அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006 என்பது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்திரு ஜிம் பிறவுண் (Fr. Jim Brown) மற்றும் அவரது உதவியாளரும் ஆகஸ்ட் 20, 2006 முதல் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் காணாமல் போன நிகழ்வைக் குறிக்கும்.

வரலாறு[தொகு]

அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறெளன் தனது உதவியாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20 2006 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தெரிவித்தனர். அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை. இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிரௌன். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர். பலவித அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார்.

அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு வத்திக்கான் வேண்டுகோள் விடுத்தது. பேராயர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரியது.

அல்லைப்பிட்டிற்கு சென்ற சமயம் காணாமற்போன பங்குத் தந்தை ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் உடன் பதில் தரவேண்டுமென பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் பேராயர் மரியோ செனாறி வேண்டுகோள் விடுத்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.alaikal.com/new/index.php?option=com_content&task=view&id=877&Itemid=2

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]