உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்ச் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர் சுழற்சி வரைபடம்
நீர் சுழற்சி
புவியில் நீர் சுழற்சி
பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆவியாகும் போது, காற்று கடல் நீரை நிலத்திலிருந்து வானத்திற்குக் கொண்டு சென்று நிலத்தில் நன்னீரின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
நீராவியானது மேகங்களாக மாற்றப்பட்டு மழை, பனி, ஆலங்கட்டி மழை போன்ற வழிகளில் நன்னீரை நிலப்பகுதிக்குக் கொண்டு வருகிறது.
நிலத்தில் வீழ்படிவாக இறங்கும் நீர் அது விழுந்த இடத்தின் புவியியல் சூழலுக்கு ஏற்ப அதன் தன்மை மாறுகிறது

நீர் சுழற்சி (water cycle) என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேலேயும் கீழேயும் தொடர்ச்சியாக இயங்கும் நீரின் இயக்கத்தைக் குறித்த செயல்பாடாகும். ஐதரலாசிக்கல் சுழற்சி ஐதரலாசிக் சுழற்சி என்ற பெயர்களாலும் நீரின் சுழற்சி அறியப்படுகிறது. பூமியிலுள்ள நீரின் அளவு காலப்போக்கில் தொடர்ந்து நிலையாகவே இருந்து வருகிறது. ஆனால் பனி, நன்னீர், உப்பு நீர் மற்றும் வளிமண்டல நீர் ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களில் அதை பகிர்ந்து வைத்தல் என்பது பரந்த அளவிலான காலநிலை மாறுபாடுகளைச் சார்ந்துள்ளது. ஆற்றிலிருந்து கடலுக்கு அல்லது கடலிலிருந்து வளிமண்டலத்திற்கு நீர் செல்வதைப் போல ஒரு நீர்தேக்கத்திலிருந்து மற்றொரு நீர்தேககத்திற்கு நீர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆவியாதல், ஆவிசுருங்குதல், வீழ்படிவாதல், ஊடுருவல், மழைபொழிவு, மேற்பரப்பு ஓட்டம், துணைமேற்பரப்பு ஓட்டம் போன்ற இயற்பியல் செயல்பாடுகள் நீரின் இயக்கத்திற்கு உதவிபுரிகின்றன. இவ்வாறான இயக்கத்தின் போது நீரானது நீர்மம், திண்மம், வாயு என வெவ்வேறான வடிவங்களில் செல்கிறது.

நீர் சுழற்சியின் போது ஆற்றல் பரிமாற்றம் நிகழ்கிறது. இதனால் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. நீர் ஆவியாகும் போது அது தன் சுற்றுப்புற சூழல்களில் இருந்து வெப்ப ஆற்றலை எடுத்துக் கொண்டு சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக்குகிறது. அதே போல நீரானது உறையும் போது வெப்பத்தை உமிழ்ந்து சுற்றுச்சூழலை வெப்பமாக்குகிறது. இந்த வெப்பப் பரிமாற்றம் காலநிலை மாற்றத்தில் முக்கியபங்கு வகிக்கிறது.

சுழற்சியின் நீராவியாகும் கட்டத்தில் நீரானது சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நன்னீராக நிலப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது. திரவ நீர் மற்றும் பனி போன்றவை மண்ணில் ஓடுவதால் கனிமங்கள் உலகெங்கும் கடத்தப்படுகின்றன. மேலும் இது அரிப்பு மற்றும் படிவு உட்பட்ட செயல்முறைகள் மூலம். புவியின் புவியியல் அம்சங்களை மாற்றியமைப்பதிலும் ஈடுபடுகிறது. பூமியின் பெரும்பாலான உயிர்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழல் பராமரிப்பிற்கும் நீரின் சுழற்சி அவசியமாகிறது.

