அங்கவை சங்கவை
அங்கவை சங்கவை ஆகியோர் சங்க காலத்தில் வாழ்ந்த இரு சகோதரிகள் ஆவர். இவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியமான புறநானூற்றில் கிடைக்கிறது.[1]
"முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை ஆவர். மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்தபோது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்" என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அரசன் பாரிசாலன் மகள்கள்
[தொகு]அவ்வை மணம் முடித்து வைத்த அங்கவை சங்கவை என்போர் சங்ககாலப் பாரிமகளிர் அல்லர்.
சங்ககாலப் புலவர் கபிலர் பாரிமகளிரை அரசர்கள் யாரும் திருமணம் செய்துகொள்ளாததால் திருக்கோவலூரில் வாழ்ந்த பார்ப்பான் ஒருவனிடம் ஒப்படைத்தார் என்று புறநானூற்றுக் கொளுக் குறிப்பு ஒன்று குறிப்பிடுகிறது.
அங்கவை சங்கவை இருவரும் பாரிசாலன் என்பவனுடைய மகள்கள். பாரிசாலன் சிங்கள மன்னன். இதனைத் தெரிவிக்கும் பாடல்:
சிங்களம் எனும் தேயம் முழுதாளும் மன்னவன்
- சிறந்த பேர் பாரிசாலன்
- செய்யும் மெய்த் தவத்தால் உதித்து நல் குணம் மேவும்
- சிறுமி அங்கவை சங்ஙகவை
மங்கைர்கள் இருவரை வளர்த்து எடுத்து அவ்வையார்
- மா முகக் கணபதி கையால்
- மண ஓலை எழுதி மும் மன்னரைக் கோவலூர்
- வரவழைத்து அறுகு இடற்குத்
தங்கிப் பணந்துண்ட மரமாகியே பழம்
- தர நதிப் பெண்ணை நெய் பால்
- தானாய் வரப் பாடியப் பெண்களைத் தெய்விகத்
- தலைவன் மணம் புரியவே
அங்கு உதவும் அவ்வை தொழும் ஐங்கரன் தந்தையே
- அருள் பெறு வசந்தராயர்
- அண் நாவினில் துதி செய் உண்ணாமுலைக்கு உரிய
- அண்ணாமலை தேவனே.
இது அண்ணாமலைச் சதகத்தில் உள்ள பாடல். [2]
திரைப்பட கதாபாத்திரமும் விமர்சனமும்
[தொகு]ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்ற இரு கதாப்பாத்திரங்கள் கேலிப்படுத்தப்பட்டது குறித்த தமிழ் அறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த படத்தில் கறுப்புச்சாயம் பூசப்பட்ட, வரம் தேடும் பெண்களாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். தமிழ் பெண் ஒருவரை விரும்பும் கதாநாயகப் பாத்திரம் இந்த பெண்களை கிண்டல் செய்வதாக காட்சிகள் அமைந்திருந்தன. படத்தில் இந்தப் பெண்களின் தகப்பனாக நடித்ததற்காக புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் பாப்பையா பெரும் விமர்சனத்துக்கு உள்ளானர். இவரைச் சிலர் புறக்கணிக்கவும் செய்தனர்.[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2".
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 357
- ↑ "அங்கவை, சங்கவை சர்ச்சைக்கு நடிகர் விளக்கம்".