அகப்புறம், புறப்புறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கியங்களில் கண்ட செய்திகள் இலக்கண நூல்கள் அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துக்கொண்டுள்ளன. அவற்றுள் அகத்திணையில் உள்ள துறைகளில் சிலவற்றை அகப்புறம் என்றும், புறத்திணையில் உள்ள செய்திகளில் சிலவற்றைப் புறப்புறம் என்றும் பாகுபடுத்திக் காண்கின்றன. [1]

அகப்புறம்[தொகு]

கைக்கிளை, பெருந்திணை இரண்டும் அன்பொடு புணர்ந்த ஐந்திணையாக இல்லாமல் ஒருதலைக் காமமாகவும், பொருந்தாக் காமமாகவும் இருப்பதால் இவற்றை அகப்புறம் என்றனர். [2] வீரசோழியம் என்னும் நூலின் உரையில் உள்ள கலிவெண்பாவாலான மேற்கோள் பாடல் ஒன்று அகப்புறம் 10 வகைப்படும் என்று கூறுகிறது.[3]

  1. காந்தள் என்னும் மடலேறுதல்
  2. காமம் மிகுதியால் வெறியாடும் வள்ளி
  3. காதலனுடன் சுரத்தில் நடக்கும்போது வருந்துதல்
  4. சுரத்தில் தலைமகன் போரிட்டு மாண்டபோது தலைமகள் அடையும் கவலை
  5. போர்ப்பாசறையில் இருக்கும்போது தன் மனைவியை விரும்பல்
  6. கணவன் பாசறையில் இருக்கும் காலத்தில் மனைவி அவனை விரும்பல்
  7. இளம் மனைவியை விட்டுவிட்டுக் கணவன் துறவு மேற்கொள்ளல்
  8. இப்படித் துறந்த தலைமகனை ஊர்மக்கள் பழி தூற்றல்
  9. துறவு பூண்டு தாபத நிலை மேற்கொண்ட தலைமகனை விட்டுவிட்டு மனைவி நீங்கல்
  10. துறவு காலத்தில் தாபதன் தன் மனைவியை விரும்புதல்

புறப்புறம்[தொகு]

தொல்காப்பிய அகத்தியம் உடையார்[4] வாய்ப்பியனார்[5] என்னும் இலக்கண நூலார் இருவர் வாகைத்திணை, பாடாண் திணை, பொதுவியல் படலம் மூன்றும் புறப்புறத் திணைகள் என்று கூறுகின்றனர்.

மேற்கோள்[தொகு]

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 435, 436
  2. கைக்கிளை என்றா பெருந்திணை என்றாங்கு
    அத்திணை இரண்டும் அகத்திணைப் புறனே
    என்பது பன்னிரு படலம் நூற்பா
  3. ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டும் ஆயுங்கால்
    காந்தள் கலிமடன்மா ஏறுதல், காமம் மிக்கு
    ஆய்ந்தவர் வள்ளி வெறியாட்டம், வாய்ந்த
    சுரநடை மாந்தர் வருத்தம், சுரனுள்
    முதுபாலை தன்னை மொழியின் மது மலர்த்தார்க்
    காவலன் வீயக் கவன்றது அது ஆகும்,
    பாசறை முல்லை தலைமகன் பாசறைக்கண்
    மாசறு மாதரை உள்ளுதல், மாசற்ற
    இல்லவள் முல்லையும் அஃதேயாம், சொல்லுங்கால்
    குற்றிசைக் கோல் வளையாளைத் தலைமகன்
    முற்றத் துறந்த துறவாம், குறுங்கலி
    முற்றத் துறந்த தலைமகனை முன்னின்று
    பொற்றொடி மாதர் பழிதூற்றாம், குற்றம் தீர்
    தாபதம் காதல் தலைமகனை நீங்கிய
    மேவரு மாதர் நிலையாகும், மேவருஞ்சீர்
    நீக்கப்பட்டாளை உவந்த தலைமகன்
    பார்த்துறூஉம் தன்மை அதுவாம் தபுதாரம்
    பத்தும் அகத்தின் புறம்

  4. வாகை பாடாண் பொதுவியல் திணை எனப்
    கோகிய மூன்றும் புறப்புறப் பொருளே
  5. மது விரி வாகையும் பாடாண் பாட்டும்
    பொதுவியல் படலமும் புறம் ஆகும்மே
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகப்புறம்,_புறப்புறம்&oldid=3458940" இலிருந்து மீள்விக்கப்பட்டது