விளக்கம்

[தொகு]

நீர் சுழற்சி சூரியனால் இயக்கப்படுகிறது. அது பெருங்கடல் மற்றும் கடல் போன்ற நீர்தேக்கங்களிலுள்ள நீரை சூடாக்குகிறது. நீர் நீராவியாக மாறி காற்றில் கலக்கிறது. சிறிதளவு பனி மற்றும் பனிக்கட்டி போன்றவையும் பதங்கமாகி நேரடியாக நீராவியுடன் கலக்கின்றன. மண்ணிலுள்ள தாவரங்களும் அங்குள்ள நீரை நீராவியாக்குதல் செயல்முறை மூலம் நீராவியை உருவாக்கி காற்றில் கலக்கின்றன. வளிமண்டலத்தில் நைட்ரசன் (N2) மற்றும் ஆக்சிசன் (O2 ) வாயுக்கள் அதிக அளவில் இருப்பதால் நீராவியின் நீர் மூலக்கூறுகள் (H2O) குறைந்த அளவு மூலக்கூற்று நிறையைக் கொண்டுள்ளன. எனவே இதன் அடர்த்தி குறைவானதாக உள்ளது. குறிப்பிடத்தக்க இந்த அடர்த்தி வேறுபாடு காரணமாக ஈரக்காற்று மிதக்குந்தன்மை பெற்று மேலே உயர்ந்து மிதக்கிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அழுத்தம் குறைந்து வாயு விதிகளின் படி வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.

வெப்பநிலை குறைவால் நீராவி சுருங்கி சிறிய சிறிய திரவ நீர்த் துளிகளாக மாறுகிறது. இவை காற்றை விட கனமானதாக இருக்கும், மேலும் அதை தாங்கும் ஒரு மேம்போக்கான ஆதரவு இல்லாததால் கீழே விழுகிறது. வளிமண்டலத்தில் இவ்வாறு அதிக அடர்த்தியாகச் சேர்ந்து பெரிய இடத்தை ஆக்ரமித்து திரளும் நீர் துளிகளை மேகங்களாகக் காண முடிகிறது. இத்தகைய மேகங்கள் சில சமயங்களில் பூமியின் தரைமட்டத்திற்கு அருகில் ஒடுக்கமடைந்து நீராக மாறுகிறது. இதையே மூடுபனி என்கிறோம்.

வளிமண்டல நீர் சுழற்சியால் நீராவியானது உலகெங்கும் நகர்கிறது. மேகம் துகள்கள் மோதுகின்றன வளகின்றன. மற்றும் மழை போல மேல் வளிமண்டல அடுக்குகளில் வீழ்படிவாக விழுகின்றன. சில பொழிவுகள் பனி அல்லது ஆலங்கட்டி மழையாகப் பெய்கின்றன. பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளாக திரள்கின்றன. உறைந்த நீரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இவற்றால் சேமிக்க முடியும். விண்ணில் திரண்ட மேகங்களில் பெரும்பாலானவை மீண்டும் நீராக கடலுக்கு அல்லது நிலப்பகுதிக்கு மழையாக திரும்புகின்றன. நில மேற்பகுதியில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது. பின்னர் சிற்றோடைகள், அருவிகள், ஆறுகள் வழியாகப் பாய்ந்து மீண்டும் கடலை நோக்கி இந்நீர் செல்கிறது. சிறுபகுதி நீர் நிலத்தடி நீராகவும் ஏரிகள் அணைகள் போன்ற நீர்த்தேக்கங்கங்களில் நன்னீராகச் சேமிக்கப்படுகிறது. நிலத்தின் மேற்பகுதியில் ஓடும் தண்ணீர் முழுவதும் ஆறுகள் வழியாகப் பாய்ந்துவிடுவதில்லை. அந்நீர் ஊடுருவல் மூலம் நிலத்தடிக்குள்ளும் செல்கிறது. சிறிதளவு நீர் நிலத்தடியில் மிகுந்த ஆழத்திற்கும் ஊடுருவிச் சென்று நீர்நிலைகளை உருவாக்குகிறது. இங்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு நன்னீராகவே இருக்கிறது. நிலப்பரப்பிற்கு சற்று கீழே சேகரமாகும் தண்ணீர் ஊற்றாகச் சுரந்து மீண்டும் புவிமேற்பரப்பிலுள்ள சமவெளிகளின் நீர்நிலைகளை அடைந்து கடலை நோக்கி ஓடுகிறது. மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் பரிமாற்றம் புவியில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இருதியாக கடலுக்குச் செல்லும் தண்ணீர் நீர் சுழற்சியை தொடர்கிறது.

