டி. வி. தாமஸ்
டி. வி. தாமஸ் (T. V. Thomas) (ஜூலை 2, 1910-மார்ச் 26, 1977) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழந்தலைவர். அவரது சமகாலத்திய இளைஞர்களைப் போல மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டு, இந்திய விடுதலைப் போரட்டம் மற்றும் திருவிதாங்கூரில் திவான்களின் ஆட்சிக்கெதிரான போராட்டங்களில் பங்கேற்றவர். உழைப்பாளர்களின் நலனுக்காக செயற்பட்ட இவர் நீதிக்கும் நியாயத்திற்குமான போராட்டங்களில் தவறாமல் முன்னிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு கிடைப்பதற்கு இவரது செயற்பாடுகளும் முக்கிய காரணமாக அமைந்தன.
அரசியல் வாழ்க்கை
[தொகு]உழவர்கள் மற்றும் தொழிலாளிகள் இயக்கங்கள் பலவற்றை வழிநடத்தினார். புன்னபரா-வயலார் போராட்டத்தில் முன்னணிப் பங்களிப்பாளராக இருந்தார். திருவிதாங்கூர்-கொச்சி சட்டப் பேரவைக்கு 1952 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 முதல் 1956 வரை அப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1957 இல் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முதன்முதலில் நடைபெற்றபோது கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆலப்புழா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஈ. எம். எஸ். நம்பூதிரிப்பாட்டின் கேரள அமைச்சரவையில் தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சரானார் (5.4.1957 - 31.7.1959). அதே ஆண்டில் கேரளாவின் மற்றொரு முக்கிய அரசியல்வாதியும் அமைச்சருமாக இருந்த கே. ஆர். கௌரி அம்மாவை மணந்தார். 1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுப் புதிதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட போதும் அவர் பழைய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருந்தார்
மூன்றாவது மற்றும் நான்காவது கேரள மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஆலப்புழாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 6.3.67 முதல் 21.10.69 வரை ஈ. எம். எஸ் அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சாராகப் பதவி வகித்தார். பின்னர் அச்சுத மேனன் தலைமையிலான அமைச்சரவையிலும் 25.9.71 முதல் 25.3.77 வரை தொழிற்துறை அமைச்சாராகப் பதவி வகித்தார். தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது, தொழில்முனைவோர்களை ஊக்குவித்து கேரளாவின் தொழில்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- T.V.Thomas பரணிடப்பட்டது 2012-07-09 at the வந்தவழி இயந்திரம்
- K.R.Gowri Amma பரணிடப்பட்டது 2013-09-15 at the வந்தவழி இயந்திரம்
- T.V. Thomas hailed as a visionary leader பரணிடப்பட்டது 2010-01-15 at the வந்தவழி இயந்திரம்
- Birth centenary celebrations of T.V. Thomas begin
வெளி இணைப்புகள்
[தொகு]- Punnapra-Vayalar பரணிடப்பட்டது 2014-03-26 at the வந்தவழி இயந்திரம்