புதுவை அறிவியல் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுவை அறிவியல் இயக்கம்
குறிக்கோளுரைஅறிவியல் மக்களுக்கே
வகைதன்னார்வ நிறுவனம்
தலைவர்வி.அமுதா (Assistant Professor, Centre for Bioinformatics, Pondicherry University)
பொதுச் செயலாளர்ஹேமாவதி (Head Mistress, Savarayolu Govt. Girls High School )
வலைத்தளம்www.psfcerd.org

1985 ஆண்டு முதல் ‘‘அறிவியல் மக்களுக்கே’’ அறிவியல் சமூக மாற்றத்திற்கே என்ற முத்திரை வாசகத்துடன் இயங்கிவரும் அமைப்புதான் புதுவை அறிவியல் இயக்கம் Pondicherry Science Forum PSF. விஞ்ஞானிகள், பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்,பெண்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு இருபத்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஓர் தன்னார்வ அமைப்பாகும்.

அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் (AIPSN) மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் (NCSTC NETWORK) உறுப்பினராகவும்[1] உள்ளது. 1985 முதல் புதுவையின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அதுமட்டுமின்றி விவசாயம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

அமைப்புமுறை[தொகு]

அறிவியல் இயக்கத்தின் தற்போதைய பணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம் கல்வி மற்றும் அறிவியல் பரப்புதல், வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல், பெண்கள் ஆற்றல்படுத்தல் போன்றவை. இதன் அடிப்படையில் பெண்களின் சம உரிமைக்கும், கல்வி, பொருளாதார, சுகாதார மேம்பாட்டிற்குப் பணியாற்றும் வகையில் "சமம்" மகளிர் சுயசார்பு இயக்கம் என்ற இயக்கத்தையும், விவசாயிகள், கிராமப்புற வளர்ச்சிப் பணிகளுக்காக சூழலியல் மற்றும் ஊரக வளர்ச்சி மையம் (C.E.R.D)என்ற அமைப்பையும் துணையாகக் கொண்டுள்ளது.

அறிவியல் இயக்கம் அரசு சாரா அமைப்பு எனும் பெயரிலும் தொண்டு நிறுவனம் எனும் பெயரிலும் இயங்கும் அமைப்பு அல்ல. இது மக்களுக்கான தன்னார்வு மக்கள் இயக்கம், People Movement அதனால்தான் தன் பெயரில் இயக்கம் என்ற சொல்லைக் கொண்டுள்ளது.

நோக்கம்[தொகு]

சமூகத்தில் அங்கமான மனிதர்களைத் தனியாகவும் குழுவாகவும் விழிப்புணர்வூட்டி, அறிவூட்டி, அதிகாரமூட்டி நல்லதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எதிர்பார்க்கப்படும் மாற்றம் யாரையும் யாரும் சுரண்டாத, எல்லோரும் உழைக்கவும் நல்வாழ்வு வாழவும் உரிமையுள்ளதான, இன்னும் சொல்லப் போனால் இயற்கையையும் பிற உயிரினங்களையும் கூட பாதிக்காத உலகுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.

  • அறிவியலை ஜனநாயகப்படுத்தி சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்துதல்.
  • சாதி,மதம்,இனம்,பாலினம் ஆகியவற்றின் பேரில் நடைபெறும் வேறுபாடுகளுக்கு எதிராகப் பணியாற்றுதல்.
  • மக்கள் மத்தியில் அறிவியல் கருத்துகளை கண்காட்சிகள்,கருத்தரங்குகள் மூலமாகக் கொண்டு செல்லுதல்.
  • பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக்கும் அறிவியல் திட்டங்கள் நடத்துதல்.
  • மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கான அறிவியல் அறிவைப் பயன்படுத்தத் தூண்டுதல்.
  • கலைப்பயணம் வீதி நாடகம் மூலம் மக்களிடையே அறிவியல் கருத்துகளை எடுத்துச் செல்லல்.
  • அதிக எண்ணிக்கையில் கிராமப்புற மக்களிடையே அடிப்படை அறிவியல் விழிப்புணர்வு அடையச்செய்தல்.
  • அறிவியலின் பயன் அதிகம் சென்றடையாத விளிம்பு நிலை மக்களிடையே பணியாற்றுவது.
  • அதிகரித்துவரும் மூடநம்பிக்கைளுக்கு எதிராக அனைத்து வகையிலும் பணியாற்றுவது.
  • சுற்றுச் சூழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக தொடர்ந்து பணியாற்றுதல்.
  • உள்ளுர் சமுதாய பிரச்சனைகளை கண்டறிதல். அப்பிரச்சனைகளை நீக்க அறிவியல், தொழில்நுட்ப வழிமுறைகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
  • அந்தந்த பகுதிக்கு, சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும், எளிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மேம்படுத்துதல்.
  • தொழில்நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஊள்ளுர் சமூகம் போன்றவற்றிற்கு பயிற்சி அளித்தல்.