சுழற்சிசார் நிகழ்வுகள்

[தொகு]
தண்ணீரின் நிலை மாற்றங்கள் – பல்வேறு செயல்முறைகள் நீரின் இயக்கத்திற்கு காரணமாதல்

விண்ணில் உள்ள நீராவி குளிர்ச்சியடைந்து பெரும்பகுதி மழையாக புவியின் மேற்பரப்பை அடைகிறது. பனி, பனிக்கட்டி, ஆலங்கட்டி, மூடுபனி, சொட்டுநீர், போன்ற வடிவங்களாகவும் அந்நீர் புவியை அடைகிறது [1]. நிலப்பகுதியில் மழையாகப் பொழியும் நீரின் அளவு ஆண்டுக்கு 107,000 கி.மீ3 (26,000 கன அடி மைல்) ஆகும். பனியாகப் பொழியும் நீரின் அளவு 1,000 கி.மீ3 (240 கன மைல்) மட்டுமே ஆகும் [2]. உலகப் பொழிவில் 78% கடற்பரப்பின் மேலேயே பொழிகிறது [3].

கவிகை குறுக்கீடு

[தொகு]

தரையில் விழுவதற்குப் பதிலாக கவிந்து கிடக்கும் தாவர இலைகளால் குறுக்கிடப்படும் மழைப்பொழிவு இறுதியில் தரையில் விழாமலேயே வளிமண்டலத்திற்கு மீண்டும் ஆவியாகிச் செல்கிறது.

பனி உருகுதல்

[தொகு]

பனி உருகுதல் காரணமாகவும் வெள்ளப்பெருக்கு உண்டாகி நிலப்பரப்பில் நீர் ஓடுவதுண்டு.

வழிந்தோட்டம்

[தொகு]

நில மேற்பரப்பிலும் கால்வாய்கள் வழியாகவும் பல்வேறு வகை முறைகளில் நீர் பாய்ந்து சென்றாலும் தண்ணீர் நிலத்தடியில் கசிந்து ஒழுகுகிறது. காற்றில் ஆவியாகிறது. ஏரிகளிலும் நீர்தேக்கங்களிலும் சேமிக்கப்படுகிறது. விவசாயத்திற்காகவும் மனித பயன்பாட்டிற்காகவும் பிரித்தெடுக்கப்படுகிறது.

ஊடுருவல்

[தொகு]

தரையில் இருந்து நிலத்தடிக்குள் ஊடுருவிய நீர் மண்ணின் ஈரப்பதம் அல்லது நிலத்தடி நீர் ஆக மாறுகிறது [4]. இருப்பினும், அனைத்து மண் ஈரப்பதமும் நிலத்தடிநீர் புதுப்பித்தலுக்கு அல்லது தாவர நீர்போக்குக்கு சமமாக கிடைக்கவில்லை என்று நீரில் நிலைத்திருக்கும் ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன[5].

கீழ்மேற்பரப்பு வெள்ளம்

[தொகு]

நிறைவுறா மண்டலங்கள் மற்றும் நீர்நிலைகளின் வழியாக நிலத்தடியில் பாயும் வெள்ள நீர் ஊற்று மூலமாகவோ குழாய் மூலமாகவோ புவி மேற்பரப்புக்கு மீண்டும் வந்து சேர்ந்து பின்னர் கடலைச் சென்று சேர்கிறது. புவியீர்ப்பு அல்லது ஈர்ப்பு விசை அழுத்தத்தினால் நிலத்திற்குள் ஊடுருவிய நீர் அவ்விடத்தைவிட குறைந்த உயரம் கொண்ட நிலப்பகுதி வழியாக மேற்பரப்புக்குத் திரும்பச் செலுத்தப்படுகிறது. நிலத்தடி நீர் மெதுவாக நகர்ந்து நீர்நிலைகளை மெதுவாக நிரப்புகிறது, எனவே அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகநிலத்தடியில் நீராக இருக்கும்.

