உள்ளடக்கத்துக்குச் செல்

அரங்கநாதர் கோவில், பொமோனா, நியூ யார்க்

ஆள்கூறுகள்: 41°11′23.0410″N 74°03′22.04″W / 41.189733611°N 74.0561222°W / 41.189733611; -74.0561222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரங்கநாதர் கோவில், பொமோனா, நியூ யார்க்
அமைவிடம்
நாடு:அமெரிக்கா
மாநிலம்:நியூ யார்க்
அமைவு:எண் 8 லேடன்டவுன் சாலை, பொமோனா, நியூ யார்க் 10970
ஆள்கூறுகள்:41°11′23.0410″N 74°03′22.04″W / 41.189733611°N 74.0561222°W / 41.189733611; -74.0561222
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://www.ranganatha.org/

அரங்கநாதர் கோவில், பொமோனா, நியூ யார்க் நியூ யார்க் மாநிலம், ராக்லேண்ட் கவுண்டி (County of Rockland), பொமோனா கிராமம் (Pomona village) லேடன்டவுன் சாலையில் (Ladentown Road) அமைந்துள்ள பாரம்பரிய மிக்க இந்து கோவிலாகும். இராமானுசரின் விசிட்டாத்வைத சித்தாந்தத்தின் படியும் அகோபில மட மரபுகளின் படியும், இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள ஒரு பெரிய வைணவத்தலம் இதுவெனலாம். திருவரங்கத்தைப் போலவே இக்கோவிலிலும் பஞ்சராத்திர ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தபடுகின்றன.[1] [2] [3]

அமைவிடம்

[தொகு]

பொமோனா என்பது நியூயார்க் நகரின் புறநகர்ப் பகுதியாகும். இவ்வூரின் மக்கள் தொகை 3,824 ஆகும்.[4] அமைதி தவழும் பொமோனா கிராமம் பியர் மலையின் (Bear mountain)அடிவாரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஹட்சன் பள்ளத்தாக்கில் (Hudson valley) அமைந்துள்ளது.[5]

கோவில் அமைப்பு

[தொகு]

இக்கோவில் வளாகம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர் மண்டபமும் காணப்படுகிறது.[6] மதிற்சுவருக்கு வெளியே அமைந்துள்ள திருச்சுற்றில் வலம் வரலாம். கோவிலின் முன்பு கொடிமரம், பலிபீடம் ஆகியன ஒரே நேர்கோட்டில் மூலவரை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. கோவிலினுள்ளே நுழைந்ததும் இடப்புறம் கைகால் அலம்பும் இடம் வருகிறது. இதனையடுத்து பெரிய மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் தெய்வ சன்னதிகள் அமைந்துள்ளன.[2]

திருவரங்கம் பிரணவாகார விமானம்

இக்கோவிலின் மூலவர் அரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார். மூலவர் சிலை 10 அடி நீளமும் 10 மெட்ரிக் டன் எடையும் கொண்டது. திருவரங்கத்தைப் போலவே இக்கோவிலிலும், கருவறையின் மேல் பொன்வேய்ந்த பிரணவாகார (ஓம்கார வடிவமான) விமானம் என்னும் அரங்க விமானத்தைக் காணலாம்.[2][3] அரங்க விமானம் வேதிகை, கிரீவம், சிகரம், கலசம் (துாபி) ஆகிய அங்கங்களுடன் அமைந்துள்ளது. விமானத்தில் இடம்பெறுள்ள நான்கு கிரீவ கோட்டங்களுள்,மகரதோரண அலங்கரிப்புப் பெற்ற தென்முக கிரீவகோட்டத்தில் பரவாசுதேவர் அருள்பாலிக்கிறார். எனவே இந்த விமானத்தினை பரவாசுதேவர் விமானம் என்றும் அழைப்பர்.[2][7]

இக்கோவிலில் ரங்கநாயகி தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.[2][3]

இக்கோவிலில் சிறீ தேவி பூதேவியுடன் சீனிவாசர், லட்சுமி அயகிரீவர், மகாலட்சுமி, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், சீதாலட்சுமி, அனுமன் உடனான இராமர், வேணுகோபாலர் கருடன், ஆகிய தெய்வங்களுக்கும் ஆழ்வார்கள், இராமானுசர், சுவாமி தேசிகன், ஆகிய ஆச்சரியார்களுக்கும் சன்னதிகள் உள்ளன.[2][3]

கோவில் முகவரி - திறந்திருக்கும் நேரங்கள்

[தொகு]
  • முகவரி: எண் 8 லேடன்டவுன் சாலை, பொமோனா, NY 10970
  • திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8:00 முதல் மதியம் 12:00 வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
  • சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 வரை.[5]

கோவில் பூசைகள்

[தொகு]

கோவிலில் உள்ள தெய்வங்களுக்கான தினசரி வழிப்பாட்டு சடங்குகள் நாள்தோறும் அர்ச்சகர்களால் நடத்தப்படுகின்றன.

