அ. முத்துக்கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. முத்துக்கிருஷ்ணன் (A. Muthukrishnan) தமிழ் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். 1973-ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். தென்னிந்தியாவின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் தனது இளம் பருவம் வரை கோவா, ஹைதராபாத், மும்பை நகரங்களில் வசித்தார். 1986-இல் மதுரைக்கு பயணமானது இவரது குடும்பம். அக்காலகட்டத்தில் மதுரையில் அவர் படித்த துறையில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் மதுரையில் வேறு துறைகள் சார்ந்த வேலைகளை பார்க்கத் தொடங்கினார், அதன்பின்னர் சொந்தமாகப் பல சிறு குறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டார்.

படிப்பு[தொகு]

1988 ஆம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த அவர் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பில் 1991 ஆம் ஆண்டு இளநிலை படித்து முடித்தார். பல்வேறு தொழில்கள் மற்றும் வேலை பார்த்த முத்துகிருஷ்ணன், இளம்வயதில் பிற மாநிலங்களிலேயே பள்ளிப் படிப்பை பயின்றதால் 1993 ஆம் ஆண்டுதான் தமிழைக் கற்றார் . சாதி, தீண்டாமை, விளிம்புநிலை மக்கள், சூழலியல், சிறுபான்மையினர்  மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுவாகவே இந்த சமூகத்தில் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான மக்கள் நோக்கி பயணப்பட்டார். உலகமயம், பொருளாதாரம், மனித உரிமைகள் என இன்னும் தன் படைப்பு வெளியை விரிவாக்கினார். எழுத்தோடு நில்லாமல் தனது சமூக செயற்பாடுகளையும் தொடங்கினார்.[சான்று தேவை]

சமூக செயற்பாடுகள்[தொகு]

தமிழைக் கற்பதற்காகப் பல்வேறு எழுத்தாளர்களைச் சந்தித்த முத்துகிருஷ்ணன் அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு இடதுசாரிகள் மற்றும் சுற்றுச்சூழலியல் அறிஞர்களைச் சந்தித்து பல்வேறு மக்கள் பிரச்சினைகளை அறிந்து கொண்டார். உலக அளவில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து தொடர்ந்து வருகிறார்[1] தமிழ் நாளிதழ்களிலும் மாதாந்திர இதழ்களிலும் வார இதழ்களிலும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல், தீண்டாமை, அரசியல், விளிம்புநிலை மக்கள், வாழ்வியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் பெரு நிறுவனங்களால் எங்கெல்லாம் மக்கள் சுரண்டப்படுகிறார்களோ பாதிக்கப்படுகிறார்களோ அங்கே எல்லாம் சென்று உண்மை நிலையை அறிந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பந்தமாக குஜராத் மாநிலத்திற்கும் விதர்பா விவசாயிகளின் தற்கொலை பற்றி அறிய மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரித்துக் கொன்றது தொடர்பாக அறிய காந்தமால் நகரத்திற்கும் போஸ்கோ திட்டத்தைப் பற்றி அறிய ஒடிசா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள உண்மை நிலையை அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்காக நேரில் கள ஆய்வு செய்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.[சான்று தேவை]

பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக ஏற்படுத்தப்படும் உண்மை கண்டறியும் குழுவில் ஒரு உறுப்பினராக பல பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்துள்ளார். எட்டு நாடுகளின் வழியே 10000 கி.மி தரை வழியே பயணித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு சென்ற சர்வதேச குழுவில் இடம் பெற்றவர்.[2] ஜோர்தானில் நிகழ்ந்த பாலஸ்தீன நிலமீட்பு போராட்டத்தில் பங்கு கொண்டவர். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை முதலாவதாக தமிழில் தந்தவர்.

மொழிபெயர்ப்பு நூல்கள்[தொகு]

இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "அப்சலைத் தூக்கிலிடாதே" மற்றும் "தோழர்களுடன் ஒரு பயணம்" என்ற இரு நூல்களையும் "குஜராத் 2002 இனப்படுகொலை", "அமைதிக்காகப் போராடுவோம்", "மதவெறி" மற்றும் “குரலின் வலிமை” நூல்களையும் தமிழில் மொழிபெயர்துள்ளார். புரட்சியாளர் சே குவாரா பற்றிய ஆவணப்படத்தை 2002 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டதன் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை பரவலாக பெற்றுள்ளார். ஸ்டார் விஜய் தொலைகாட்சியின் நீயா நானா மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூகம் சார்ந்த உரையாடல்களில் தொடர்ந்து தன் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.[சான்று தேவை]

இவரது நூல்கள்[தொகு]

  • குரலின் வலிமை - வாசல் பதிப்பகம்
  • அமைதிக்காக போராடுவோம் - வாசல் பதிப்பகம்
  • ஒளிராத இந்தியா - தமிழினி பதிப்பகம்
  • குஜராத் 2002 - வாசல்/தலித் முரசு வெளியீடு
  • சாவேஸ் - வாசல் பதிப்பகம்
  • மதவெறி- உயிர்மை பதிப்பகம்
  • உலகம் நமக்காக - தமிழினி பதிக்கபகம்
  • நஞ்சாகும் நீதி - உயிர்மை பதிப்பகம்
  • மலத்தில் தோய்ந்த மானுடம் - உயிர்மை பதிப்பகம்
  • உழவின் திசைவழி - வாசல் பதிப்பகம்
  • மாயவலை - வாசல் பதிப்பகம்
  • தூங்காநகர நினைவுகள் - விகடன் பிரசூரம்
  • போராட்டங்களின் கதை - விகடன் பிரசூரம்

பசுமை நடை[தொகு]

2010 ஆம் ஆண்டு மதுரை யானைமலையைக் காக்கும் பொருட்டு முத்துகிருஷ்ணன் ஆரம்பித்த "பசுமை நடை" என்ற பயணத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.[3][4][5] ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று ‘பசுமை நடை’ பயணம் நடைபெறுகிறது. இதுநாள் வரையிலுமான பசுமை நடையில் தொகுக்கப்பட்ட ஆவணங்களை ‘மதுரை வரலாறு- சமணப் பெருவெளியின் ஊடே...’ என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130729204432/http://www.amuthukrishnan.com/putthagangal.html. 
  2. "The catalyst for a cause". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/The-catalyst-for-a-cause/article15457063.ece. பார்த்த நாள்: 22 பிப்ரவரி 2011. 
  3. "Walking the heritage trail". timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-07-21. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2012.
  4. "Vandalised hills and vanished history". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2013.
  5. "வரலாற்றை சேகரிக்கும் பசுமை நடை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._முத்துக்கிருஷ்ணன்&oldid=3701196" இலிருந்து மீள்விக்கப்பட்டது