அல்மித்ரா படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மித்ரா படேல்
2021 இல் அல்மித்ரா படேல்
பிறப்பு1936
படித்த கல்வி நிறுவனங்கள்பாம்பே பல்கலைக்கழகம்
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், அமெரிக்கா
அறியப்படுவதுசுற்றுச்சூழல் மற்றும் மாசு எதிர்ப்பு செயல்பாடு

அல்மித்ரா படேல் (பிறப்பு 1936) ஒரு இந்திய சுற்றுச்சூழல் கொள்கைக்கான வழக்குரைஞரும், சுற்றுச்சூழல் மற்றும் மாசு எதிர்ப்பு ஆர்வலரும் ஆவார். [1]

கல்வி[தொகு]

அல்மித்ராவின் தந்தை ஒரு தொழிலதிபராவார். அவரது தாயார் ஒரு கல்விச் சங்கத்தை நிறுவி அதன்மூலம் பல்வேறு சமூக, பொதுச்சேவைகளில் ஈடுபாடு கொண்டவர். எனவே அல்மித்ரா சிறு வயதிலிருந்தே கல்வி, சமூகம் மற்றும் வணிகம் சார்ந்த செயற்பாடுகளால் சூழப்பட்டிருந்தார், மேலும் இவரும், இவரது உறவுப்பெண்ணும் தான், பார்ன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் படிப்பைப் பயின்ற முதல் பெண்களாவர்.

இவரது தந்தையின் விருப்பப்படி மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (எம்ஐடி) சென்று இளங்கலை பொறியியல் படித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தொழிலான பீங்கான் பொருட்கள் தயாரிப்பில் முதுகலை பட்டத்தையும் மூன்றே ஆண்டுகளில் முடித்துள்ளார், இதன் மூலம் இந்தியாவில் இருந்து முதன்முதலாக இந்தக்கல்லூரியில்(எம்ஐடி) பொறியியல் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் 1959 ம் ஆண்டில் பெற்றுள்ளார். அடுத்த மூன்று தசாப்தங்களில், அவர் உராய்வுகள், அதிக வெப்பதைத்தாங்கும் வார்ப்புகள் மற்றும் சிமென்ட் ஓடு தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.

சமூக செயல்பாடுகள்[தொகு]

1970 ம் ஆண்டுகளிலிருந்து அல்மித்ரா, ஆசிய சிங்கங்களை வேட்டையாடுவதில் இருந்து காப்பாற்றுதல், மரங்களை வெட்டுவதில் இருந்து காப்பாளராக இருப்பது, அல்சூர் ஏரியைச் சுற்றுசூழல் அழிவிலிருந்து காப்பாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வீடுகளைக் கட்டுதல் உள்ளிட்ட பொது மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் பங்கெடுத்துள்ளார். மேலும் அல்மித்ரா சுற்றுச்சூழல் கொள்கை வகுப்பதிலும், அதற்காக வாதிடுவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.தற்போதும் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சிந்தனைக் குழுக்கள் மற்றும் அரசாங்க கொள்கைக் குழுக்களில் திடக்கழிவு மேலாண்மை சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். [2]

1991 ஆம் ஆண்டில், அல்மித்ரா சுகாதாரமான நகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கான தீர்வைக் கண்டறிந்து, அந்த தீர்வினை ஒன்றிய, மாநில அரசுகள் அவர்களின் பொறுப்பிற்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்த அறிவுறித்தியுள்ளார்.இவர் 1994-1995 ம் ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட இந்திய நகரங்களைப் பார்வையிட்டு அவற்றின் கழிவுகளை முறையாக பராமரிக்க அந்நகரின் புறநகர்ப் பகுதிகள் அல்லது அணுகு சாலைகளைத் தவிர வேறு எங்கும் இடங்களில்லை என்பதைக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. [3]

1996 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நகராட்சி திடக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை எதிர்த்து அல்மித்ரா படேல் தொடுத்த பொதுநல வழக்க்கின் காரணமாக, இந்திய அளவில் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் உருவாக்கப்பட்டு,அதன்படி கழிவுகள் மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

1984 ஆம் ஆண்டு தில்லி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டிலேயே முழுக் கொள்ளளவைத் தாண்டிய காஜிபூர் குப்பை கிடங்கு குறித்து விரிவான ஆய்வு நடத்தியுள்ள அல்மித்ரா படேல், குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டுவதுதான் இங்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்று கண்டறிந்துள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarma, Deepika (2013-03-13). "Kothanur’s own Renaissance woman" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/bangalore/kothanurs-own-renaissance-woman/article4504052.ece. 
  2. "Almitra Patel: The First Indian Woman Engineer at MIT". sheforsuccess.com. 13 April 2016. Archived from the original on 24 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  3. "A woman’s battle to keep waste from ending up in landfills". 2013-08-15. https://www.thehindu.com/news/cities/chennai/a-womans-battle-to-keep-waste-from-ending-up-in-landfills/article5023257.ece. 
  4. Rehman, Mumtaz (2021-07-11). "Ghazipur Landfill: A Mountain Of Waste Almost The Height Of The Qutub Minar". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மித்ரா_படேல்&oldid=3673068" இலிருந்து மீள்விக்கப்பட்டது