ஆப்பு வடிகட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆப்பு வடிகட்டி அல்லது சரிவுக் கதிர்வீச்சு வடிப்பான் (Wedge filter) என்பது கதிர் மருத்துவத்தின் போது, கதிர்வீச்சிப் புலத்தினை தேவையின் பொருட்டு மாற்றியமைக்க பயன் படுத்தப்படும் ஆப்பு வடிவிலான வடிகட்டிகளாகும். புலத்தினை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுண்டு. கதிர்புலத்தில், கதிர்வீச்சினை ஏற்றுக் கொள்ளும் பொருட்களை அமைத்து மாற்றுவது ஒரு முறையாகும். இது போன்ற ஆப்பு வடிவிலான ஈயத் தகடுகளை வைத்து, நோயாளியின் மீது விழும் கதிர் வீச்சின் அளவை மாற்றி அமைப்பது நடைமுறையிலுள்ளது. இந்த உலோகத் தகடுகளின் அமைப்பைக் கொண்டு இவைகள் ஆப்பு (Wedge) என்றே அறியப்படுகின்றன. அலுமினியம், காரீயம், செம்பு முதலிய உலோகங்கள் பயன்படுகின்றன.

ஆப்புகள், கதிர் வீச்சுக் கற்றையில் வைக்கப்படும் போது, அதன் தடிப்பு மாறுபடுவதால் அதனை ஊடுருவிச் செல்லும் கற்றையின் செறிவு, மெல்லிய பகுதியில் அதிகமாகவும் தடித்தப்பகுதியில் குறைவாகவும் இருக்கும். ஆப்புகள் இவ்வாறு கதிர் வீச்சினை பகுத்து கடத்துவதால் அவைகள் ஆப்பு வடிகட்டிகள் எனப்படுகின்றன.

ஆப்பு இல்லாத நிலையில் கதிர்வீச்சுப் புலம் சீராக இருக்கும். புலத்தின் செறிவு அதன் விளிம்புகளில் சற்றுக் குறைவாக இருப்பினும் பொதுவாக சீராகவே கணப்படும். ஆப்பினைக் கதிர்வீச்சுக் கற்றையில் வைக்கும் போது கதிர்புலம் மாறுபடுகிறது. இவ்வாறு ஆப்பு உள்ளபோது பெறப்படும் கதிர்வீச்சுப் புலம் ஆப்புப் புலம் (Wedge field) எனப்படும்.

ஆப்புக் காரணி (Wedge factor) என்பது கதிர்வீச்சுப் புலத்தில் மைய அச்சுக் கோட்டில் ஒருகுறிப்பிட்ட தொலைவில், ஆப்பு உள்ளபோது பெறப்படும் கதிர்வீச்சளவிற்கும், அதேதொலைவில் ஆப்பு இல்லாத நிலையில் பெறப்படும் கதிர்வீச்சளவிற்கும் உள்ள விகிதமே ஆப்புக் காரணி எனப்படும்.

ஆப்புக் கோணம் (Wedge angle) என்பது உண்மையில் பயன்படுத்தப்படும் ஆப்பின் கோணமன்று. மாறாக ஒரு குறிப்பிட்ட ஆழத்தில், கிடைமட்டத்திலுள்ள ஓரளவுக் கோடு, ஆப்பின் பயன்பாடு காரணமாக எவ்வளவு பாகை (கோணம்) விலக்கமுறுகிறது என்னும் கோணலளவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பு_வடிகட்டி&oldid=1490298" இருந்து மீள்விக்கப்பட்டது