கர்மா நாச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஞ்சி (ஜார்க்கண்ட்) இல் கர்மா நடனத்திற்காக பாரம்பரிய உடையில் பழங்குடி பெண்கள்

கர்மா நாச் (Karma Naach) அல்லது கர்மா நடனம் என்பது மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பாரம்பரிய நடனமாகும். இப்பகுதிகளில், கரம் திருவிழா இலையுதிர்காலத்தில் வரும் ஒரு பிரபலமான பண்டிகை ஆகும். இது புரட்டாசி (பத்ராப்) மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களின் 11 வது நாளிலிருந்து தொடங்குகிறது. இது சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது. கர்மா என்றால் 'விதி' என்பது பொருள் ஆகும்.

இந்த நாட்டுப்புற நடனம் கரம் தேவதை என்று அழைக்கப்படும் விதியின் கடவுள் வழிபாட்டின் போது நிகழ்த்தப்படுகிறது. விதியின் கடவுள் நல்ல மற்றும் கெட்ட வாய்ப்புகளைத் தருவதாக பழங்குடி மக்கள் கருதுகின்றனர். [1]

கர்மா நடனம்[தொகு]

கர்மா நடனம் இது கர்மா நாச் என பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நடனம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார், ஒரிசா மற்றும் பிற நாட்டின் பகுதிகளில் வாழும் பழங்குடியினரால் செய்யப்படுகிறது. இந்த பழங்குடி நடனம், இலையுதிர் பண்டிகையான கர்மா பூசையின் போது நிகழ்த்தப்படுகிறது. கரம் தேவதையைக் குறிக்கும் கரம் மரத்தின் முன்பாக பழங்குடி இனப் பெண்கள், அந்த மரத்தையே விதியின் கடவுளாக கருதி நடனமாடுகின்றனர்.

கர்மா பூசை[தொகு]

கர்மா பூசை தேதிகள் பொதுவாக ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும். ஓரான், பிஜ்வாரி, பைகா மற்றும் மஜ்வார் போன்ற பழங்குடியினரால் இந்த நாள் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த நாளில் மக்கள் கரம் தேவதையிடம் ஆசீர்வாதம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள். ஒட்டுமொத்த பழங்குடி சமூகமும் பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்காக இயற்கையை சார்ந்து இருப்பதால் இயற்கையின் அடையாளமாக, கரம் தேவதை வழிபடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வதால், சகோதர சகோதரிகளுக்கு இந்த நாள் முக்கியமானது. திருமணமான தம்பதிகள், தங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக தெய்வத்தை வேண்டிக்கொள்கிறார்கள். நோக்கம் எதுவாக இருந்தாலும், கர்மா பூசை என்பது பல்வேறு மாநிலங்களில் வாழும் பழங்குடி சமூகத்தின் ஒருங்கிணைந்த பண்டிகையாக உள்ளது. [2]

கரம் தேவதையை வணங்குவது மூலம், அவர்களின் வாழ்க்கையில் செழிப்பு. நன்மை, மகிழ்ச்சி போன்றவை கிடைக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு கர்ம தேவதையே காரணம் என்றும் பழங்குடியினர் நம்புகிறார்கள்.

கர்மா நடன பாணி[தொகு]

நாட்டுப்புற கர்மா நடனத்தை, ஆண்களும் பெண்களும் தும்கி போன்ற இசைக்கருவியின் இசைக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள். சல்லா, பேரி மற்றும் ஜும்கி போன்ற இசைக்கருவிகளும் பயன்படுத்தப் படுகிறது. உள்நாட்டில், ‘திம்கி’ என்று அழைக்கப்படும் முரசு பயன்படுத்தப்படுகிறது. முக்கிய இசைக்கருவியான 'திம்கி' இசைக்கப்படும் போது, அதன் வேகமான ஒலிக்கேற்ப நடனக் கலைஞர்கள் துடிப்புடனும் ஆர்வத்துடனும் நடனமாடுகிறார்கள். நடனக் கலைஞர்கள் தங்கள் கால்களை சரியான தாளத்திலும், பாணியிலும் நகர்த்துகிறார்கள். நடனத்தின் போது ஆண்கள் முன்னோக்கி பாய்கிறார்கள். அதே நேரத்தில் குழுவில் உள்ள பெண்கள் வளைந்துகொள்கிறார்கள். தரைக்கு அருகில் குறைவான விட்டத்தில் அவர்கள் ஒரு வட்டத்தை உருவாக்கி, இடுப்பைச் சுற்றி தங்கள் கைகளை வைக்கின்றனர். அடுத்த நடனக் கலைஞர்கள், தாளத்திற்கு ஏற்றவாறு நடனத்தை தொடர்கின்றனர். கர்மா நடனம் ஆடும் பழங்குடி இன ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் பாரம்பரிய உடைகள் மற்றும் நகைகளை அணிகின்றனர். [3]

மத்திய பிரதேசத்தில் வழிபாடு[தொகு]

இந்த கர்மா நடனம், பழங்குடி வழிபாட்டுடன் தொடர்புடையது மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில், இது ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகவும், அவர்களின் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாகவும் உள்ளது. அனைத்து பழங்குடி இன மக்களின் வழிபாடுகளில் ஒன்று பொதுவானதாக உள்ளது. அவை இயற்கையை அல்லது மரங்களை மையமாகக் கொண்டுள்ளன. ஜுமார், எக்டாரியா, லஹாகி, சிர்கி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கர்மா நடனத்தில், பல துணை வகைகள் காணப்படுகின்றன. [4]

2020இல் கர்மா பூசை[தொகு]

கர்மா பூசை, எப்போது என்பதை அறிய மக்கள் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு 2020இல், கர்மா பூசை ஆகத்து மாதம் 29 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் விடுமுறை தினமாகும்.


குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2012-05-20. பார்க்கப்பட்ட நாள் 2012-04-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://www.karmapuja.org/when-is-karma-puja.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
  4. http://www.karmapuja.org/karma-dance.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்மா_நாச்&oldid=3547966" இலிருந்து மீள்விக்கப்பட்டது