அனைத்துலக மலைகள் ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2002 ஆம் ஆண்டு அனைத்துலக மலைகள் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு நவம்பரில் கூடிய ஐக்கிய நாடுகள் பொது அவையில் 54 ஆவது அமர்வில் இதற்கான தீர்மானம் (இல. A/RES/53/24) நிறைவேற்றப்பட்டது. மலைப்பகுதிகளின் பேண்தகு வளர்ச்சியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்ட உதவுமாறும், அந்த நோக்கத்துக்கான செயற்பாடுகளை ஆதரிக்குமாறும் நாடுகளையும், பன்னாட்டு அளவிலும் உள்நாட்டிலும் இயங்கும் மக்கள் அமைப்புக்களையும் தீர்மானம் கேட்டுக்கொண்டது[1].

நோக்கம்[தொகு]

நிகழ் காலத்திலும், வருங்காலத்திலும் மலைவாழ் சமூகங்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் முகமாக, மலைப் பகுதிகளின் பேண்தகு வளர்ச்சியை ஊக்குவிப்பதும், மலை வாழ் மக்களது பண்பாடுகளையும், மரபுகளையும் மதித்துப் போற்றுவதுமே இந்தக் கடைப்பிடிப்பின் பரந்த நோக்கம் ஆகும். இதன் கீழ் பல குறிக்கோள்கள் இனங்காணப்பட்டன. அவை:

  • மலைப் பகுதி மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதும், மலைப் பகுதிச் சூழலைப் பாதுகாப்பதும்.
  • மலைச் சூழியல்மண்டலங்கள், அவற்றின் இயக்கம், செயற்பாடுகள் என்பன குறித்தும், உணவு, நீர் உட்பட முக்கியமான பொருட்களையும், சேவைகளையும் வழங்குவதில் மலைகளின் பங்கு குறித்தும் விழிப்புணர்வையும், அறிவையும் கூட்டுதல்.
  • பொது மக்களிடையே கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கும், பன்னாட்டளவில் கூடிய விழிப்புணர்வை தூண்டுவதற்கும், ஊடகப் பரப்புரைகள், வெளியீடுகள், பயிற்சிப் பொதிகள் போன்றவற்றை உருவாக்குதல்.
  • மலைகளின் பேண்தகு வளர்ச்சிக்கும், அவற்றின் பாதுகாப்புக்கும் உகந்த கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்துதல்.
  • மலைவாழ் சமூகங்களின் பண்பாட்டு மரபுகளையும், அவர்களின் உள்ளூர் அறிவையும் மேம்படுத்திப் பாதுகாத்தல்,
  • மலைப்பகுதிகளில் மக்களிடையே அடிக்கடி ஏற்படும் முரண்பாடுகள் குறித்துக் கவனம் எடுப்பதும், அமைதி ஏற்படுத்துவதும்.

குறிப்புக்கள்[தொகு]

  1. ஐக்கிய நாடுகள் பொது அவை தீர்மானம் A/RES/53/24

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]