விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 22, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு. அலங்காநல்லூர், ஆவரங்காடு, தேனீமலை போன்ற ஊர்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை ஒட்டி இடம்பெறும் ஏறுதழுவல் புகழ்பெற்றது. சல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணைக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. ‎மேலும்...


வை. மு. கோதைநாயகி (1901-1960) துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர். 115 புதினங்களை எழுதியவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். இதுவரை எழுதப்பட்டு, வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுள் இவர் சரியாக அடையாளம் காட்டப்படாதவர். கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. அவர் சொல்ல எழுதி உருவானதுதான் ‘இந்திரமோகனா’ என்ற அவரது முதல் புதினம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். கோதைநாயகியின் கதைகளை முதலில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது ‘மனோரஞ்சனி’ இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். பின்னர் கோதைநாயகி "ஜகன்மோகினி' என்ற இதழை விலைக்கு வாங்கி 1925 இல் அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். பல புதினங்கள் ஜகன்மோகினி மூலம்தான் அவர் எழுதினார். இந்து, முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை நாவல்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார். கோதைநாயகியின் புதினங்கள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவற்றில் சித்தி (1966) படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது. மேலும்...