சங்ககால ஆடவர் பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககால ஆடவர் பந்தாட்டத்தில் குறிப்பிடத் தக்கவை இரண்டு.

குணில்வட்டு[தொகு]

ஆஸ்திரேலியாவில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு குணில்-வட்டு

குணிலால் அடிக்கப்பட்ட வட்டு குணில்வட்டு. மணிவட்டு உருண்டுக் கொண்டிருந்தது. அதனைக் குணிலால் அடித்தனர். அதனால் அந்த மணிவட்டு மேலும் வேகமாக உருண்டோடியது. இதுதான் இந்த விளையாட்டைப் பற்றிச் சொல்லப்படும் செய்தி. குணில் என்பது நுனி வளைந்திருக்கும் தடி. துரத்தல் என்பது தட்டி ஓட்டுதல். [1] வளைந்த தடியால் உருளும் பந்தை அடித்தனர்.

இது இக்கால ஹாக்கி விளையாட்டைப் போல அக்காலத்தில் ஆடப்பட்ட விளையாட்டு.

சேர மன்னர் இமயத்தில் வில் பொறித்த செய்தியை, ஆரிய மன்னர் இழிவுபடுத்திப் பேசிய செய்தியைக் கேட்ட செங்குட்டுவன் அவர்களுக்குப் பாடம் புகட்ட வடநாட்டின் மீது படையெடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தான். கண்ணகிக்குக் கல் இமயமலையிலிருந்து கொண்டுவரலாம் என்று கூறக் கேட்டதும் அவன் எண்ணத்துடிப்பு மேலும் வேகமாகப் பாய்ந்தது. இது உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்தாற் போல் வேகமாகச் சென்றது எனக் கூறப்பட்டுள்ளது. [2]

வட்டுநா விளையாட்டு[தொகு]

வட்டைக் குணிலால் அடித்த குணில்வட்டு விளையாட்டைப் போல நாக்குப் போன்ற தடியால் வட்டை அடித்த விளையாட்டு நாவட்டு விளையாட்டு அல்லது வட்டுநா விளையாட்டு. குணில் விளையாட்டில் மணிவட்டை அடித்தனர். இந்த விளையாட்டில் அரக்கினால் சிவப்புப் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்த வட்டை அடித்தனர். குணில் விளையாட்டில் அடிக்கும் கோலாகக் குணில் பயன்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டில் நாக்கு போன்ற தடி பயன்படுத்தப்பட்டது. இக்காலக் கோல்ப் விளையாட்டில் இதுவோன்ற தடி பயன்படுத்தப்படுகிறது. இது சங்ககால நாத்தடி விளையாட்டு. [3] [4]

வங்கம் போலக் கோடு வரையப்பட்ட ஆடுபுலி ஆட்ட விளையாட்டு சிறுபாடு விளையாட்டு. அரக்குப்புள்ளிப் பந்தை வட்டுநாவால் அடிப்பது ஓர் உடல்திற விளையாட்டு.

அரங்கு[தொகு]

இந்த விளையாட்டுகளைக் குறிப்பிட்ட அரங்கில் விளையாடுவர். அரங்கு இல்லாமல் வட்டு விளையாட முடியாது எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது. [5] எனவே இந்த இரு விளையாட்டுக்களும் வரையப்பட்ட அரங்கில் விளையாடப்பட்டது எனத் தெரிகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. வண்டியைத் துரத்தினான் என்னும்போது துரத்துதல் என்பது மாட்டைத் தட்டி ஓட்டுதலைக் குறிப்பதைக் காணலாம்.
  2. உருள்கின்ற மணி வட்டைக்
    குணில் கொண்டு துரந்ததுபோல்,
    ‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’
    என்ற வார்த்தை இடம் துரப்ப;
    ஆரிய நாட்டு அரசு ஓட்டி,
    அவர் முடித்தலை அணங்கு ஆகிய
    பேர் இமயக் கல் சுமத்தி,
    பெயர்ந்து போந்து; (சிலப்பதிகாரம், வாழ்த்துக்காதை, உரைப்பாட்டுமடை)
  3. வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
    செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
    விளையாடு இன் நகை (நற்றிணை 341)
  4. "வங்கா வரிப்பாறை" என்னும் பாடல் பகுதிக்கு "வங்க வரிப்பாறை" என்னும் பாடப் பேதமும் உண்டு
  5. அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே நிரம்பிய
    நூல் இன்றிக் கோட்டிக் கொளல். (திருக்குறள் 401)