அமெரிக்க நடுவண் அரசின் முடக்க நிலை, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க நாட்டின் பட்ஜெட் ஆண்டு அக்டோபரில் தொடங்கி செப்டம்பரில் முடியும். 2013ல் செப்டம்பரில் பட்ஜேட் ஆண்டு முடிந்தது.ஆனால், மீண்டும் அக்டோபர் முதல் புதிய பட்ஜெட் ஆண்டு தொடங்க முடியவில்லை. அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து 16 நாட்கள் அமெரிக்க மத்திய அரசாங்கம் பெருமளவில் இழுத்து மூடப்பட்டது. 8 இலட்சம் ஊழியர்கள் ஊதியமில்லா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதுவே 2013 அமெரிக்க மத்திய அரசாங்க முடக்க நிலை என்று ஊடகங்களால் கூறப்பட்டது. கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த 1995 - 96ம் ஆண்டுகளிலும் இதே போன்று அரசாங்கத்தில் இரு முறை முடக்க நிலை ஏற்பட்டுள்ளது.[1]

பட்ஜெட் முன்மொழிவு[தொகு]

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில், செனட் அவை ஆளும்கட்சியான ஜனநாயக் கட்சியின் கட்டுப்பாட்டிலும், பிரதிநிதிகள் அவை எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. குடியரசுக் கட்சி 2014ஆம் நிதி ஆண்டிற்கான ஜனாதிபதி ஒபாமாவின் பட்ஜெட் முன்மொழிவினை நிராகரித்ததுடன் மட்டுமல்லாமல், புதிய பட்ஜெட் நிறை வேறும் வரை அரசின் கைகளில் இருக்கும் பணத்தைத் தவிர வேறு எங்கும் கை வைக்க இயலாத நிலைமையினையும் தோற்றுவித்தது.இது தவிர ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடன் உச்ச வரம்பினைத் தாண்டுவதற்கான ஒத்துழைப்பினையும் எதிர்க்கட்சி மறுத்து விட்டது. அமெரிக்காவின் இன்றைய கடன் உச்சவரம்பு 16.7 டிரில்லியன்(ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி) டாலர். அக்டோபர் மாத மத்தியில் இந்த உச்சவரம்பினையும் அரசு தொட்டு விடும் என்ற நிலையில் நெருக்கடி கடுமையாகி விட்டது. ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை ஓராண்டு தள்ளிப் போட்டால் மட்டுமே ஒத்துழைக்க முடியும் என்று குடியரசுக் கட்சி முன் வைத்த நிபந்தனையினை ஆளும் கட்சி ஏற்க மறுத்து விட்ட நிலையிலேயே நெருக்கடி தொடங்கியது. எனினும், அக்டோபர் 16ம் தேதி இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சமரசத்தின் விளைவாக, சகஜ நிலை திரும்பியது.[1]

முடக்க நிலையின் மூலக் காரணம்[தொகு]

அமெரிக்காவில் அதன் வரலாற்றின் தொடக்கம் முதலே, அரசின் கடன் உச்ச வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யில் சதவீதம் என்று இல்லாமல், முழுத் தொகையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அரசு புதிய கடன்களை எழுப்ப முடியும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைப்பது தான் அமெரிக்காவின் வழக்கம். ஆனால், பழைய கடனைத் தீர்ப்பதற்குத் தான் எனினும், புதிய கடன் வாங்குவதால் உச்ச வரம்பு மீறப்படும் எனில் அந்தக் கடனுக்குக் கூட அனுமதி இல்லை. அமெரிக்கச் சட்டம் அந்த அளவிற்கு இறுக்கமானது.[1]

குடியரசுக் கட்சியின் நிலைப்பாடு[தொகு]

2013இல், இந்தக் கடனில் பெரும் பகுதி ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கே போய்விடும் என்பதால் அந்தத் திட்டத்தினை கை விடவேண்டும், பயன்களின் அளவினைக் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்குத் தள்ளியாவது போட வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மட்டுமல்ல, ஏழைமக்களுக்கான உணவு ஸ்டாம்ப் திட்டத் திற்கான செலவுகளையும் குறைக்கவேண்டும். கடன் வாங்கக் கூடாது எனில்,வரி விதிப்பின் மூலமாவது, அரசு தனது வருமானத்தினைச் சரிக்கட்டிக் கொள்ளலாமா என்றால், வரியினையும் விதிக்கக் கூடாது. அது மட்டுமல்ல தனி நபர் வருமான வரி, கார்ப்பரேட் வருமான வரி விகிதங்களைக் குறைக்கவும் வேண்டும்.[1]

சமரசம்[தொகு]

கடன் உச்சவரம்பு தொகை குறிப்பிடப் படாமல் 2017 வரை தொடரலாம் என நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. பட்ஜெட் குறித்து முடிவு செய்வதற்காக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மத்திக்குள் அந்தக் கமிட்டி தனது பட்ஜெட் அறிக்கையினைச் சமர்ப்பிக்கும் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "ஊதாரித்தனமும், ஓயாத சண்டைகளும்". தீக்கதிர். 26 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]