ரிச்சார்ட் வாக்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1871 இல் ரிச்சார்ட் வாக்னர்

ரிச்சார்ட் வாக்னர் (22 மே 1813 - 13 பெப்ரவரி 1883) ஒரு ஜேர்மன் இசையமைப்பாளரும், நடத்துனரும், நாடக இயக்குனரும், ஒரு கட்டுரையாளரும் ஆவார். முதன்மையாக இசை நாடகங்களுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். பெரும்பாலான பிற இசை நாடக இசையமைப்பாளர்களைப் போலன்றி இவர் காட்சிகளையும், வசனங்களையும் கூட எழுதினார்.

இளமைக்காலம்[தொகு]

ரிச்சார்ட் வாக்னர் 1813 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி லீப்சிக்கில் உள்ள இல. 3, புரூலில் இவரது பெற்றோருக்கு 9 ஆவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது தந்தையார் கார்ல் பிரீட்ரிக் வாக்னர், லீப்சிக் காவல்துறையில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். ரிச்சார்ட் பிறந்து ஆறு மாதங்களில் அவரது தந்தையார் இறந்துவிட்டார். இதன் பின்னர் ரிச்சர்டின் தாயாரான யொஹன்னா ரோசைன் வாக்னர், ரிச்சார்டின் தந்தையாரின் நண்பரும், நடிகரும், நாடகாசிரியருமான லுட்விக் கேயருடன் வாழ்ந்து வந்தார். 1814 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இருவரும் மணம் செய்து கொண்டு முழுக் குடும்பமும் டிரெஸ்டெனில் உள்ள கேயரின் வீட்டுக்குக் குடிபுகுந்தனர். ரிச்சார்டின் முதல் 14 ஆண்டுகளும் அவர் வில்ஹெம் ரிச்சார்ட் கேயர் என்றே அறியப்பட்டார்.

கேயருக்கு நாடகங்களின் மீது இருந்த ஆர்வம் ரிச்சார்டுக்கும் தொற்றிக் கொண்டது. ரிச்சார்ட் வாக்னர் நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றினார். 1820 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரிச்சார்ட் ட்ரெஸ்டெனுக்கு அண்மையில் உள்ள, போசெண்டோர்ஃப் என்னும் இடத்தில் இருந்த பாஸ்ட்டர் வெட்செல்லின் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கே இவரது இலத்தீன் ஆசிரியரூடாகப் பியானோ பயிற்சியும் கிடைத்தது. ரிச்சார்டுக்கு எட்டு வயதாக இருந்தபோது, 1821 ஆம் ஆண்டில், கேயரும் இறந்துவிட்டார். பின்னர் ரிச்சார்ட் டிரெஸ்டெனில் இருந்த கிராமர் பள்ளியில் சேர்ந்தார். பள்ளிச் செலவுகளை கேயரின் சகோதரர் பொறுப்பேற்றார். ரிச்சார்ட் வாக்னர் ஒரு நாடகாசிரியர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் 1826 இல் பள்ளியில் இவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே இசைத்துறையில் பயிற்சி பெற எண்ணி, இசை பயில்வதற்காக குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்றார்.

1827 ஆம் ஆண்டளவில், இவரது குடும்பம் மீண்டும் லீப்சிக்குக்கே குடி பெயர்ந்தது. 1828 க்கும் 1831 க்கும் இடையில் இவர் இசைப் பயிற்சி பெற்றார். 1828 ஜனவரியிலும் பின்னர் மீண்டும் மார்ச்சிலும் பேத்தோவனின் இசை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதிலிருந்து பேத்தோவனே வாக்னருக்கு அகத்தூண்டலாக இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சார்ட்_வாக்னர்&oldid=2210109" இருந்து மீள்விக்கப்பட்டது