பகுத்தறிவுமயமாதல் (சமூகவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூகவியலில், பகுத்தறிவுமயமாதல் என்பது, சமூகத்தில் நடத்தைகளை ஊக்குவிப்பனவான மரபுகள், விழுமியங்கள், உணர்வுகள் ஆகியவற்றை பகுத்தறிவு, காரண ஆய்வு என்பன சார்ந்த கருத்துருக்களால் மாற்றீடு செய்வதைக் குறிக்கிறது. தற்காலத்தில், ஒரு பண்பாட்டில் பகுத்தறிவுமயமாதல் இடம்பெறுவதற்கான ஒரு காரணமாக உலகமயமாக்கத்தைக் கொள்ளலாம். நாடுகள் மேலும் மேலும் ஒன்றுடனொன்று கூடுதல் தொடர்புகளைக் கொண்டவையாக மாறி வருகின்றன. அத்துடன், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகச் சமூக வலையமைப்புக்கள், ஊடகங்கள், அரசியல் என்பவற்றினூடாக ஒன்றின்மீதொன்று செல்வாக்குச் செலுத்துவதும் இலகுவாக உள்ளது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், அப்பகுதியினரின் பண்பாட்டின் முக்கிய கூறாகக் கருதப்படும் மந்திர மருத்துவ நடைமுறைகளை மாற்றுவதற்காக நனீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் பகுத்தறிவுமயமாதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

பகுத்தறிவுமயமாதல் ஒரு வளர்ச்சியெனப் போலியாகக் கருதப்படுவதாகவும், சமூகத்தின் மீது எதிர்மறையானதும் எதிர்மனிதப்பண்பாக்கத் தாக்கங்களை உருவாக்கியுள்ளது என்றும் அது நவீனத்துவத்தை அறிவொளிக் கோட்பாடுகளிலிருந்து விலகச் செய்தது எனவும் பல சமூகவியலாளர்களும், சமகால மெய்யியலாளர்களும் வாதிட்டனர்.[1] சமூகவியலைத் தொடங்கியோரும் பகுத்தறிவுமயமாதல் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

முதலாளித்துவம்[தொகு]

குறிப்பாக நவீன மேல்நாட்டுச் சமூகங்களின் இயல்புகள் மீது இத்துறை ஏற்படுத்திய அழுத்தங்கள் தொடர்பில் செந்நெறிச் சமூகவியல் அடிப்படையின் மையக் கருத்துருக்களில் ஒன்றாக பகுத்தறிவுமயமாதல் உருவானது. இதன் கருப்பொருள், பல அறிஞர்களின் நவீனத்துவத்துக்கு எதிரான விமர்சனங்களோடு ஒத்திருந்தபோதும், இச்சொல்லை முன்மொழிந்தவர் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தவரும் எதிர்நேர்க்காட்சியியக் கொள்கை கொண்டவருமான மக்சு வெபர் ஆவார்.

மக்சு வெபர், புரட்டஸ்தாந்த நெறிமுறையும் முதலாளித்துவத்தின் ஆற்றலும்' என்னும் அவரது நூலில் பகுத்தறிவுமயமாதல் குறித்து விளக்கியுள்ளார். இதில், சில புரட்டஸ்தாந்த இறையியலாளர்களின், குறிப்பாகக் கல்வினியம் சார்ந்தோரின், நோக்கங்கள், அவர்களது "விடுதலை ஆர்வத்தைக்" கையாளுவதற்கான ஒரு வழியாகப் பொருளியல் இலாபத்துக்கான பகுத்தறிவு சார்ந்த வழிமுறைகளை நோக்கித் திரும்பியதாக வெபர் குறிப்பிடுகிறார். இக்கொள்கையின் விளைவுகள் விரைவிலேயே அதன் மத அடிப்படைகளுடன் ஒத்துப்போகாத அளவுக்கு வளர்ந்துவிட்டதாகவும், அதனால் இதை அவர்கள் கைவிட்டுவிட்டதாகவும் வெபர் வாதிட்டார். பிந்திய ஆக்கங்களிலும், குறிப்பாக அதிகார அமைப்பு, அதிகாரத்தின் வகைப்பாடு போன்றவை தொடர்பான ஆக்கங்களிலும், இவ்விடயம் குறித்து வெபர் மேலும் ஆராய்ந்துள்ளார். பகுத்தறிவுமயமாதல் நோக்கிய தவிர்க்கமுடியாத நகர்வு குறித்து இந்த ஆக்கங்களில் வெபர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]

பகுத்தறிவு சார்ந்த - சட்டடீதியான அதிகார அமைப்பை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது என வெபர் நம்பினார். ஆட்கவர்ச்சி அதிகாரத்தில், தலைவரின் இறப்புடன் அந்த அதிகாரத்தின் ஆற்றலும் இல்லாமல் போகும். பகுத்தறிவுமயமாக்கப்பட்ட அதிகார அமைப்பின் மூலமே அந்த அதிகாரத்தைத் தொடர முடியும். பகுத்தறிவுமயமான சமூகங்களில் மரபுவழி அதிகார அமைப்புக்களும்கூட, நிலையான வாரிசுரிமையை உறுதி செய்வதற்கான பகுத்தறிவு சார்ந்த சட்ட அடிப்படையை உருவாக்கிக் கொள்கின்றன.

நிலப்பிரபுத்துவச் சமூகம் போன்ற மரபுவழிச் சமூகங்களில் ஆட்சி மரபுவழித் தலைமைகளால் நடத்தப்படுகின்றது. நவீன சமுதாயங்கள் பகுத்தறிவு சார்ந்த சட்ட முறைமைகளின் கீழ் இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மக்களாட்சி முறைமைகள் பண்புசார் பிரச்சினைகளைப் (எ.கா: தீவிர பாகுபாடுகள்) பகுத்தறிவு சார்ந்த கணிய வழிமுறைகள் (எ.கா: குடிசார் உரிமைச் சட்டங்கள்) ஊடாகத் தீர்க்க முயற்சி செய்கின்றன. மனித வாழ்க்கையில் அதிகரித்துச் செல்லும் பகுத்தறிவுமயமாக்கம் தனிப்பட்டவர்களை சட்ட அடிப்படையிலான, பகுத்தறிவுசார் கட்டுப்பாடு எனும் இரும்புக் கூட்டுக்குள் அடைத்துவிடும் என்பது வெபரின் கருத்து.

மேற்கோள்கள்[தொகு]

  1. Habermas, Jürgen, The Philosophical Discourse of Modernity, Polity Press (1985), ISBN 0-7456-0830-2, p2
  2. Macionis, J., and Gerber, L. (2010). Sociology, 7th edition