உள்ளடக்கத்துக்குச் செல்

அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாம் அடியெடுத்து நடந்து ஓர் இடத்தை அடைகிறோம். அதுபோலப் பாட்டு அடியெடுத்து நடந்து ஒரு பொருளைத் தரும். நாம் நடக்கும் தப்படிகள் நீண்டும் குறைந்தும் இருக்கும். அதுபோலப் பாட்டின் அடிகளும் இருக்கும்.

எழுத்தெண்ணிக்கை அளவுகோல்

[தொகு]

தொல்காப்பியம் ஒவ்வோர் அடியிலும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளது. அவற்றை 17 வகையான நிலம் எனக் குறிப்பிடுகிறது.

  • எழுத்தெண்ணும் மரபு
அடியில் உள்ள எழுத்துக்களை எண்ணும்போது ஒற்று, ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய எழுத்துக்கள் எண்ணப்படுவதில்லை.

17 நில அடிகள்

[தொகு]

குறளடி

[தொகு]

குறளடி 4 முதல் 6 எழுத்துக்களைக் கொண்டது. எடுத்துக்காட்டுகள்:[1]

4 எழுத்து அடி

தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து
நேர்ந்து வாமனை நினைமின்
சேர்ந்த வல்வினை தேய்ந்தக லும்மே

இந்தப் பாடலில் உள்ள முதலடி 4 எழுத்துக்களைக் கொண்டது.
5 எழுத்து அடி

குன்று கொண்டு நின்ற மாடு
பொன்ற வந்த மாரி
சென்று காத்த திறலடி தொழுமே

இந்தப் பாடலில் உள்ள முதலடி 5 எழுத்துக்களைக் கொண்டது.
6 எழுத்து அடி

ஆறு சூடி நீறு பூசி
ஏறும் ஏறும் இறைவனை
கூறு நெஞ்சே குறைவிலை நினக்கே

இந்தப் பாடலில் உள்ள முதலடி 6 எழுத்துக்களைக் கொண்டது.

சிந்தடி

[தொகு]

7 முதல் 9 எழுத்துக்கள் கொண்டது சிந்தடி.[2]

7 எழுத்து அடி

போது சாந்தம் பொற்ப வேந்தி
ஆதி நாதர் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாரே. [3]

இந்தப் பாடலில் உள்ள முதலடி 7 எழுத்துக்களைக் கொண்டது.
  • 8 எழுத்து அடி

தடந்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூம்
களிறுவளர் பெருங்கா டாயினும்
ஒளிபெரிது சிறந்தன் றளியவென் நெஞ்சே

இந்தப் பாடலில் உள்ள முதலடி 8 எழுத்துக்களைக் கொண்டது.

9 எழுத்து அடி - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி [4]

நேரடி

[தொகு]

10 முதல் 14 எழுத்து அமைந்த அடி நேரடி[5]

  • 10 எழுத்து அடி - காமம் செப்பாது கண்டது மொழிமோ [6]
  • 11 எழுத்து அடி - தாமரை புரையும் காமர் சேவடி [7]
  • 12 எழுத்து அடி - நாயுடை முதுநீர்க் கலித்த தாமரை [8]
  • 13 எழுத்து அடி - அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி [9]
  • 14 எழுத்து அடி - :யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை [10]

நெடிலடி

[தொகு]

15 முதல் 17 எழுத்து அமைந்த அடி நெடிலடி [11]

  • 15 எழுத்து அடி - ஏற்றுவலன் உயரிய எருமருள் அவிர்சடை [12]
  • 16 எழுத்து அடி - விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் [13]
  • 17 எழுத்து அடி - தேன்தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம் [14]

கழிநெடில் அடி

[தொகு]

18 முதல் 20 எழுத்து அமைந்த அடிகளைக் கொண்டது கழிநெடிலடி.[15]

எடுத்துக்காட்டுகள்
  • 18 எழுத்து - கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் [16]
  • 19 எழுத்து - நெடுங்கொடிய நிமிர்தேரும் நஞ்சுடைய புகல்மறவரும் [17]
  • 20 எழுத்து - அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர்நிற்றலின் [18]

சீர் எண்ணிக்கை அளவுகோல்

[தொகு]

அமுதசாகரர் எனவும், அமிர்தசாகரர் எனவும் குறிப்பிடப்படும் ஆசிரியர் (காலம் 1070-1120) தமது யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்களில் ஒவ்வோர் அடியிலும் அமந்துள்ள சீர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். இவரே தாம் முதலில் எழுதிய அமுதசாகரம் என்னும் யாப்பிலக்கண நூலில் தொல்காப்பியத்தை நெறியில் பாடல் அடி ஒவ்வொன்றிலும் உள்ள எழுத்துக்களின் அளவுகோலாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து
    ஏறிய நிலத்தே குறளடி என்ப. தொல்காப்பியம் செய்யுளியல் 35
  2. ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே
    ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான. தொல்காப்பியம் செய்யுளியல் 36
  3. யாப்பருங்க விருத்தி, மேற்கோள். பக்கம் 799
  4. குறுந்தொகை 2
  5. பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே
    ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே. தொல்காப்பியம் செய்யுளியல் 37
  6. குறுந்தொகை 2
  7. குறுந்தொகை கடவுள் வாழ்த்து
  8. அகநானூறு 61
  9. பெரும்பாணாற்றுப்படை 1
  10. அகநானூறு16
  11. மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே
    ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. தொல்காப்பியம் செய்யுளியல் 38
  12. புறநானூறு 56
  13. குறுந்தொகை 101
  14. மதுரைக்காஞ்சி 3
  15. மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே
    ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. தொல்காப்பியம் செய்யுளியல் 39
  16. புறநானூறு 55
  17. புறநானூறு 55
  18. புறநானூறு 167