ஆனி சலிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகானா சலிவன்
AnneSullivanMacy.jpg
சோகானா சலிவன் 1886-8-9 ஆண்டுகளில்
பிறப்புசோகானா மேன்சுபீல்டு சலிவன்
ஏப்ரல் 14, 1866(1866-04-14)
பீடிங் மலை, அகவம், மசாசூசெட்சு
இறப்புஅக்டோபர் 20, 1936(1936-10-20) (அகவை 70)
காட்டு மலை, குயின்சு, நியுயார்க்
வாழ்க்கைத்
துணை
சான் ஆல்பர்ட் மேசி (1905–1932)

ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார். மேலும், ஆனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப்பெயர், சோகானா ஆனி மேன்சுபீல்ட் சல்லிவன் மேசி என மூலத்தில் அறியப்பட்டது.[1]

துயர்மிகு துவக்க காலம்[தொகு]

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆனி சலிவனின் பெற்றோர் கல்வியறிவு அற்றவர்களாக இருந்துள்ளனர். இவருக்கு, எட்டு வயதாக இருந்தபோது டிராக்கோமா (Trachoma) என்ற நுண்மணி இமை படல அழற்சி கண் நோயால் பீடிக்கப்பட்டு கண் பார்வை பறிபோனது. அவரது தாயும் அதே (1874) வருடத்தில் இறந்துபோக தனது குடிகார தந்தையோ; 1876-ல் பிப்ரவரி 22-ம் நாளன்று இரண்டு குழந்தைகளையும், நெருக்கடி மிகுந்த சீர்கேடுற்ற, தானசாலையில் சேர்த்துவிட்டார்,[2] அந்த ஆண்டுகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என சுமார் 940 பேர்கள் அவ்விடுதியில் இருந்துள்ளனர். அங்கு போய்ச் சேர்ந்த மூன்றே மாதங்களில் அவரது தம்பி "சிம்மி சலிவன்" (Jimmie Sullivan) பிணியில் அகப்பட்டு இறக்க நேர்ந்தது. பார்வையை இழந்ததால் எழுதப் படிக்கவோ அல்லது வேறு திறன்களையோ கற்றுக்கொள்ளவோ இயலவில்லை. அந்த விடுதியை பார்வையிட வந்த ஒரு அதிகாரி அவரை பாஸ்டனிலுள்ள பெர்கின்சன் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டார்.[3]

கல்வியும், கண்ணொளியும்[தொகு]

1880-ல் அக்டோபர் 7-ம் நாள் தனது 14-வது அகவையில் சலிவன் தன் படிப்பைத் தொடங்கினார், படிப்பில் கவனம் செலுத்தி விரைவில் நல்ல முன்னேற்றம் கண்டார். அங்கு பயின்று முதன் முதலாகப் பட்டம் பெற்ற லாரா பிரிட்ஜ்மான் (Laura Bridgman) என்ற கண் பார்வையற்ற, காது கேளாத பெண்மணியிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்டார். அங்கிருந்த சமயத்தில் இவரது கண்ணில் தொடர்ச்சியாகப் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதனால் குறிப்பிடத்தக்க வகையில் இவரது பார்வை மீட்கப்பட்டது. 20 வயதில் பட்டம் பெற்றார். கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். 1887-ல் சலிவன், ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள 22-வது மாநிலமான அலபாமாவில் இருந்த அவர்கள் வீட்டுக்குச் சென்றார். எலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் எலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார்.[4]

சாதனையும், போதனையும்[தொகு]

கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார்.[5] அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். 1888-ல் ஹெலனை, ஐக்கிய அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான பாஸ்டனுக்கு அழைத்துச் சென்று பெர்கின்சன் பள்ளியில் சேர்த்து அவருடனே தங்கி, கற்பித்துவந்தார்.

ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் (Harvard University) கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "afb.org|Anne Sullivan Macy Biography (1866 - 1936)". 2018-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. afb.org|Anne's Formative Years (1866-1886)|Entering Tewksbury Almshouse
  3. perkins.org|Anne Sullivan|Early challenges
  4. perkins.org|Anne Sullivan|Life-changing moment
  5. "afb.org|Anne's Letter to Sophia C. Hopkins (April 5, 1887)". ஏப்ரல் 20, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 23, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. biography.com|Anne Sullivan Biography|Educator (1866–1936)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_சலிவன்&oldid=3543241" இருந்து மீள்விக்கப்பட்டது