ஆன்டன் புரூக்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்டன் புரூக்னர்
ஆன்டன் புரூக்னர், (ஜோசப் Büche வரைந்தது.)
பிறப்பு(1824-09-04)4 செப்டம்பர் 1824
ஆன்ஸ்பெல்டன், ஆஸ்திரியா
இறப்பு11 அக்டோபர் 1896(1896-10-11) (அகவை 72)
வியன்னா, ஆஸ்திரியா

ஆன்டன் புரூக்னர் (4 செப்டெம்பர் 1824 – 11 அக்டோபர் 1896) ஒரு ஆஸ்திரிய இசையமைப்பாளர். இவரது இசை பெரும்பாலும், ஆஸ்திரிய-செருமானியப் புனைவியத்தின் இறுதிக் கட்டத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.

வரலாறு[தொகு]

ஆன்டன் புரூக்னர், ஆன்ஸ்பெல்டன் என்னுமிடத்தில் 1824 ஆம் ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் தேதி பிறந்தார். ஒரு பள்ளி ஆசிரியரும், ஆர்கன் இசைக் கலைஞருமான இவரது தந்தையே இவரது முதல் இசையாசிரியர். ஆண்டனுக்குப் 13 வயதாகும் போது அவரது தந்தை இறந்துவிட்டார். அதன் பின் புரூக்னர் சிலகாலம் ஆசிரியருக்கு உதவியாளராகப் பணியாற்றியதுடன், வருமானத்தைக் கூட்டுவதற்காக இரவில் ஊர் நடனங்களுக்கான இசைக்குழுவிலும் வேலை செய்தார். சென். புளோரினில் இருந்த அகஸ்தீனிய மடத்தில் கல்வி பயின்ற இவர், 1851 ஆம் ஆண்டில் அங்கேயே ஒரு ஆர்கன் இசைக் கலைஞராகச் பணியில் அமர்ந்தார். 1855ல், சிமோன் செக்டர் (Simon Sechter) என்பவரிடம் சில இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டோ கிட்ஸ்லர் என்பவரிடம் இசை பயின்றபோது ரிச்சார்ட் வாக்னரின் இசை தொடர்பான அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. 1863 ஆம் ஆண்டு தொடக்கம் ரிச்சார்ட் வாக்னரின் இசைபற்றி விரிவாகக் கற்றார். புரூக்னர் 40 வயது வரை இசைக் கல்வியைத் தொடர்ந்தார். புரூக்னர் சிறுவயது மேதை அல்ல. புரூக்னரின் இசைத் திறமை 40 வயதும் கடந்து சில ஆண்டுகளுக்குப் பின்னரே வெளிப்பட்டது. இது போலவே பரவலான புகழ் இவருக்குக் கிடைத்ததும் அறுபது வயதுக்குப் பின்னரே. இவர் ஒரு தீவிர கத்தோலிக்கர்.

1868ல் செக்டர் இறந்ததும் அவரது இசைக் கோட்பாட்டு ஆசிரியர் பணியைத் தயக்கத்துடன் புரூக்னர் ஏற்றுக்கொண்டார். இக்காலத்தில் சிம்பனிகளை (symphony) எழுதுவதில் இவர் ஈடுபட்டார். எனினும், இவரது இந்த ஆக்கங்கள் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. பின்னர் இவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் பணியேற்றார். இசைக் கோட்பாட்டை பாடநெறியில் சேர்த்துக்கொள்வதற்கு இவர் பெரிதும் முயன்றார். எடுவார்ட் ஹான்சிலிக் என்னும் இசைத் திறனாய்வாளரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த வியன்னா புரூக்னருக்குப் பிடித்த இடமாக இருக்கவில்லை. அக்காலத்தில் வாக்னர், பிராம்ஸ் ஆகிய இரண்டு இசை மேதைகளினதும் ஆதரவாளரிடையே பிணக்கு இருந்து வந்தது. வாக்னரை ஆதரிக்கும் குழுவினருடன் புரூக்னர் சேர்ந்து கொண்டதால் ஹான்சிலிக் அவருக்கு எதிரியானார். ஆனால், புரூக்னரை ஆதரிப்பவர்களும் இருந்தனர். இசைத் திறனாய்வாளர் தியடோர் ஹெல்ம், புகழ் பெற்ற இசை நடத்துனர்களான ஆர்தர் நிக்கிஸ்க், பிராண்ஸ் ஷால்க் போன்றோர் புரூக்னரின் இசையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால், மக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் புரூக்னரின் இசையை மாற்றுவதற்கு ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கிவந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டன்_புரூக்னர்&oldid=2715763" இலிருந்து மீள்விக்கப்பட்டது