உள்ளடக்கத்துக்குச் செல்

யோன் அரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோன் அரிசன்
P.L. Tassaert's half-tone print of Thomas King's original 1767 portrait of John Harrison, located at the Science and Society Picture Library, London
பிறப்பு(1693-03-24)24 மார்ச்சு 1693
யோக்சயரின் வேக்ஃபீல்டுக்கு அண்மையில் உள்ள ஃபோல்பி
இறப்பு24 மார்ச்சு 1776(1776-03-24) (அகவை 83)
இலண்டன்
வாழிடம்ரெட் லயன் சதுக்கம்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைகால அளவியல்
அறியப்படுவதுகடற் காலமானி
விருதுகள்கொப்ளி பதக்கம் (1749)

யோன் அரிசன் (John Harrison) என்பவர் தானே கல்விகற்ற ஆங்கிலேயத் தச்சரும், மணிக்கூடு செய்பவரும் ஆவார். இவர், கடற்பயணங்களின்போது கப்பல்களின் அமைவிட நெடுங்கோட்டைக் கண்டறிவதற்கு நெடுங்காலமாகத் தேவைப்பட்ட கடற் காலமானி என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம், கடற்பயணக் காலத்தில் பாதுகாப்பான தொலைதூரக் கடற்பயணத்தின் சாத்தியப்பாட்டை அதிகரிப்பதில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படக் காரணமானார். 1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வுக்குப் பின்னர் கடற் பயணங்களின்போது பாதுகாப்பு என்னும் விடயம் ஒரு முக்கிய பிரச்சினையாகக் கருத்தில் கொள்ளப்பட்டது. நெடுங்கோட்டுச் சட்டத்தின் கீழ் இதற்கான தீர்வுக்காக £20,000 பெறுமதியான பரிசையும் பிரித்தானிய நாடாளுமன்றம் அறிவித்தது.[1] 2002ல் பிபிசி நடத்திய 100 சிறந்த பிரித்தானியர்களுக்கான வாக்கெடுப்பில் அரிசனுக்கு 39வது இடம் கிடைத்தது.[2]

இளமைக்காலம்

[தொகு]

யோன் அரிசன், யோர்க்சயரின் வேக்ஃபீல்டுக்கு அண்மையில் உள்ள ஃபோல்பி என்னும் இடத்தில், குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தையாஇ அருகில் இருந்த நொசுட்டெல் பிரையோரி தோட்டத்தில் தச்சராகப் பணிபுரிந்தார். இவரது குடும்ப வீடு எனக் கருதப்படும் ஒரு வீடு இவ்விடத்தில் உள்ளது. இவ்வீட்டில், அது ஒரு முக்கியமான நபருடன் தொடர்புடையது என்பதைக் காட்டும் நீலப் பலகை ஒன்றும் உள்ளது.[3]

1700 அளவில், அரிசன் குடும்பம் லிங்கன்சயரில் உள்ள பரோ அப்போன் அம்பர் என்னும் ஒரு ஊருக்குக் குடிபெயர்ந்தது. யோன் அரிசன் அவரது தந்தையாரின் தச்சுத் தொழிலை மேற்கொண்டிருந்த அதே வேளை, ஓய்வு நேரங்களில் மணிக்கூடுகளைச் செய்வதிலும், அவற்றைப் பழுதுபார்ப்பதிலும் ஈடுபட்டார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது அம்மை நோய் கண்டு படுக்கையில் இருந்ததாகவும், அப்போது விளையாடுவதற்காக இவருக்கு மணிக்கூடு ஒன்றைக் கொடுத்ததாகவும், அதன் ஒலியைக் கேட்பதிலும், அசையும் கூறுகளை ஆராய்வதிலும் அவர் பல மணி நேரத்தைச் செலவு செய்ததாகவும் கதையொன்று நிலவுகிறது. இவருக்கு இசையிலும் ஆர்வம் இருந்தது. இதனால், இவர் பாரோ கோயிற்பற்றுத் தேவாலயத்தில் பாடகர் குழுத் தலைவராகவும் செயற்பட்டார்.[4]

தொழில்

[தொகு]

அரிசன் தனது முதலாவது நீளப்பெட்டி மணிக்கூட்டை 1713ல் அவரது 20 ஆவது வயதில் உருவாக்கினார். அதன் எந்திரப் பகுதிகள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. தச்சுவேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு இது இயல்பான தேர்வு ஆகும். இவரது தொடக்ககால மணிக்கூடுகளில் மூன்று இன்றும் உள்ளன. 1713ல் செய்யப்பட்ட முதலாவது மணிக்கூடு, "மணிக்கூடுசெய்வோரின் வணக்கத்துக்குரிய கம்பனி" என்னும் அற நிறுவனத்தில் அண்மைக் காலம் வரை இருந்தது. 2015ல் இது அறிவியல் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 1715ல் செய்யப்பட்ட இரண்டாவது மணிக்கூடு ஏற்கெனவே இலண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திலேயே இருந்தது. 1717ல் செய்யப்பட மூன்றாவது, யோர்க்சயரில் உள்ள நொசுட்டெல் பிரையோரி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. William E. Carter, Merri Sue Carter. "The British Longitude Act Reconsidered". American Scientist. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  2. "100 great British heroes". BBC. 21 August 2002. http://news.bbc.co.uk/1/hi/entertainment/tv_and_radio/2208671.stm. பார்த்த நாள்: 10 February 2012. 
  3. "John Harrison: Timekeeper to Nostell and the world!". BBC Bradford and West Yorkshire (BBC). 8 April 2009. http://www.bbc.co.uk/bradford/content/articles/2009/04/06/nostell_john_harrison_feature.shtml. பார்த்த நாள்: 10 February 2012. 
  4. Sobel, Dava (1995). Longitude: The True Story of a Lone Genius Who Solved the Greatest Scientific Problem of His Time. New York: Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-025879-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோன்_அரிசன்&oldid=3582472" இலிருந்து மீள்விக்கப்பட்டது