பெருமான் நம்பிப் பல்லவராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளத்துழான் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பியாரான பல்லவராயர் (இறப்பு: 1171) எனபவர் இரண்டாம் இராஜராஜ சோழன், இரண்டாம் இராசாதிராச சோழன் ஆகியோர் காலத்தில் சோழர் அரசில் தலைமை அமைச்சராக இருந்தவர் ஆவார். இவர் தொண்டை மண்டலத்தின், ஆமூர்க் கோட்டம், காரிகைக் குளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் குளத்துழான் குடியில் பிறந்ததால் குளத்துழான் என்றும் குடிப் பெயர் இவர் பெயரோடிணைந்துள்ளது. பல்லவராயன் என்பது இரண்டாம் இராசராச சோழனால் இவருக்கு அளிக்கப் பெற்ற சிறப்புப் பெயராகும்.

பணிகள்[தொகு]

இவர் இரண்டாம் இராசராச சோழனின் யானை குதிரை முதலிய எல்லாத் துறைகளுக்கும் தலைவனாகவும், அரசனது அரண்மனை உள்துறைப் பேரலுவலனகவும் இருந்துள்ளார்.

இரண்டாம் இராசராச சோழன் நோய்வாய்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு வயதில், இரண்டு வயதில் என இரு குழந்தைகள் இருந்தனர். இதனால் இவர்களுக்கு முடி சூட்டாமல், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரச குமாரர்களை வருவித்து அவர்களுள் விக்கிரம சோழ தேவருடைய பேரனாகிய நெறியுடைப் பெருமாளின் மகன் எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டு இரண்டாம் இராசராச சோழன் இறந்து போனார். இதனால் சோழ நாட்டில் ஆட்சி உரிமைக்காக உள்நாட்டுப்போர் நிகழும் சூழல் ஏற்பட்டது. இதனால் பல்லவராயன் விரைந்து செயல்பட்டு பழையாறையில் இருந்த இராசராசனுடைய அந்தப்புர மகளிரையும், இளங் குழந்தைகள் இருவரையும், பரிவாரங்களோடு அழைத்து வந்து, இராசராசபுரத்திலே (தாரசுரத்தில்) காவல்மிக்க இடத்தில் இருக்கச் செய்து காப்பாற்றினானர். இளவரசனாக ஆக்கப்பட்ட எதிரிலிப் பெருமாளை நான்காண்டுக் காலம் வரையிலும் இளவரசனாகவே இருக்கச் செய்து பின்னர் (இரண்டாம்) இராசாதிராசன் என்ற பெர்சூட்டி சோழப் பேரரசனாக ஆக்கினார். இந்த இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சியிலும் தலைமை அமைச்சனாக இருந்து அரசியல் பொறுப்பையும் ஏற்று நடத்தி வந்தார்.

திருப்பணிகள்[தொகு]

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள பல்லவராயன் பேட்டை என்னும் ஊர் இவரின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் அதற்கு முன்பு குளத்தூர் என்ற அழைக்கப்பட்டுவந்தது. இவ்வூரில் பல்லவராயன் தன் அரசன் பெயரால் இராசராசேச்சுரம் என்னும் கோயிலைக் கட்டி, அதற்கு இறையிலியாக நிலமும் அளித்தார்.

போர்கள்[தொகு]

இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் இவர் பாண்டி நாட்டுப் போரில் ஈடுபட்டுச் சிங்களப் படையை வென்றார். மேலும் இவர் சேரனைப் போரில் வென்று சேரனிடம் இருந்து திறைகொண்டு வந்தார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 140-148, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, பெருமான் நம்பிப் பல்லவராயன்