும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

உசாத்துணைகள்[தொகு]

  • Michael D Coe and Justin Kerr, The Art of the Maya Scribe, Thames and Hudson. 1997
  • Martinez, Ma. del Carmen Rodríguez; Ponciano Ortíz Ceballos; Michael D. Coe; Richard A. Diehl; Stephen D. Houston; Karl A. Taube; Alfredo Delgado Calderón; "Oldest Writing in the New World", in Science, 15 September 2006: Vol. 313. no. 5793, pp. 1610 – 1614.
  • Nielsen, Jesper , Under slangehimlen, Aschehoug, Denmark, 2000.
  • Sampson, Geoffrey; Writing Systems: A Linguistic Introduction, Hutchinson (London), 1985.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]