உள்ளடக்கத்துக்குச் செல்

கசுகாசல் கற்பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
62 எழுத்துக் குறிகளைக் கொண்ட கசுகாசல் கற்பலகை

கசுகாசல் கற்பலகை (Cascajal Block) என்பது, ஒல்மெக் நாகரிகத்துக்கு உரியது எனக் கருதப்படும், இதுவரை அறியப்படாத எழுத்துக்களைக் கொண்ட ஒரு பாம்புக்கல் பலகை ஆகும். இது கிமு முதல் ஆயிரவாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. இதில் உள்ள எழுத்துமுறை புதிய உலகப் பகுதியின் மிகப் பழைய எழுத்துமுறையாக இருக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பிரவுண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசுட்டீபன் டி ஊசுட்டன் (Stephen D. Houston) என்னும் தொல்லியலாளர், இந்தக் கற்பலகையின் கண்டுபிடிப்பு ஒல்மெக் நாகரிகத்தை எழுத்தறிவுடன் தொடர்புபடுத்தி உள்ளது என்றும், ஐயத்துக்கு இடமில்லாமல் ஒரு எழுத்துமுறையைக் காட்டுகிறது என்றும், ஒல்மெக் நாகரிகத்தின் சிக்கல்தன்மையைக் வெளிப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.


கசுகாசல் கற்பலகையை, 1990 ஆம் ஆண்டு, சாலைக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இடிபாட்டுக் குவியல்களிடையே கண்டுபிடித்தனர். இது, பண்டைய ஒல்மெக் நாகரிகத்தின் மையப்பகுதியில் அடங்கிய வேராக்குரூசு தாழ்நிலப் பகுதியில் உள்ள லோமாசு டி தாக்கமிச்சாப்பா என்னும் ஊரில் இருந்து கிடைத்தது. இது உடைந்த வெண்களிப் பாண்டங்களுக்கும், சிற்றுருவங்களுக்கும் நடுவே கிடைத்ததால், இக் கற்பலகை, ஒல்மெக் தொல்லியல் பண்பாட்டின் சான் லாரென்சோ தொனோச்தித்லான் காலகட்டத்தைச் சேர்ந்தது என்று முடிவு செய்தனர். இக் காலகட்டம் கிமு 900 ஆண்டுகளுடன் முடிவடைந்தது என்பதால் இது கிமு 500 களைச் சேர்ந்த மிகப் பழைய சப்போட்டெக் எழுத்துக்களை விட முந்தியது ஆகிறது. மெக்சிக்கோவின், மானிடவியலுக்கும், வரலாற்றுக்குமான தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த தொல்லியலாளர்களான கார்மென் ரொட்ரிகசும், பொன்சியானோ ஓர்ட்டிசும் இதனை ஆய்வுசெய்து அரசின் வரலாற்று அதிகார அமைப்பில் பதிவு செய்துள்ளனர். இது 11.5 கிகி (25 இறா) நிறையும், 36 சமீ x 21 சமீ x 13 சமீ அளவுகளும் கொண்டது. இதன் விவரங்கள் 15 செப்டெம்பர் 2006 இல் வெளிவந்த சயன்சு சஞ்சிகையில் இடம்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுகாசல்_கற்பலகை&oldid=1362738" இலிருந்து மீள்விக்கப்பட்டது