ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
![]() |
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறினான். [1]. இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக 35 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி வந்தான்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பற்றிப் பதிற்றுப்பத்து தரும் செய்திகள்[தொகு]
- தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேள் ஆவிக்கோமான் தேவி (மகள்). [2]
- தண்டாரணியம் பகுதியில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பார்ப்பார்க்கு வழங்கச் செய்தான். (இதனால் இந்தச் சேரலாதனை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என வழங்கினர்.) அவற்றுடன் கபிலை எனப்படும் பசுமாடுகளையும் சேர்த்து வழங்கினான். தன் தந்தை ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரையும் சேர்த்து அவர்களுக்கு வழங்கினான். இவ்வாறு பார்ப்பார்க்கு வழங்கியதால் வானவரம்பன் எனத் தன் பெயர் விளங்கும்படிச் செய்தான். [3] சான்றோர் எனப்படும் போர் வீரர்களுக்குக் கவசம் போல் விளங்கியதாலும் இவனை ‘வானவரம்பன்’ என்றனர். [4]
- இவனது தலைநகர் நறவு என்னும் ஊர். [5]
- வில்லோர் மெய்ம்மறை, [6] சான்றோர் மெய்ம்மறை [7] என்றெல்லாம் இவன் போற்றப்படுவது இவனது போராற்றலை வெளிப்படுத்துகிறது..
- போரிட்டு மழவர் வலிமையைக் குன்றும்படி செய்தான். [8]
- குழந்தையைப் பேணுவது போல நாட்டுமக்களைப் பாதுகாத்தான். [9]
- இவனது நாட்டுப் பரப்பு கீழைக்கடலையும் மேலைக்கடலையும் தொட்டது. [10]
- மனைவியைப் பிரிந்து நெடுங்காலம் போரில் ஊடுபட்டிருந்தான். [11]
- வள்ளல் என இவனைப் பலரும் புகழ்ந்தனர். [12]
- இவனது செல்வம் பந்தர் என்னும் ஊரில் பாதுகாக்கப்பட்டிருந்தது. [13]
- பாணர் விழாவில் முழவுக்கு ஏற்ப ஆடாத இவன் போர்க்கள முழவிசைக்கு ஆடுவான். [14] போர்க்களத்தில் துணங்கை ஆடுவான். [15]
- இவனைப் பாடிய புலவர் காக்கை பாடினியார் என்னும் பெண்புலவர். எனவே பாடலுக்குப் பரிசாக, அவர் தனக்கு வேண்டிய அணிகலன்கள் செய்துகொள்வதற்காக ஒன்பது ‘கா’ நிறையுள்ள பொன்னை வழங்கினான். மற்றும் நூறு ஆயிரம் காணம் பணமும் கொடுத்தான். மேலும் அவரைத் தன் அவைக்களப் புலவராகவும் அமர்த்திக்கொண்டான். [16]
குறிப்புகள்[தொகு]
- ↑ செல்லம், வே. தி., 2002, பக். 91
- ↑ பதிற்றுப்பத்து பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து 58
- ↑ துவ்வாநறவின் சாய் இனத்தானே – பதிற்றுப்பத்து 60
- ↑ பதிற்றுப்பத்து 59
- ↑ பதிற்றுப்பத்து 58
- ↑ பதிற்றுப்பத்து பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து பதிகம்
- ↑ பதிற்றுப்பத்து 51
- ↑ பதிற்றுப்பத்து 52
- ↑ பதிற்றுப்பத்து 54
- ↑ பதிற்றுப்பத்து 55
- ↑ பதிற்றுப்பத்து 56
- ↑ பதிற்றுப்பத்து 57
- ↑ பதிற்றுப்பத்து பதிகம்
உசாத்துணைகள்[தொகு]
- புலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
- செல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).