அகத்திய விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோக்கியோவிலிருந்து கனோபசு

அகத்திய நட்சத்திரம் அல்லது அகத்திய விண்மீன் என்றழைக்கப்படும் கனோபசு (canopus) தென்திசையிலுள்ள கரைனா, அர்கோ நவீசு என்ற விண்மீன் தொகுதியின் பொலிவுமிக்க விண்மீன் ஆகும் (α Carinae); வானில் தெரியும் விண்மீன்கள் அனைத்திலும் மிருகவியாதரை அடுத்து இரண்டாவது பொலிவுமிக்க விண்மீன் இதுவே. இதன் தோற்ற ஒளியளவு -0.72 ஆகவும் தனி ஒளியளவு -5.53 ஆகவும் உள்ளது.

இது F வகை நிறமாலை வரிசையிலுள்ள மஞ்சள்-வெள்ளை விண்மீனாகும்; ஆனால் காண்பதற்கு வெண்ணிறமாகவே தெரியும். வானத்தின் தொலை-தென் பகுதியில் −52° 42' (2000) விலக்கத்தில் இது தெரியும். தொலை-தென் பகுதியில் இது உள்ளதால், நிலநடுக்கோட்டிலிருந்து 37°18' -க்கு மேல் வடக்கே உள்ளவர்களுக்கு இது பெரும்பாலும் தெரியாது; ஆனால், வளிமண்டல ஒளிவிலகல் காரணமாக இன்னுமொரு பாகை வடக்கேயும் கூட இது சில தருணங்களில் தெரிவதுண்டு. சூரிய மண்டலத்திலிருந்து 310 ஒளியாண்டுகள் (96 பார்செக்குகள்) தொலைவில் கனோபசு உள்ளதாக இப்பார்கசு செயற்கைக்கோள் தொலைநோக்கியின் அளவீடு மூலம் தெரிகிறது.[1][2][3]

ஞாயிற்றின் விட்டத்தை விட கனோபசின் விட்டம் 130 மடங்கு அதிகம். இதன் நிறை ஞாயிற்றின் நிறையை விட 8 1/2 மடங்கு அதிகம். மேலும், ஞாயிற்றை விட இதன் ஒளிவீசும் திறன் 13600 மடங்கு அதிகம்; இருப்பினும், அருகாமையிலுள்ள காரணத்தினால் தான் சிரியசு (புவிலிருந்து 8.6 ஒளியாண்டுகள்) கனோபசை விட பொலிவுமிக்கதாகத் தெரிகிறது.

கலைச்சொற்கள்[தொகு]

1. பொலிவுமிக்க - brightest 2. தோற்ற ஒளியளவு - visual magnitude 3. தனி ஒளியளவு - absolute magnitude 4. நிறமாலை வரிசை - spectral series 5. வளிமண்டல ஒளிவிலகல் - atmospheric refraction 6. நிலநடுக்கோடு - equator


மேற்கோள்கள்[தொகு]

  1. "Canopus". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V.  Vizier catalog entry
  3. Ducati, J. R. (2002). "Catalogue of Stellar Photometry in Johnson's 11-color system". CDS/ADC Collection of Electronic Catalogues 2237: 0. Bibcode: 2002yCat.2237....0D.  Vizier catalog entry
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்திய_விண்மீன்&oldid=3751997" இலிருந்து மீள்விக்கப்பட்டது