ஆவியாதல்

[தொகு]

நீர்மநிலையில் உள்ள நீர் வாயு நிலைக்கு மாறுவதை ஆவியாதல் என்கிறோம். நிலமேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளில் உள்ள தண்ணீர். நிலத்தடிநீர். வளிமண்டலத்தில் இருக்கும் நீர் முதலியன ஆவியாகின்றன[6]. ஆவியாதலுக்கு பெரும்பாலும் சூரியனின் கதிர்வீச்சு ஆற்றல் உதவுகிறது. தாவரங்கள் மூலமாகவும் நீராவிப்போக்கு நிகழ்கிறது. ஆண்டுக்கு மொத்தமாக சுமார் 505,000 கி.மீ3 (121,000 கன மைல்) நீரின் அளவு ஆவியாகிறது. அதில் , 434,000 கிமீ 3 (104,000 கன மைல்) நீர் கடலில் இருந்து மட்டுமே ஆவியாக மாறுகிறது. உலக அளவில் ஆவியாகும் நீரில் 86% கடலில் மட்டுமே நிகழ்கிறது [3]

பதங்கமாதல்

[தொகு]

நேரடியாக நீர்மநிலையிலிருந்து தண்ணீர் ஆவி நிலைக்கு மாறுவதை பதங்கமாதல் என்கிறோம் [7].

ஆவிப்படிவு

[தொகு]

நீராவி நேரடியாக வாயு நிலையிலிருந்து திண்ம நிலைக்கு செல்வது இவ்வாறு குறிக்கப்படுகிறது.

கிடை அசைவு

[தொகு]

வளிமண்டலத்தில் தண்ணீர் நகரும் விதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது [8]. கிடை அசைவு இல்லாவிட்டால் கடலிலிருந்து ஆவியாகும் நீராவி நிலப்பகுதியில் படிவாகாது.

ஒடுங்குதல்

[தொகு]

வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது ஒடுக்கமடைந்தால்தான் நீர்மநிலை நீர்த்துளிகளாக மாறி மூடுபனி, மேகம் என மாற்றமடைகிறது [9].

நீராவிப்போக்கு

[தொகு]

தாவரங்களிலிருந்தும் மண்ணிலிருந்தும் நீராவி காற்றில் கலப்பது நீராவிப் போக்கு எனப்படும்.

பொங்கி வழிதல்

[தொகு]

ஈர்ப்பு விசையால் நிலத்தடி நீர் மண் மற்றும் பாறைகளில் இருந்து செங்குத்தாக வெளியேறுகிறது.

தட்டுகள் நகர்வு

[தொகு]

புவித்தட்டுகள் நகர்வினால் உள்ளிறங்கும் நீர் எரிமலை வெடிப்புகளால் மீண்டும் புவி மேற்பரப்பை அடைகிறது. நீர் சுழற்சியில் இத்தகைய செயல்முறைகள் பலவும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

தேங்கியிருப்பு நேரங்கள்

[தொகு]
சராசரி தேக்க இருத்தல் நேரம்[10]
தேக்கம் சராசரி இருத்தல் நேரம்
அண்டார்ட்டிகா 20,000 ஆண்டுகள்
பெருங்கடல்கள் 3,200 ஆண்டுகள்
பனியாறுகள் 20 முதல் 100 ஆண்டுகள்
பருவப் பனிப் படர்வு 2 முதல் 6 மாதங்கள்
மண் ஈரம் 1 முதல் 2 மாதங்கள்
நிலத்தடி நீர்: மேலீடானது 100 முதல் 200 ஆண்டுகள்
நிலத்தடி நீர்: ஆழமானது 10,000 ஆண்டுகள்
ஏரிகள் 50 முதல் 100 ஆண்டுகள்
ஆறுகள் 2 முதல் 6 மாதங்கள்
வளிமண்டலம் 9 நாட்கள்

நீரியல் சுழற்சியின் ஒரு தேக்கத்தில் அல்லது நீர்நிலையில் தேங்கி இருத்தல் நேரம் என்பது அந்த்த் தேக்கத்தில் நீர் மூலக்கூறு செலவிடும் அல்லது தேங்கியிருக்கும் நேரமாகும்மிது அந்த தேக்கத்தில் தேங்கியிருக்கும் சராசர் அகவை ஆகும்.

