ஔவையார் (அங்கவை சங்கவை மணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔவையார் பலரில் ஒருவர் பாரிமகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தவர். இத்திருமணம் பற்றிக் கூறும் பாடல்கள் சில உள்ளன.

சங்கப்பாடல் செய்தி[தொகு]

பாரி சங்க கால அரசன். பாரிமகளிர் அவனது மக்கள். “அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்” எனத் தொடங்கும் பாரிமகளிரின் பாடல் ஒன்று சங்கப்பாடல்களில் [1] இடம் பெற்றுள்ளது. அவர்களது பெயர் அங்கவை, சங்கவை என்னும் குறிப்பு சங்கப்பாடல்களில் இல்லை. பாரியிடம் வாழ்ந்த புலவர் கபிலர். போரில் பாரி மாண்டான். கபிலர் பாரிமகளிரை அழைத்துச் சென்றார்.[2] பார்ப்பாருக்கு மணம் முடித்துவைக்க அழைத்துச் செல்கிறார் [3] விச்சிக்கோ பாரிமகளிரை மணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான் [4] இருங்கோவேள் என்பவனும் மறுத்துவிட்டான் [5] எனவே கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பானுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுத் தான் வடக்கிருந்து உயிர் துறந்தார்.[6] இவை சங்கப்பாடல் தரும் செய்திகள்.

கல்வெட்டுச் செய்தி [7][தொகு]

கபிலர் பாரிமகளிரை மலையமானுக்குக் கொடுத்தார் என்பது கல்வெட்டுச் செய்தி.[8] கபிலர் மலையமானைப் பாடிய நான்கு சங்கப்பாடல்கள் உள்ளன.[9]

ஔவையார் பற்றிய கதைகள்[தொகு]

  • திருமணப் பாடல்களின் தன்மை
அங்கவை சங்கவை திருமணம் பற்றிப் கூறும் பாடல்கள் கொச்சைத் தமிழில் உள்ளன. இவற்றின் காலம் 9 அல்லது 10ஆம் நூற்றாண்டு எனலாம்.
  • நாயன்மாரோடு ஔவையார்
சுந்தரரும் சேரமானும் கைலாயம் சென்றபோது ஔவையார் ஒருவர் விநாயகர் அகவல் பாடிக் கயிலாயம் சென்றதாக ஒரு கதை உண்டு. இந்த நூலின் காலம் 14ஆம் நூற்றாண்டு.
  • ஔவையார் துறவு
காரைக்கால் அம்மையாரைப் போல ஔவையார் சிவபெருமானை வேண்டி, இளமையிலேயே மூப்பு வடிவம் பெற்று வாழ்ந்து வந்தாராம்.[10]

அங்கவை சங்கவையும் ஔவையாரும்[தொகு]

  • மழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து பேணினர்.
  • ஔவையார் அவர்களின் கைகளுக்குக் கடகம் செறியும்படி பாடினார்.
  • அவர்களின் திருமணத்துக்கு விநாயகன் ஓலை எழுதி அனுப்பினான்.
  • சேரனுக்கு ஔவை அனுப்பிய அழைப்பு

"சேரலர்கோன் சேரன் செழும்பூங் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக ! உட்காதே—பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
சங்கவையை யுங்கூடத் தான்."

  • சோழன் 18ஆம் நாள் வர வேண்டும் என்று ஓலை அனுப்பினார்

"புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து—நகாதே
கடுக வருக ! கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டாம் நாள்."

  • பாண்டியன் சீர் கொண்டுவருக

"வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே—தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியஈர் ஒன்பான்நாள்
ஈண்டு வருக ! இயைந்து."

  • திருமணத்துக்கு வந்திருந்த சேர சோழ பாண்டியர் பனம்பழம் கேட்டனர். அக்காலம் பழம் பழுக்கும் பருவ காலமில்லை. ஆயினும்,நிறைமொழி மாந்தரான ஒளவையார் பாடியதும் காய் காய்த்து, பழம் பழுத்து மூன்று பனந்துண்டம் கிடைத்தது. அவர் பாடியது கீழ் வருமாறு

"திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துகின் றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.”

  • பெண்ணை ஆற்றில் பாலும் நெய்யும் பெருகி வரப் பாடிப் பெற்று விருந்தளித்தார்.
  • இந்தத் திருமணத்தை முன்னிட்டு, திருக்கோவலூர் முழுவதும் பொன்மாரி பொழியுமாறு ஔவை பாடினார். பொன்னும் பொழிந்தது.

"கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனை மாமலையன் கோவல்—பெருமணத்தில்
நன்மாரி தான்கொண்ட நன்னீர் அதுதவிர்த்துப்
பொன்மாரி யாகப் பொழி.”

இந்தச் செய்திகளைக் கூறும் தனித்தனிப் பாடல்கள் ஔவையார் பாடல் என்னும் குறிப்புடன் உள்ளன. பிற்காலத்தில் அங்கவை சங்கவை திருமணம் பற்றிக் கூறுகின்ற அண்ணாமலையார் சதகம் திருமண ஓலை எழுதிய கணபதியின் தந்தை ‘பாரிசாலன்’ எனக் குறிப்பிடுகிறது.

தெய்வீகன்[தொகு]

தெய்வீகன் பெண்ணைநதிப் புராணத்தில் வரும் கதைப் பாத்திரம்.

ஔவை பெயரில் காணப்படும் தனிப்பாடல்கள் இப்படிப்பட்ட கதைக் கற்பனைகளை உருவாக்கியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. புறம் 112
  2. புறம் 114
  3. புறம் 113
  4. புறம் 200
  5. புறம் 201, 202
  6. புறம் 236
  7. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  8. “முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” – இராசராச சோழன் கல்வெட்டு.
  9. புறம் 121, 122, 123, 124
  10. புலவர் புராணம்