உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு கவின்கலைக் கல்லூரி, கும்பகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கவின்கலைக் கல்லூரி, கும்பகோணம்

அரசு கவின்கலைக் கல்லூரி (Government College of Fine Arts, Kumbakonam) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஓவியக் கல்லூரியாகும். தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி உள்ளது.[1]

துவக்கம்

[தொகு]

சென்னை மாகாண அரசாங்கத்தால் 1887 ஆம் ஆண்டு கைவினை தொழில் பள்ளியாக கும்பகோணம் சக்கரபாணி கோவில் அருகில் அய்யன் தெருவில் முக்கண்ண ஆச்சாரி, குப்புசாமி அய்யர் ஆகியோரால் துவக்க காலத்தில் வழிநடத்தப்பட்டது. பின்னர் கும்பகோணம் நகராட்சியால் சித்திர கலாசாலை என்ற பெயரில் சுமார் 80 ஆண்டு காலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர் காமாட்சி ஜோசியர் தெருவில் கூடுதல் வகுப்பறைகளுடன் வண்ணக்கலை, சிற்பக்கலை, விளம்பரக்கலை துறைகள் உருவாக்கப்பட்டன. 1965 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் தொழில் வர்த்தக இயக்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.[2]

வளர்ச்சி

[தொகு]

1973 முதல் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு முதல் இரண்டு ஆண்டுகள் அனைத்து துறைகளுக்குமான ஒருங்கிணைந்த அடிப்படை கல்வியாகவும், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மூன்று துறைகளுக்குமான சிறப்புப் பாடமாக அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் பட்டயம் வழங்கப்பட்டது. பின்பு சுவாமிமலை முதன்மைச்சாலையில் 1979ம் ஆண்டு முதல் காவிரிக்கரையில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டிட வளாகத்தில் அரசு கலைத் தொழில்கல்லூரியாக இயங்கி வந்தது. 1982ஆம் ஆண்டு முதல் கல்லூரி சேர்க்கைக்கான அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பாகவும் மாணவர்களின் சேர்க்கை இருபதிலிருந்து முப்பதாக உயர்த்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு முதல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுஇளம் கவின் கலை பட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன. அந்த ஆண்டு முதல் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 1997 ஆம் ஆண்டு முதல் வண்ணக்கலை, சிற்பக்கலை ஆகிய துறைகளில் முதுகவின்கலை உயர் கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. 2003-04ஆம் கல்வியாண்டு முதல் கல்லூரி சேர்க்கைக்கான அடிப்படைக் கல்வித் தகுதி மேல்நிலைப் பள்ளிக் கல்வியாக (+2) மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 50-இலிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது.[2]

முன்னாள் மாணவர்கள்

[தொகு]

கோபுலு, சில்பி, வீர சந்தானம், விசுவம், ராபர்ட் வில்லியம்சு, கங்காதரன், கலைகங்கா ஆகியோர் இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் ஆவர்.[2]

முதல்வர்கள்

[தொகு]

பிற்காலத்தில் இந்நிறுவனமானது எஸ். கிருஷ்ணாராவ், எஸ்.தனபால், கே. சீனிவாசலு, எல். முனுசாமி, சாந்தராஜ், பி. பி. சுரேந்திரநாத், எஸ். ஜி. வித்யா சங்கர் ஸ்தபதி, விஸ்வநாதன், ஆர். பி. பாஸ்கரன், கோபால், கே. சி. நாகராஜன், எம். பாலசுப்ரமணியன், வி. சந்திரசேகரன், மனோகர் நடராஜ் மற்றும் பி. எஸ். தேவநாத் போன்ற புகழ்பெற்ற முதல்வர்களால் நிர்வகிக்கப்பட்டது. இவர்களின் முயற்சியால் இந்நிறுவனம் வளர்ந்து தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ளது.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி: இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள், பாம்புகளும் வரும்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
  2. 2.0 2.1 2.2 2.3 கலை பண்பாட்டுத் துறை, அரசு கவின் கலைக்கல்லூரி, கும்பகோணம்

வெளி இணைப்புகள்

[தொகு]