நிலத்தடி நீர் புவியை விட்டு வெளியேறும் முன் மண் அடியில் 10,000 ஆண்டுகள் தேங்கியிருக்கிறது. இத்தகைய பழைய நிலத்தடி நீர் புதைபடிவ நீர் எனப்படுகிறது. மண்ணில் தேங்கியுள்ள நீர் புவியில் மெல்லிய படலமாகப் பரவியிருப்பதாலபது அங்கே சிறிதுகாலமே அங்கே இருக்கும். இது வேகமாக ஆவியாதல், நீராவிப்போக்கு, ஓடை பாய்வு, நிலத்தடி நீராக ஊறல் வழியாக தீர்கிறது. ஆவியானதும் அது செறிந்து மழையாகப் பொழிவதற்கு முன் அதன் வளிமண்டல தேங்கியிருப்பு நேரம் 9 நாட்கள் ஆகும்.

அண்டார்ட்டிகா, கிரீன்லாந்து ஆகிய பெரும் பனிப்பாளங்கள் நெடுங்காலத்துக்குப் பனியைத் தேக்கிவைக்கிறது. அண்டார்ட்டிகா பனி அண்மைக்கு முன் 800,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். என்றாலும் இதன் சராசரி தேங்கியிருப்பு நேரம் மிகவும் குறுகியதாகும்.[11]

நீரியலில், தேங்கியிருப்பு நேரம் இருவழிகளில் மதிப்பிடப்படுகிறது. மிகவும் பொதுவான வழிமுறை பொருண்மை அழியாமை நெறிமுறையைப் பன்பற்றுகிறது. இது ஒரு தேக்கத்தில் உள்ல நீரளவு நிலையானதாக ஜகொள்கிறது. இம்முறையில், தேங்கியிருப்பு நேரம் தேக்கத்தின் பருமனளவை தேக்கத்துக்குள் நீர் நுழையும் வீதம் அல்லது தேக்கத்தில் இருந்து வெளியேறும் வீதத்தால் வகுத்துப் பெறப்படுகிறது. கருத்தளவில், நீர் வெளியேறாதபோது தேக்கம் வெற்றாக இருந்து முழுமையாக நிரம்ப பிடிக்கும் நேரத்துக்குச் சமமாகும் அல்லது நீர் நுழையாதபோது முழுமையாக நீர் நிரம்பிய தேக்கம் வெறுமையாகப் பிடிக்கும் நேரத்துக்குச் சமமாகும்.

தேங்கியிருப்பு நேரத்தை மதிப்பிடும் மற்றொரு வழிமுறை, நிலத்தடி நீரின் தேங்கியிருப்பு நேரத்தைக் கண்டுபிடிக்க பரவலாகப் பயன்படுகிறது. இம்முறை isotopic நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இம்முறை isotope நீரியல் துணைப்புலத்தில் பயன்படுகிறது.

கால அடைவிலான மாற்றங்கள்

[தொகு]

மாந்தச் செயல்பாடுகளின் விளைவு

[தொகு]

பின்வரும் மாந்தர்செயல்பாடுகள் நீரியல் சுழற்சியில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

  • வேளாண்மை
  • தொழிலகம்
  • வளிமண்டல வேதியியல் இயைபின் மாற்றம்
  • அணைகளின் கட்டுமானம்
  • காடழிப்பு, காடு வளர்ப்பு
  • கிணறுகளால் நிலத்தடி நீரை வெளியேற்றல்]]
  • ஆற்றுநிரி பயன்பாடு
  • நகரமயமாக்கம்

காலநிலை மீதான தாக்கம்

[தொகு]

நீரியல் சுழற்சிக்குச் சூரிய ஆற்றல் பயன்படுகிறது. 86% அளவு புவிக்கோள ஆவியாதல் கடல்களிலேயே நிகழ்கிறது. இந்த ஆவியாதலால் கடல்களின் வெப்பநிலை குறைகிறது.[12] இந்தக் குளிர்வைப் புறக்கணித்தால், பசுமையில்ல விளைவு 67 பாகை செல்சியசு அளவுக்கு வெப்பநிலையை உயர்த்தி மிகவும் சூடான புவிக்கோளத்தை உருவாக்கும்.[சான்று தேவை]

நீரக நீரின் பயன்பாடும் புதைபடிவ எரிபொருள் எடுக்க வெளியேற்றப்படும் நீரும் நீர்க்கோளத்தின் நீர் உள்ளடக்கத்தை கூட்டுகிறது. இது கடல்நீர் மட்டம் உயர்கிறது.[13]

