போத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல் என்பது 1561 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கடல் வழியாகப் படைகளுடன் வந்து, யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான நல்லூரைத் தாக்கியதைக் குறிக்கிறது. இத்தாக்குதல் போத்துக்கீசர் எதிர்பார்த்தபடி முழுமையான வெற்றியாக அமையாவிட்டாலும், யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார்த் தீவை அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

பின்னணி[தொகு]

16 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலேயே இலங்கையின் கோட்டே இராச்சியத்தில் அரசியலிலும், மதம் தொடர்பிலும் போத்துக்கீசர் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தனர். இந்தியாவிலும் அவர்கள் கோவாவைக் கைப்பற்றியிருந்தனர். எனினும் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது தொடக்கத்தில் அவர்கள் அதிகம் அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசத் தலையீடுகளின் தொடக்கம்[தொகு]

1540 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தின் துறைமுகப் பகுதிகளில் போத்துக்கீசரின் வணிகக் கப்பல்களின் நடமாட்டம் காணப்பட்டது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் நாட்டின் கடற்பகுதிகளில் போத்துக்கீசர் வருவதினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைப் பற்றி உணர்ந்திருந்தான். இதனால், அவர்களுடைய இந்த நடவடிக்கைகளைத் தடுக்கக் கருதி யாழ்ப்பாணப் பகுதிக்கு வந்த இரண்டு போத்துக்கீச வணிகக் கப்பல்களைத் தாக்கி அவற்றிலிருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு கப்பல்களை எரித்தும் விட்டான். இது அப்பகுதிகளில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்த போத்துக்கீசருக்குப் பெரும் சினத்தை ஊட்டியிருக்கவேண்டும்.

1543 ஆம் ஆண்டில் மார்ட்டின் அல்போன்சோ த சூசா என்பவனால் 20 கப்பல்களில் அனுப்பப்பட்ட போத்துக்கீசப் படைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சங்கிலி மன்னனை மிரட்டின. போத்துக்கீசரின் தலையீட்டை எதிர்பார்த்து ஓரளவுக்குத் தனது படைபலத்தை அதிகரித்திருந்தாலும், நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த போத்துக்கீசருடன் போரிடுவது உசிதமானதல்ல என்பதை உணர்ந்த சங்கிலி அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கச் சம்மதித்தான். இதன்படி கப்பல்கள் அழிக்கப்பட்டதனால் போத்துக்கீசருக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஆண்டு தோறும் அவர்களுக்குத் திறை வழங்கவும் ஒத்துக்கொண்டான்.[1] இதன்மூலம் நாட்டுக்கு உடனடியாக வரவிருந்த ஆபத்துத் தடுக்கப்பட்டது எனலாம்.

எனினும் போத்துக்கீசரரினால் யாழ்ப்பாணத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை. அந்த ஆண்டிலேயே இன்னொரு உருவில் போத்துக்கீசத் தலையீடு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டது.

போத்துக்கீச மதகுருக்களின் மதமாற்ற நடவடிக்கைகள்[தொகு]

தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் மீனவர் ஊர்களில் போத்துக்கீசக் கிறித்தவ மத குருக்கள் தமது மதத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தனர். அங்கிருந்து அனுப்பப்பட்ட பிரான்சிஸ் சவேரியார் என்னும் ஒரு மதகுரு 1543 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மன்னாருக்கு வந்து சேர்ந்தார். அவர் அப்பகுதியில் 600க்கு மேற்பட்ட இந்துக்களைக் கிறித்தவராக மதம் மாற்றினார். இதனை அறிந்த யாழ்ப்பாண அரசன் சங்கிலி மிகவும் கோபம் கொண்டான். ஒரு படையை அனுப்பி மதம் மாறிய பலரைக் கொன்றுவிட்டான்.

மேற்படி இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் கால ஒழுங்கை மாற்றி குவைரோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். போத்துக்கீசக் கப்பல்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிரட்டல் படையெடுப்பு, சங்கிலியிடம் திறை பெற்றது ஆகியவற்றைக் குறித்த குவைரோசின் விளக்கங்கள் பின்வருமாறு:

சங்கிலி மன்னனுக்கு எதிரான போத்துக்கீச மதகுருக்களின் நடவடிக்கைகள்[தொகு]