சமம் மகளிர் சுயசார்பு இயக்கம்[தொகு]

பெண்கள் சமூகத்தில் அவர்களுக்குரிய இடம் பெறுவதற்காக அறிவொளி காலத்தில் பெண்கள் கல்விக் குழுக்களாகத் தொடங்கப்பட்டுப் பிறகு 1992ஆம் ஆண்டு அறிவியல் பெண்கள் குழு என்ற பெயரிலும் அதன் பிறகு 1997ஆம் ஆண்டு சமம் சிறுசேமிப்புக் குழுக்களாகப் பரிமாணம் பெற்று தற்போது சமம் மகளிர் சுயசார்பு இயக்கம் எனும் பெயரில் பதிவு பெற்ற தனி அமைப்பாக அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வருகிறது.

சூழலியல் மற்றும் ஊரக வளர்ச்சி மையம்[தொகு]

இது ஒரு மக்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையமாகும். 1994-ம் ஆண்டு டிரஸ்ட் சட்டத்தின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட, அவை குறித்து ஆய்வுச் செய்ய, அவற்றைப் செயல்படுத்திப் பார்க்கப் தமிழ்நாடு, புதுவை அறிவியல் இயக்கங்கள் சூழலியல் மற்றும் ஊரக வளர்ச்சி மையத்தை நடத்திவருகின்றன.

முக்கிய சாதனைகள்[தொகு]

தேசிய எழுத்தறிவுத்திட்டம், புதுவை அறிவொளி இயக்கத்தில் [2] இணைந்து 15வயது முதல் 35வயது வரை உள்ள அனைவரையும் கற்க செய்து முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றியதும். ஏரி புனரமைப்புத் திட்டம் TRPP இந்த திட்டத்தை புதுவையில் மாநில அரசுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தியதும் மிக முக்கிய சானைகளாக கருதப்படுகிறது. பல்வேறு திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் புதுவை அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அமைப்பாக இருந்துவருகிறது.

நடைபெற்று வரும் பணிகள்[தொகு]

1993 ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை[3], ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.

2006 ஆம் ஆண்டுமுதல் அறிவியல் உருவாக்குவோம் என்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டி திட்டத்தை பாரிஸ் தெற்கு 11 பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.

கல்விப் பணியை இரண்டு வகையாகப் பிரிக்காலாம். ஒன்று மாணவர்களுக்கான செயல்பாடுகள். மற்றொன்று பொது மக்களுக்கான செயல்பாடுகள்.

பொது மக்களுக்கான செயல்பாடுகள்.

  • கருத்தரங்குகள்.
  • புத்தக வெளியீடு.
  • கலைப் பயணங்கள்.
  • கண்காட்சிகள்.
  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
  • நழுவுப் படக் காட்சிகள்.
  • திரைப்படக் காட்சிகள்.
  • விஞ்ஞானிகளுடன் மக்கள் சந்திப்புகள் நிகழ்ச்சிகள்.
  • வானொலி நிகழ்ச்சிகள்.
  • வான் நோக்கும் நிகச்சிகள்.

மாணவர்களுக்கான செயல்பாடுகள் நேரடியாகவும் ஆசியர்களுகக்கான நிகழ்ச்சிகள் திட்டங்கள் வழியாகவும் நடைபெறுகின்றன அவை.

விருதுகள்[தொகு]

  • அறிவொளி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக புதுவை அரசுடன் இணைந்து கல்விக்காக ஐ.நா.வின் உயரிய கிங் சஜாங் UNESCO's King Sejong International Literacy Prize பரணிடப்பட்டது 2013-12-28 at the வந்தவழி இயந்திரம் என்ற சர்வதேச விருதும்.
  • மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான இந்திராகாந்தி தேசிய விருது.
  • எரிசக்தி சேமிப்புக்காக புதுவை மாநில மரபுசாரா எரிசக்திதுறையின் சார்பில் மாநில விருதையும் புதுவை அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது.
  • ஊரகப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பாராட்டையும் புதுவை அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது.

அறிவியல் வெளியிடுகள்[தொகு]

  • புதுவை அறிவியல் இயக்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த 1987 ஆண்டுமுதல் துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழை நடத்தி வருகின்றன.
  • அறிவியல் முரசு என்ற மாத இதழ் அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றது.
  • பெண்களுக்காக "சமம்" செய்தி மடல் இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டு வருகிறது.
  • புதுவை அறிவியல் வெளியீடுகள் என்ற பெயரில் பல்வேறு அறிவியல் புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
  • ஆங்கிலத்தில் சிறுவர்களுக்காக ஜந்தர் மந்தர் JANTAR MANTAR என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.
  • அறிவு தென்றல் என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.
  • விஞ்ஞான சிறகு என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.
  • விழுது என்ற அறிவியல் இதழை வெளியிடுகிறது.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NCSTC-network communicating Science in India". ncstc-network. 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.
  2. "Total Literacy Campaign". National Literacy Mission. Archived from the original on 2011-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.
  3. "Children's Science Congress". ncstc-network. 2010. Archived from the original on 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவை_அறிவியல்_இயக்கம்&oldid=3715117" இலிருந்து மீள்விக்கப்பட்டது