தினசரி பூசைகள்

[தொகு]

நாள்தோறும் நடைபெறும் பூசைகள் இவை: காலை: விசுவரூப சேவை (எல்லா சன்னதிகளிலும் திருப்பள்ளியெழுச்சி, சுப்ரபாதம்), பிரபந்த வேத பராயணம், அர்ச்சனை, திருநட்சத்திரத்தின்படி திருமஞ்சனம், ஆரத்தி, மாலை: விஷ்ணு சகசரநாமம், மகாலட்சுமி சகசரநாமம் அர்ச்சனை, மகாலட்சுமி பூசை.[2] [3][8]

வார பூசைகள்

[தொகு]

வாரம் முழுவதும் பல்வேறு பூசைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வெள்ளிகிழமையன்றும் சிறப்பு மகாலட்சுமி பூசை நடைபெறுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சுப்ரபாத சேவை மற்றும் தரிசனமும், அயகிரீவர், அரங்கநாதர், இலட்சுமி நரசிம்மர், இராமர், கிருட்டினர்,வெங்கடேசுவரர், மகாலட்சுமி, ஆண்டாள், சக்ரத்தாழ்வார், கருடன் சன்னதிகளில் தேசிகர் சுலோகம் கூறி வழிபாடும் நடைபெறுகிறது. அனுமன் வடைமாலை பூசை, சீனிவாச கல்யாண உற்சவம் ஆகியனவும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தான கோபாலகிருட்டிண பூசை மற்றும் ஓமம் நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சத்தியநாராயணா பூசை நடைபெறுகிறது.[2][3]

யதா-சக்தி கருத்துடன் ஒரு தனித்துவமான கோயில்

[தொகு]

யதா சக்தி (ஆங்கிலம்: Yathāśakti; சமசுகிருதம் यथाशक्ति) ஒருவரின் சக்திக்கேற்ப எது இயலுமோ அதைத் தருவது என்று பொருள். இக்கோவிலில் அனைத்து நாட்களிலும், அனைத்து பூசைகள், அனைத்து அபிசேகங்கள், திருக்கல்யாண உற்சவங்கள், சத்திய நாராயண பூசை ஆகியவற்றை செய்விப்பதற்கு எவ்விதக் கட்டணமோ, நுழைவுச் சீட்டோ, நன்கொடையோ பெறுவதில்லை. பிரசாதங்களுக்கும் கட்டணம் இல்லை. பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்ப இயன்ற தொகையைத் தரலாம். இவ்வாறு தர இயலவில்லை என்றாலும் மேற்குறிப்பிட்ட பூசை, அபிசேகம், முதலியவற்றை இக்கோவில் நடத்தித்தரும்.[9][8]

கோவில் உற்சவங்கள் (மத விழாக்கள்)

[தொகு]

இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்சவம், பவித்ரோற்சவம், அத்யயன உற்சவம், நம்மாழ்வார் மோட்சம் ஆகிய உற்சவங்கள் (திருவிழாக்கள்) சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம், கிருட்டிண செயந்தி, இராம நவமி, ஆச்சார்யரின் பிறந்த நாள், தீபாவளி போன்ற பல உற்சவங்களும் பண்டிகைகளும் செவ்வனே நடத்தப்படுகின்றன.[1][2][3]

அறங்காவலர் குழு

[தொகு]

இக்கோவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.[10]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Temple Festivals Sri Ranganatha Temple
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Sri Ranganatha Temple, Pomona, New York Voice over by vishalakshi Raman. Sri Vanamala YouTube
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Sri Ranganatha Temple, Pomona, NY. Virtual Temple Tour Sri Ranganatha Temple
  4. Pomona village, New York United States Census Bureau
  5. 5.0 5.1 Temple Timing & Location Sri Ranganatha Temple
  6. Sri Ranganatha Temple in NewYork ஸ்ரீ ரங்கநாத கோயில் Temple in USA Pomona Temple MLP'S Ulagam YouTube
  7. திருவரங்கம் கோவிலின் பொன்வேய்ந்த ரங்க விமானம் கி.ஸ்ரீதரன். தினமலர் செப்டம்பர் 09, 2015
  8. 8.0 8.1 Daily Pooja Schedule Sri Ranganathan Temple
  9. Pooja Services Sri Ranganatha Temple
  10. Board Members Sri Ranganathan Temple