ஆவியாகும் கரிமச் சேர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவியாகும் கரிமச் சேர்வை (Volatile organic compound) என்பது இயல்நிலையிலேயே அதிக ஆவி அழுத்தம் (vapor pressure) இருப்பதன் காரணமாக, குறிப்பிடத்தக்க அளவு ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கக்கூடிய கரிம வேதிச் சேர்வையாகும். பல வகையான கரிமத்தை அடிப்படையாகக் கொண்ட, அல்டிகைடுகள், கீட்டோன்கள், மற்றும் பிற இலகுவான ஐதரோகாபன்கள் ஆவியாகும் கரிமச் சேர்வைகள் ஆகும்.

ஆவியாகும் கரிமச் சேர்வை மூலங்கள்[தொகு]

மிகவும் பொதுவாகக் காணப்படும் ஆவியாகும் கரிமச் சேர்வை பசுங்குடில் வளிமமான மெத்தேன் ஆகும். சேற்று நிலங்கள், ஆற்றல் பயன்பாடு, நெற் சாகுபடி, விறகு போன்றவற்றை எரித்தல் என்பன மெத்தேனின் முக்கியமான மூலங்கள் ஆகும். இயற்கை எரிவளியிலும் மெத்தேன் முக்கியமான ஒரு கூறாக உள்ளது. பொதுவான செயற்கையான ஆவியாகும் கரிமச் சேர்வைகளில் நிறப்பூச்சுகளுடன் கலக்கும் நீர்மங்கள், பலவகையான கழுவு கரையங்கள், நிலநெய் எரிபொருட்களின் சில கூறுகள் போன்றவை அடங்குகின்றன. மரங்களும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளின் ஒரு உயிரியல் மூலமாக உள்ளன. இவை ஐசோபிரீன்கள், தர்பென்கள் போன்ற ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளியேற்றுவது அறியப்பட்டுள்ளது. சுத்திகரிக்காத நிலநெய்யைக் கப்பல்களில் ஏற்றும்போதும் இறக்கும்போதும் பெருமளவு ஆவியாகும் கரிமச் சேர்வைகள் வளியில் கலக்கின்றன. தற்காலத்தில் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்த ஆர்வம் காரணமாக புதிய எண்ணெய்க் கப்பல்களில் நிலநெய்யை ஏற்றி இறக்குவதில் முன்னேற்றமான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டிடங்களின் உள்ளக வளிப் பண்பு தொடர்பிலும், ஆவியாகும் கரிமச் சேர்வைகளின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது. கட்டிடப் பொருட்கள் பலவும், கட்டிடங்களுக்குள் பயன்படுத்தப்படும் பல கருவிகளும் ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளிவிடுகின்றன. பல செயற்கைத் தரை விரிப்புக்கள் அவற்றை ஒட்டுவதற்கான ஒட்டுபொருட்கள், மரப்பொருட்கள், நிறப்பூச்சுகள் போன்றன இவ்வாறான சில கட்டிடப்பொருட்களாகும்.