உள்ளடக்கத்துக்குச் செல்

அக்னெசு ஆஃப் காட் (நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்னெசு ஆஃப் காட் (Agnes of God) என்ற நாடகம் ஜான் பீல்மெயரால் எழுதப்பட்டு ஐக்கிய அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டதாகும். இது உண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. இக்கதையில் அனுபவமற்ற அருட்சகோதரி ஒருவருக்கு குழந்தை பிறப்பதும் அதனை தான் கன்னியாகவே கருவுற்றதாக அவர் கூறுவதும் இடம் பெறுகின்றது. புலனாய்வின் போது உளவியலாளர் ஒருவரும் கன்னிமடத்தின் தலைமை அருட்சகோதரியும் சண்டை இடுகின்றனர். இந்த நாடகத்தின் தலைப்பு இலத்தீனச் சொற்றொடரான அக்னசு தேய் (கடவுளின் ஆட்டுக்குட்டி) என்பதையொட்டி சொல்விளையாட்டாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தைத் தழுவி 1985ஆம் ஆண்டில் அக்னெசு ஆஃப் காட் (திரைப்படம்) என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது; இதில் ஜேன் ஃபோன்டா, ஆன் பான்கிராஃப்ட் மற்றும் மெக் டில்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

நிறைய வசனங்கள் உள்ள இந்த நாடகம் மூன்று முதன்மை ஆளுமைகளைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது: மார்த்தா, உளவியலாளர்; மதர் சுப்பீரியர் (தலைமை சகோதரி); மற்றும் அக்னெசு, பயிற்சி சகோதரி. மேடையில் வேறு நடிகர்கள் இல்லை. இவை மூன்றுமே நடிகர்களுக்கு மிகவும் சிரமமான வேடமாக கருதப்பட்டது.[1] நாடகத்தில் மார்த்தா மிகவும் உணர்ச்சிகரமாக நடித்திருப்பார்; இவர் எப்போதுமே மேடையில் இருப்பார்; சில நேரங்களில் ஆதரவாளராகவும் சில நேரங்களில் எதிராளியாகவும் சில நேரங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் சில நேரங்களில் நம்பிக்கைத் தேடும் தீர்வாளராகவும் நிறைய வசனம் பேச வேண்டியிருக்கும். அக்னெசும் தலைமை சகோதரியும் அவ்வப்போது மட்டுமே பேசுவர்; மடத்தில் நடந்த நிகழ்வுகளை பின்னோக்கி காட்டவே இவர்கள் பயன்பட்டனர். தலைமை சகோதரி தற்கால நடைமுறை உலகை ஏற்றுக்கொண்டாலும் அதிசயங்கள் நடக்கும் வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துவார். அக்னெசு அழகான ஆனால் சரியாக வளர்க்கப்படாதவராக சித்தரிக்கப்படுகிறார்; அவரது பின்னணியால் பகுத்தறிவுடன் சிந்திக்க இயலாதவராக உள்ளார்.

கத்தோலிக்கர் அல்லாத மகளிரிடையே இந்த நாடகம் பெரிதும் பாராட்டப்பட்டது; இது மகளிர் எதிர்கொள்ளும் நன்னெறி, சமய பிரச்சினைகளை காட்டுவதாக இவர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில்

[தொகு]

இந்தியாவில் தேசிய நிகழ்த்துகலை மையத்தின் மூலமாக கைசத் கொத்வால் இந்த நாடகத்தை மும்பையில் செப்டம்பர் மாதக் கடைசியில் நிகழ்த்த திட்டமிட்டிருந்தார். இதில் அவந்தி நக்ரால் அக்னெசாகவும், அனாஹிதா ஊபிராய் மார்த்தா லிவிங்ஸ்டனாகவும் மகபானு-மோதி கொத்வால் மதர் மிரியமாகவும் நடித்திருந்தனர். இந்த நாடகத்தின் வசனங்கள் சமய உணர்வுகளை காயப்படுத்துவதாக கத்தோலிக்க சமயசார்பற்ற மன்றமும் (CSF) இந்திய கத்தோலிக்கப் பேராயர்’ மாநாடும் (CBCI) தடை விதிக்கக் கோரினர். இதனால் கடைசி நிமிடத்தில் நாடக அமைப்பாளர்கள் விலக்கிக் கொண்டனர். இது குறித்து எழுந்த ஊடக, பொது விவாதங்களை அடுத்து மும்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஷைனா பாதிக்கப்பட்டோரிடையே உரையாடினார். இதன் பின்னர் அக்டோபர் 6, 2015 அன்று நாடகம் அரங்கேற்றப்பட்டது.[2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Theatre Factory looks at faith, failings with 'Agnes of God'". 2010-10-26. Archived from the original on 2012-09-13. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18..
  2. "'Agnes of God': Play facing ban threat opens to cheers, applause in Mumbai - See more at: http://indianexpress.com/article/india/india-others/agnes-of-god-play-facing-ban-threat-opens-to-cheers-applause-in-mumbai/#sthash.Y5Sp2Mnn.dpuf". தி இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2015. {{cite web}}: External link in |title= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]