விசாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசாகை என்பவள் மணிமேகலை நூலின் வரலாற்றுப் போக்கில் கூறப்படும் கிளைக்கதை ஒன்றில் வரும் பெண். மணிமேகலை காயசண்டிகை உருவில் இருந்தபோது அவளை அடைய நள்ளிரவில் உலக அறவி மன்றத்தில் இருந்த சம்பாபதி கோயிலுக்கு வந்த உதயகுமரனைக் காஞ்சனன் என்னும் விஞ்சையன் தன் காதலி காயசண்டிகையை அடைய வருகிறான், என்று எண்ணி வாளால் வெட்டிக் கொன்றான்.

இந்தச் செய்தியை நாடாளும் சோழ மன்னனுக்குப் பக்குவமாகத் தெரிவிக்கும் புத்த முனிவர்கள் விசாகை வரலாற்றைக் கூறுகின்றனர். [1]

தருமதத்தன் என்பனின் மாமன் மகள் விசாகை. இவள் சிறந்த அழகி.[2] ஊர்மக்கள் இருவரையும் கள்ளக்காதல் உறவு கொண்டிருப்பதாக இணைத்துப் பேசினர். இதனை இருவரின் பெற்றோரும் விரும்பவில்லை. இதனால் மனம் நொந்த விசாகை புகார் நகரத் தெய்வம் கந்திற்பாவையிடம் முறையிட்டாள். அந்தத் தெய்வம் விசாகை கற்புடையவள் என்று கூறியது. [3] அப்போதும் அவளது பெற்றோர் ஏற்கவில்லை. எனவே விசாகை இந்தப் பிறவியில் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்றும், அடுத்த பிறவியில் அவனை மணந்துகொள்வேன் என்றும் சூள் உரைத்துவிட்டுக் கன்னிமாடத்தில் வாழ்ந்துவந்தாள். [4]

தருமதத்தனும் இவ்வாறே சொல்லிவிட்டுப் புகார் நகரத்தை விட்டு மதுரைக்குப் போய்விட்டான். மதுரையில் பெரும்பொருள் ஈட்டி வாழ்ந்த அவன் தன் 64 ஆம் அகவையில் புகார் திரும்பினான்.

விசாகை தருமதத்தனை கண்டான். வாழ்நாளில் முதன்முதலாகப் பார்த்துக்கொள்ளும் இருவரும் அவர்ளின் முதுமை தோற்றம் பற்றி அளவளாவிக்கொண்டனர்.[5] பின்னர் இருவரும் இணைந்து தருமதத்தனின் செல்வத்தைக் கொண்டு அறம் செய்தனர்.

இவ்வாறு வாழ்ந்துவரும் நாளில் ஒருநாள் விசாகை கடைத்தெருவில் தனியே சென்றுகொண்டிருந்தாள். அப்போது நாட்டை ஆண்ட ககந்தனின் மூத்த மகன் திருமணம் ஆகாத விசாகைக்கு இதுதான் திருமண மாலை என்று சொல்லிக்கொண்டு தன் காம வெறியில் அவளுக்கு மாலை சூட்ட மாலையுடன் கையை உயர்த்தினான். உயர்த்திய அவன் கைகள் உயர்த்திய நிலையிலேயே நின்றுவிட்டது.[6]

மகனின் காமுகச் செயலை அறிந்த ககந்தன் அவனை வாளால் வெட்டிக் கொன்றான்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை 22 சிறைசெய் காதை
  2. இருவரும் புகார் நகரத்தில் வாழ்ந்தனர். தரும தத்தனும் தன்மா மன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும்
  3. இலகுஒளிக் கந்தின் எழுதிய பாவாய்
    உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீஎன,
    மாநகர் உள்ளீர் மழைதரும் இவள்என
    நாஉடைப் பாவை நங்கையை எடுத்தலும், 95

  4. மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்
    இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
    நல்தாய் தனக்கு நல்திறம் சாற்றி 100
    மற்றுஅவள் கன்னி மாடத்து அடைந்தபின்,

  5.  நம்முள்நாம் அறிந்திலம் நம்மை முன்நாள்
    மம்மர் செய்த வனப்புயாங்கு ஒளித்தன?
    ஆறுஐந்து இரட்டி யாண்டுஉனக்கு ஆயதுஎன் 130
    நாறுஐங் கூந்தலும் நரைவிரா வுற்றன
    இளமையும் காமமும் யாங்குஒளித் தனவோ
    உளன்இல் லாள! எனக்குஈங்கு உரையாய்
    இப்பிறப்பு ஆயின்யான் நின்அடி அடையேன்
    அப்பிறப்பு யான்நின் அடித்தொழில் கேட்குவன் 135

  6.  சுரிஇரும் பித்தை சூழ்ந்துபுறம் தாழ்ந்த 150
    விரிபூ மாலை விரும்பினன் வாங்கித்
    தொல்லோர் கூறிய மணம்ஈது ஆம்என
    எல்அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
    மாலை வாங்க ஏறிய செங்கை
    நீலக் குஞ்சி நீங்காது ஆகலின், 155

  7.  ஏறிய செங்கை இழிந்திலது இந்தக்
    காரிகை பொருட்டுஎன, ககந்தன் கேட்டுக்
    கடுஞ்சினம் திருகி மகன்துயர் நோக்கான்
    மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகை&oldid=3285976" இலிருந்து மீள்விக்கப்பட்டது