ஆண்டிப்பட்டி மலை, பழனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிபட்டி மலையில் 2013 மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள்.

ஆண்டிப்பட்டி மலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருகே அமைந்துள்ளது. பழனிக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையில் 2013 ஆம் ஆண்டில் சங்க காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஓவியங்கள் சுமார் 3000 ஆண்டு பழமையான சங்ககாலத் தமிழர்கள் வரைந்த ஓவியங்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு 10க்கும் மேற்பட்ட ஓவியங்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

வரைவு[தொகு]

சுண்ணாம்பு, மூலிகை மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சங்ககாலத் தமிழர்களின் காதலையும், வீரத்தையும் அடிப்படையாக கொண்ட அவர்களின் வாழ்வியலை இந்த ஓவியம் விளக்குகிறது. மேலும் இந்த மலையின் அருகில் சங்க காலத்தமிழர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், நகக்குறி ஓடுகளும் போன்றவையும் கிடைத்துள்ளன.

ஆண்டிபட்டிமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு ஓவியம். யானையை பழக்கப்படுத்துவதுபோல் உள்ளது

மேலே உள்ள படத்தில் உள்ள ஓவியம்[தொகு]

இது சங்ககாலக் குரவை ஆட்டத்தைக் குறிக்கும் படம். குரவை ஆட்டம் கை கோத்து ஆடும் ஆட்டம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து கை கோத்து ஆடும் பாங்கும் உண்டு.

கீழே உள்ள படத்தில் உள்ள ஓவியம்[தொகு]

அரசன் ஒருவன் யானைமீது இருக்கும் காட்சியைக் காட்டும் ஓவியம் இது. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் களிற்றின்மீது இருந்து பகைவை அழித்தான். [1] சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி கருவூருக்கு யானைமேல் வந்தபோது அவனது யானை மதம் பிடித்து ஓடியது. [2] இது போன்ற ஓர் வரலாற்றைக் காட்டும் ஓவியம் இது.

உசாத்துணை[தொகு]

  1. புறநானூறு 14,15 ஆம் பாடல்கள்
  2. புறநானூறு 13
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிப்பட்டி_மலை,_பழனி&oldid=3784074" இலிருந்து மீள்விக்கப்பட்டது