பேரியம் உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரியம் உணவு (Barium meal) என்பது ஒரு எளிய கதிர்பட ஆய்வாகும். உணவுக் குழாய், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் தோன்றும் நோய்களைக் கண்டு அறிய உதவும் ஆய்வாகும். இந்த பகுதிகளில் தோன்றிய புற்றுநோய், அடைப்பு, குருதிக் கசிவு, புண் போன்ற மருத்துவ சிக்கல்களுக்கு விடைகாண உதவும் ஆய்வு எனக் கூறலாம்.[1] ஆய்வு மருத்துவத்திற்கு உகந்த சுத்தமான பேரியம் சல்பேட்று (Barium sulphate-BaSO4 ) எடுத்துக் கொள்ளப்படுகிறது. நல்ல தூய்மையான நீரில் கட்டிக் கூழ்போல் கலக்கப்படுகிறது. நோயாளியை எக்சுக் கதிர் இயந்திரமுள்ள அறையில் இந்தக்கூழ் பருகக் கொடுக்கப்படுகிறது. நோயாளியின் உடல்நிலையினைப் பொருத்து நின்ற நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ அருந்தச் செய்யலாம். அருந்தியதும் எக்சுக் கதிர்படம் எடுக்கப்படுகிறது. செவிலியரும் கதிர்வீச்சுத் தொழில்நுட்பனரும் கவனமாக இதனை மேற்பார்வையிட, கதிர்படம் எடுக்கப்படுகிறது. குடல்பகுதி ஆய்வானால் ஒருசில மணி நேரத்திற்குப் பின்னால் படம் எடுத்தால் போதும். பேரியம் கலவை குடலுக்குச் செல்ல காலம் தேவை. கதிர்படம் தயாரானதும் நோயறி கதிரியல் மருத்துவர் படத்தினை நுணுகி ஆய்ந்து செரிமான மண்டலத்தில் என்ன நோய் அல்லது சிக்கல் என்பதனை தெரிந்து கொள்ளமுடியும். இந்த முழு ஆய்வும் பேரியம் உணவு ஆய்வு எனப்படும். காலையில் வெறும் வயிற்றில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

சான்றுகள்[தொகு]

  1. Murphy, KP; McLaughlin, PD; O'Connor, OJ; Maher, MM (Mar 2014). "Imaging the small bowel". Current Opinion in Gastroenterology 30 (2): 134–40. doi:10.1097/mog.0000000000000038. பப்மெட்:24419291. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_உணவு&oldid=2974734" இலிருந்து மீள்விக்கப்பட்டது