புவியுயிர்வேதிச் சுழற்சி மீதான தாக்கம்

[தொகு]

புவியியற் கால அளவில் வளிமண்டல இழப்பு

[தொகு]

நீர்ச் சுழற்சிக் கோட்பாட்டின் வரலாறு

[தொகு]

மிதக்கும் நிலம்

[தொகு]

பண்டைய காலத்தில் நீர்நிலையின் மீது நிலம் மிதப்பதாகக் கருதப்பட்டது. ஆறுகளீன் நீர் நிலத்துக்கு அடியில் இருந்து பெறப்படுவதாக கருதப்பட்டது. இந்த நம்பிக்கைக்கான சான்றை ஓமரின் நூல்களில் காணலாம்(கி.மு 800 ).

மழையின் வாயில்

[தொகு]

பண்டைய அண்மைக் கிழக்கு நாட்டு எபிரேய அறிஞர்கள் ஆறுகள் கலைற் சென்று கலந்தாலும் கடல்கள் நிரம்புவது இல்லை என்பதை நோக்கீடாகப் பதிவு செய்துள்ளனர் (எக்லேசியாசுதெசு (Ecclesiastes) 1:7). சில அறிஞர்கள் இக்காலத்தில் நீரியல் சுழற்சி முழுமையாக அறியப்பட்டிருந்ததாக பின்வரும் பகுதியைச் சுட்டிக் காட்டுகின்றனர்: "காற்று தெற்கு நோக்கிப் போகிறது;பிறகு வடக்காகத் திரும்புகிறது; இது தொடர்ந்து சுழியாக சுழனல்கிறது; பின்னர் காற்று மீண்டு அதன் சுற்றோட்டங்களுக்கு ஏற்ப சுழற்சியை முடிக்கிறதுணனைத்து ஆறுகளும் ஓடிக் கடலில் கலக்கின்றன; ஆனால், கடலோ நிரம்புவதில்லை. அவை எங்கிருந்து வந்தனவோ அங்கேயே திரும்புகின்றன" (எக்லேசியாசுதெசு (Ecclesiastes) 1:6-7, KJV).[14] இந்நுலின் காலம் பற்றி முற்றமுடிந்த கருத்தெதையும் ஏற்கவில்லை; என்றாலும் இது தாவீதுக்கும் பாதுழ்சேவாவுக்கும் பிறந்த சாலமன் காலத்தது எனச் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்; "அதாவது மூவாயிரம் ஆன்டுகளுக்கு முந்தையது எனச் சொல்கின்றனர்;[14] இக்காலம் கி.மு 962-922 என குறைந்த அளவு ஏற்பு நிலவுகிறது.[15] மேலும், முகில்கள் நிரம்பியுள்ளநிலையில்லவை புவியில் மழையாக பொழிவுற்று காலியாகின்றன(எக்லேசியாசுதெசு (Ecclesiastes) 11:3).னாதோடு, கி.மு 793-740 கால இடைவெளியில் ஓர் எபிரேய நெடுநோக்காளரான அமோசு, தண்ணீர் கடலில் இருந்து வருகிறது. அது மீன்டும் நிலத்தில் பொழிகிறது எனக் கூறியுள்ளார்ரமோசு (Amos) 5:8, 9:6).[16]

மழைப் பொழிவும் நிலத்தில் கசிந்தூறலும்

[தொகு]

மழைமட்டுமே

[தொகு]

விவிலிய யோகாபு நூலில் (கி,மு 7 ஆம் நூற்றாண்டு-22 ஆம் நூற்றாண்டு காலத்தது),[17] நீரியல் சுழற்சியின்போது மழைப்பொழிவு குறித்த விவரிப்பு உள்ளது;[18] "ஏனெனில், அவர் மழையின் சிறுதுளிகளை உருவாக்குகிறார். அங்கிருக்கும் ஆவியளவுக்கு ஏற்ப அவை மழையாக பொழிகின்றன; முகிலும் இப்படி மழையைப் பேரளவில் தூய நீராக மாந்தன் மீது பொழிகிறது" (Job 36:27-28, KJV) என எழுதப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சிக் காலம் வரை, ஆறுகளின் நீரோட்டம் தொடர்ந்து நிலவவும் நீர்ச்சுழற்சி முடிவுறவும் மழை மட்டுமே போதுமானதல்லவெனவும் கடல்நீர் நிலத்தடி நீராக மேலெழுவதுவே அதற்குக் காரணம் எனவும் கருதப்பட்டது. இந்தக் கண்ணோட்டத்தை இங்கிலாந்தின் பெர்தலோமியசும் (கி.பி 1240) இலியனார்தோ தா வின்சியும் (கி.பி 1500) அதான்சியசு கிர்ச்சரும் (கி.பி 1644).

