அச்யுத் பட்வர்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்யுத் பட்வர்தன்
பிறப்புபெப்ரவரி 5, 1905(1905-02-05)
அகமத்நகர், மகாராட்டிரம், இந்தியா
இறப்பு5 ஆகத்து 1992
வாரணாசி, இந்தியா
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்

அச்யுத் பட்வர்தன் (Achyut Patwardhan) (1905 பிப்ரவரி 15 - 1992 ஆகத்து 5) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், அரசியல் தலைவரும் மற்றும் இந்திய சோசலிசக் கட்சியின் நிறுவனரும் ஆவார். மேலும் இவர் சமுதாயத்தில் அடிப்படை மாற்றம் மனிதனிடமிருந்து தொடங்குகிறது என்று நம்பிய ஒரு தத்துவஞானியாகவும் இருந்தார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அச்யுத்தின் தந்தை ஹரி கேசவ பட்வர்தன் அகமத்நகரில் ஒரு செல்வாக்குமிக்க சட்ட பயிற்சியாளராக இருந்தார். அவருக்கு ஆறு மகன்கள் இருந்தனர். அவர்களில் அச்யுத் இரண்டாவது மகனாவார். அச்யுத் நான்கு வயது சிறுவனாக இருந்தபோது, ஓய்வு பெற்ற துணை கல்வி ஆய்வாளர் சீதாராம் பட்வர்தன் என்பவர் இவரை தத்தெடுத்தார். சீதாராம் 1917 இல் இறக்கும்போது அச்யுத்திற்கு கணிசமான சொத்தை விட்டுச் சென்றார்.

அகமத்நகரில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர், அச்யுத் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அச்யுத்தின் சொந்த மற்றும் வளர்ப்பு தந்தைகள் இருவரும் பிரும்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்னி பெசண்ட் நிறுவிய கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜி.எஸ்.அருண்டேல், முனைவர் அன்னி பெசன்ட் மற்றும் பேராசிரியர் தெலங் ஆகியோருடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். அவர்களின் செல்வாக்கு இவரை துணிச்சலான, தியான மற்றும் துறவியாக மாற்றியது. இது இவரது வாழ்நாள் பிரம்மச்சரியத்திற்கான காரணமாகவும் இருக்க வேண்டும்.

சமூக நடவடிக்கைகள்[தொகு]

முதுகலைத் தேர்ச்சி பெற்ற பின்னர் கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக 1932 வரை பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் இவர் மூன்று முறை இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று சோசலிச தலைவர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்பு கொண்டார். இவர் கம்யூனிச மற்றும் சோசலிச இலக்கியங்களைப் படித்தார். 1932 இல் காந்திஜியின் சட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த பத்து ஆண்டுகளில் இவர் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

காங்கிரசில் சேருவதில் இவரது நோக்கம், இவரது கூட்டாளிகளான ஆச்சார்ய நரேந்திர தேப், ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் பிறரைப் போலவே, காங்கிரசையும் சோசலிசத்திற்கு மாற்றுவதாகும். 1934 ஆம் ஆண்டில், இவரும் சிறையில் இருந்த இவரது கூட்டாளிகளும் காங்கிரசுக்குள் இருந்தே சோசலிச நோக்கங்களுக்காக உழைக்கும் நோக்கில் காங்கிரசு சோசலிசக் கட்சியை உருவாக்கினர். 1936 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவால் காங்கிரசு பணிக்குழுவில் அச்யுத் இணைத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் இவர் சில மாதங்களில் அப்பதவியைவிட்டு வெளியேறினார். அதன்பிறகு அதில் சேர நேருவின் அழைப்பை மறுத்தார். 1935 முதல் 1941 வரை இவர் சிபீர்சை (இளைஞர்களுக்கான கல்வி முகாம்கள்) ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு சோசலிசத்தை கற்பிக்கவும், அவர்களை சோசலிச நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தவும் செய்தார்.

1942 இல் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். கைது செய்வதைத் தவிர்க்க, 1945-46ல் இவர் மறைந்து வாழ்ந்தார். முக்கியமாக சதாரா மாவட்டத்தில் ஒரு இணையான அரசாங்கத்தின் இயக்கத்தை இவர் வழிநடத்தினார். அதன்பிறகு இவரை சதாராவின் சிங்கம் என்று பலர் அழைத்தனர். இணையான அரசாங்கம் பயங்கரவாத முறைகளால் நிறுவப்பட்டது. அது 'பத்ரி சர்க்கார்' என்று அழைக்கப்பட்டது. 'பத்ரி' என்பது அரசாங்க ஊழியர்களுக்கும், இணையான அரசாங்கத்தைத் தடுக்கத் துணிந்த மக்களுக்கும் வழங்கப்படும் கொடூரமான மற்றும் சித்திரவதைக்குரிய தண்டனைகளுக்கு வழங்கப்பட்ட பெயராகும்.

இந்த தண்டனைகள் மக்களை வாழ்நாள் முழுவதும் முடக்கின. கும்பல்கள் தலைவர் நானா பாட்டீல் என்பவரது தலைமையில்  இணையான அரசாங்கம் அரசு அலுவலகங்கள், கருவூலங்கள் மற்றும் ரயில்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொள்ளையை நடத்தியது. இந்த அட்டூழியங்களில் சில கூட்டாளிகள் அரசியல் அல்லது சோசலிசம் பற்றி சிறிதளவு அறிந்திருந்த வெறும் நம்பிக்கையற்றவர்கள். அரசு இயந்திரங்கள் முற்றிலுமாக முடங்கிய கிராமங்களுக்குள் இவர்கள் ஊடுருவினர்.

இந்த இயக்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு அச்யுத் தனிப்பட்ட முறையில் சேவை செய்தார். அதன்பிறகு இவர் ஒரு பிரபலமான நாயகனாகனார். காங்கிரசு சோசலிச கட்சியின் ஆண்டு அமர்வுகள் 1934 முதல் நடைபெற்றது. ஆனால் காங்கிரசுக்குள் இருந்து சோசலிசத்தை வளர்ப்பது அச்யுத்துக்கும் இவரது சக ஊழியர்களுக்கும் கடினமாக இருந்தது. 1947இல் அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி இந்திய சோசலிச கட்சியை உருவாக்கினர். 1950 இல், அச்யுத் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் பனாரசு இந்து கல்லூரியில் பேராசிரியராக 1966 வரை பணியாற்றினார். அதற்குப்பின், இவர் புனேவில் முற்றிலும் ஒதுங்கிய மற்றும் ஓய்வு பெற்ற வாழ்க்கையை நடத்தினார். பொதுவெளியில் தோன்றவில்லை, கடிதப் பரிமாற்றங்களுக்கு கூட பதிலளிக்கவில்லை.

வெளியீடுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. SINGH, KULDIP (22 August 1992). "Obituary: Achyut Patwardhan". The Independent. https://www.independent.co.uk/news/people/obituary-achyut-patwardhan-1541827.html. பார்த்த நாள்: 17 May 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்யுத்_பட்வர்தன்&oldid=2984555" இருந்து மீள்விக்கப்பட்டது