சுழலும் நடனப்பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிக்கூட்டுத்திசை அல்லது மணிக்கூட்டு எதிர்த்திசை
இடம் அல்லது வலம்

சுழலும் நடனப்பெண் (Spinning Dancer) அல்லது நிழலுருத் தோற்றமயக்கம் (silhouette illusion) என்பது, இயங்கும், இருநிலை ஒளியியல் தோற்றமயக்கம் ஆகும். இது ஒற்றைக் காலில் சுழலும் ஒரு பெண் நாட்டியக் கலைஞரது உருவத்தைக் காட்டுகிறது. 2003 இல் வலைத்தள வடிவமைப்பாளர் நொபுயூக்கி கயாகரா என்பவரால் உருவாக்கப்பட்ட[1][2] இதன் தோற்ற மயக்கம், உருவம் சுழலும் திசை தொடர்பானது. இதைப் பார்க்கும் சிலர் முதலில் உருவம் மணிக்கூட்டுத் திசையில் (மேலிருந்து பார்க்கும்போது) சுழல்வதாகக் காண்பர். சிலருக்கு உருவம் மணிக்கூட்டுத் திசைக்கு எதிர்த் திசையில் சுழல்வதாகத் தெரியும். சிலவேளைகளில் சடுதியாக இது எதிர்த்திசையில் சுழல்வதாகத் தெரியும்.[2]

காரணம்[தொகு]

ஆழத்துக்கான காட்சிக் குறிப்புக்கள் இல்லாததாலேயே இந்தத் தோற்ற மயக்கம் ஏற்படுகிறது. நடனப்பெண்ணின் கை பார்ப்பவர்களின் இடப்பக்கம் இருந்து வலப்பக்கமாக நகரும்போது, அது பார்ப்பவருக்கும் பெண்ணின் உடலுக்கும் இடையில் செல்லக்கூடும் (இந்த நிலையில் பெண் தனது வலது காலில் மணிக்கூட்டுத் திசைக்கு எதிர்த் திசையில் சுற்றுவதாகத் தோன்றும்), அல்லது பெண்ணின் உடலுக்குப் பின்புறமாகச் செல்லக்கூடும் (இந்த நிலையில் பெண் தனது இடது காலில் மணிக்கூட்டுத் திசையில் சுற்றுவதாகத் தெரியும்).

பெண் வலப்பக்கம் அல்லது இடப்பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கும்போது, மார்பும், குதிரைவால் தலைக்கட்டும் பெண் பார்க்கும் திசையைத் தெளிவாகக் காட்டும். ஆனாலும், எது வலக்கால் எது இடக்கால் என்பதில் தெளிவு இருக்காது. பெண் வலப்பக்கம் அல்லது இடப்பக்கம் பார்க்கும் திசையில் இருந்து விலகும்போது பெண்ணின் பார்வை பார்ப்பவரை நோக்கி அல்லது எதிர்த் திசையில் இருப்பதாகத் தெரியக்கூடும் இதனால், சிலருக்குக் கொஞ்சம் முன்புறம் திரும்பிப் பார்ப்பதாகத் தெரியும் போது வேறு சிலருக்குச் சற்றுப் பின்புறம் திரும்பிப் பார்ப்பதுபோல் தெரியும். பெண்ணின் மார்பும், குதிரைவாலும் பார்வையாளர்களின் பார்வைத் திசையோடு ஒரே கோட்டில் வரும்போது பெண் எந்தப்பக்கம் பார்க்கிறார் என்று தெரியாது. சிலர் நேரே முன்பக்கம் பார்ப்பதாகவும் வேறு சிலர் அத்திசைக்கு 180 பாகை விலகி எதிர்த்திசையில் பார்ப்பதாகவும் கொள்வர்.

பார்வையின் உளவியல்[தொகு]

நிழலுருக்கள் பெரும்பாலும் மணிக்கூட்டுத்திசையிலேயே சுற்றுவதுபோல் தெரிவதாக நிறுவப்பட்டுள்ளது. இணையவழி ஆய்வொன்றில் பங்குபற்றிய 1600 பேரில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் தொடக்கத்தில் மணிக்கூட்டுத் திசையில் சுற்றுவதாகவே உணர்ந்தனர். அத்துடன், முதலில் மணிக்கூட்டுத் திசையில் சுற்றுவதாக உணர்ந்தவர்கள் மறு திசையில் சுழல்வதுபோல் பார்ப்பதற்குக் கூடிய சிரமப்பட்டனர்.[3]

இருநிலைப் பார்வை[தொகு]

பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து சுழல்வதாகத் தெரியும் திசை எத்தனை முறை வேண்டுமானாலும் மாறலாம். நெக்கெர் கனசதுரத்தில் மேலிருந்தோ கீழிருந்தோ பார்ப்பதாக மாறிமாறித் தெரிவதுபோல், இது இருநிலைத் தோற்றங்களில் காணும் பொதுவான அம்சம் ஆகும். இவ்வாறு மாறிமாறித் தெரிவது தன்னியல்பாக நிகழ்வது. இதற்கு தூண்டல் மாற்றமோ பார்வையாளரின் விருப்பமோ தேவையில்லை.

கூடுதல் பகுப்பாய்வு[தொகு]

சட்டம் சட்டமாகப் பிரிக்கப்பட்ட சுழலும் நடனப் பெண். தொடக்க அசைபடம் 34 சட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nobuyuki Kayahara's website
  2. 2.0 2.1 Parker-Pope, Tara (2008-04-28). "The Truth About the Spinning Dancer". Well Blog. The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2008-08-07.
  3. "Casual Fridays: TK-421, why can't you spin that woman in reverse?". Cognitive Daily. 2008-10-10. Archived from the original on 2008-10-12. பார்க்கப்பட்ட நாள் 2009-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழலும்_நடனப்பெண்&oldid=3555213" இலிருந்து மீள்விக்கப்பட்டது