பெர்னார்டு பாலிசி முதன்முதலில் மழை மட்டுமே ஆறுகளின் நீரோட்ட்த்துக்குப் போதுமானதென வெளியிட்ட சிந்தனையாளர் ஆவார் (கி.பி 1580). இவர்தான் நீர்ச்சுழற்சி குறித்த புத்தியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவரது கோட்பாடு அறிவியலாக 1674 வரையில் நிறுவப்படவில்லை. இதை அறிவியல் முறையில் நிறுவியவராக பியேர் பெரவுல்ட் (அறிவியலாளர்) கருதப்படுகிறார்ரென்றாலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை முதன்மை அறிவியல் அறிஞர்களல் ஏற்கப்படவில்லை.[19]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "precipitation | National Snow and Ice Data Center". nsidc.org. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  2. "Estimated Flows of Water in the Global Water Cycle". www3.geosc.psu.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  3. 3.0 3.1 "Salinity | Science Mission Directorate". science.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  4. National Weather Service Northwest River Forecast Center. Hydrologic Cycle. Retrieved on 2006-10-24.
  5. Evaristo, Jaivime; Jasechko, Scott; McDonnell, Jeffrey J. (2015-09-03). "Global separation of plant transpiration from groundwater and streamflow". Nature (NPG) 525 (7567): 91–94. doi:10.1038/nature14983. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:26333467. Bibcode: 2015Natur.525...91E. http://www.nature.com/nature/journal/v525/n7567/full/nature14983.html. 
  6. "evaporation | National Snow and Ice Data Center". nsidc.org. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  7. "sublimation | National Snow and Ice Data Center". nsidc.org. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  8. "advection | National Snow and Ice Data Center". nsidc.org. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  9. "condensation | National Snow and Ice Data Center". nsidc.org. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  10. PhysicalGeography.net. CHAPTER 8: Introduction to the Hydrosphere. Retrieved on 2006-10-24.
  11. Jouzel, J.; Masson-Delmotte, V.; Cattani, O.; Dreyfus, G.; Falourd, S.; Hoffmann, G.; Minster, B.; Nouet, J. et al. (2007-08-10). "Orbital and millennial Antarctic climate variability over the past 800,000 years". Science 317 (5839): 793–796. doi:10.1126/science.1141038. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-9203. பப்மெட்:17615306. Bibcode: 2007Sci...317..793J. 
  12. "Water Cycle | Science Mission Directorate". science.nasa.gov2 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  13. "Rising sea levels attributed to global groundwater extraction". University of Utrecht. பார்க்கப்பட்ட நாள் February 8, 2011.
  14. 14.0 14.1 Morris, Henry M. (1988). Science and the Bible (Trinity Broadcasting Network Edition, 1988 ed.). Chicago, IL: Moody Press. p. 15.
  15. Metzger, Bruce M.; Coogan, Michael D. (1993). The Oxford Companion to the Bible. New York, NY: Oxford University Press. p. 369. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195046455.
  16. Merrill, Eugene H.; Rooker, Mark F.; Grisanti, Michael A. (2011). The World and the Word. Nashville, TN: B&H Academic. p. 430. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780805440317.
  17. Metzger, Bruce M.; Coogan, Michael D. (1993). The Oxford Companion to the Bible. New York, NY: Oxford University Press. pp. 369. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195046455.
  18. Morris, Henry M. (1988). Science and the Bible (Trinity Broadcasting Network Edition, 1988 ed.). Chicago, IL: Moody Press. p. 15.
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-10-11. பார்க்கப்பட்ட நாள் 2018-05-06.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ச்_சுழற்சி&oldid=4169428" இலிருந்து மீள்விக்கப்பட்டது