இது போத்துக்கீச மதகுருக்களைக் கோபமூட்டியதுடன் சங்கிலி மன்னனைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களிடையே ஏற்படுத்தியது. பிரான்சிசு சேவியர் 1544 ஆம் ஆண்டு கோவாவுக்குச் சென்று அப்பகுதிக்குத் தலைமை மதகுருவாக இருந்த மிகுவேல் வாஸ் என்பவரைச் சந்தித்து நடந்தவற்றை விளக்கி சங்கிலியைத் தண்டிப்பதற்கு அவரது உதவியை நாடினார்.[2] இது குறித்து கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநருடன் பேசும்படியும், போத்துக்கலின் அரசரிடமிருந்து அநுமதி பெறுவதற்குத் தான் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மிகுவேல் வாஸ், பிரான்சிசு சேவியருக்கு உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரான்சிசு சேவியர் கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுனனைச் சந்திப்பதற்கு முயன்றார். ஆளுனனின் வேலைப்பழு காரணமாக அவரைச் சந்திப்பது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பிரான்சிசு சேவியர் யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்க வேண்டுமென்ற தீவிர எண்ணம் கொண்டவராக இருந்ததால் சளைக்காமல் முயன்று இறுதியில் அவரைச் சந்தித்தார். சங்கிலையைத் தண்டிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த தனது கருத்தை ஆளுனருக்கு எடுத்துக்கூறிய பாதிரியார், பணியின் முக்கியத்துவம் கருதி அவனே யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் செலவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கையை வேறு வேலைகள் இருப்பதைக் காரணமாகக் காட்டி ஆளுனன் தட்டிக் கழித்து விட்டான். எனினும், நாகபட்டினத்தில் இருந்த போத்துக்கீசப் படைத் தலைவருக்குத் தகவல் அனுப்பி அங்கிருந்து சங்கிலியைத் தண்டிக்கப் படைகள் அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்தான்.

நாகபட்டினத்தில் படைதிரட்டல்[தொகு]

இப் படைதிரட்டல் நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பிரான்சிசு சேவியர் நாகபட்டினத்துக்குச் சென்றார். நவம்பர் 1542 க்கும், ஏப்ரல் 1543 க்கும் இடையில் படைநடவடிக்கைகளுக்கான கப்பல்களை ஒன்று திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கப்பல்கள் பல்வேறு இடங்களில் இருந்ததனாலும் ஆளுனரின் உத்தரவு வந்து சேராததனாலும் சேவியர் விரும்பியதுபோல் நடவடிக்கைகள் விரைவாக இடம்பெறவில்லை. இறுதியில் மீனவக் கரைப்பகுதிகளிலிருந்து வந்த மூன்று கப்பல்களுடன் சேர்த்து மொத்தமாக ஒன்பது கப்பல்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் போத்துக்கீசரைக் கொண்ட 500 வீரர்கள் செல்வதாக இருந்தது. நீண்ட காலம் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியும் இறுதி நேரத்தில் தடைப்பட்டுப் போனதாக குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3]

பெருஞ் செல்வத்துடன் சென்ற போத்துக்கீசக் கப்பலொன்று யாழ்ப்பாண இராச்சியத்தின் கடலோரத்தில் தரை தட்டியபோது, அதிலிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் யாழ்ப்பாண அரசன் எடுத்துக்கொண்டதாகவும் அதனைத் திரும்பப்பெறும் ஆசையில் அவனுடன் சமாதானம் செய்துகொள்ளும் நோக்கில் படையெடுப்பு கைவிடப்பட்டதாகவும் குவைரோஸ் பாதிரியார் குறித்துள்ளார்.[3]

கோவாவிலிருந்து படையெடுப்பு[தொகு]

குவைரோசின் நூலின்படி நாகபட்டினத்திலிருந்து படையனுப்பும் முயற்சி தோல்வியுற்றதை அறிந்த ஆளுனன் மார்ட்டின் அல்போன்சோ டி சூசா தானே நேரடியாகச் சென்று யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்க முற்பட்டான். 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோவாவிலிருந்து பல்வேறு வகைகளையும் சேர்ந்த 36 கடற்கலங்களில் போத்துக்கீசப் படை புறப்பட்டது. எனினும் இடையில் ஏற்பட்ட இரண்டு புயல்களினால் பல கப்பல்கள் சேதத்துக்கு உள்ளாயின. ஆளுனனின் கப்பல் ஆபத்திலிருந்து ஒருவாறு தப்பி நெடுந்தீவுக்குச் சென்றது. இறுதியாக மொத்தம் 12 கலங்களே எஞ்சியதாகத் தெரிகிறது. போத்துக்கீசப் படைகள் நெடுந்தீவுக்கு வந்திருப்பதை உளவாளிகள் மூலம் அறிந்த சங்கிலி மன்னன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டிப் போத்துக்கீசருடன் சமாதானமாகப் போக எண்ணினான். தானே நெடுந்தீவுக்குச் சென்று இது பற்றிப் போத்துக்கீச ஆளுனனுடன் பேசினான். சமாதானத்துக்கு விலையாக திறை செலுத்தவும் ஒப்புக்கொண்டான். இந்த ஏற்பாட்டில் திருப்தியடைந்த டி சூசா இரண்டு ஆண்டுகளுக்கு உரிய திறையை முற்பணமாகப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான்.[4]

குவைரோஸ் இந்த நிகழ்வை படுகொலைகளில் முடிந்த மதமாற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தாலும் பிற மூலச் சான்றுகளின்படி இது பிழை என்று குவைரோசின் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எஸ். ஜி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். இவருடைய கூற்றுப்படி மதம் மாறியோரின் படுகொலைச் சம்பவம் இந் நிகழ்வுக்குப் பின்னரே இடம்பெற்றுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. குணசிங்கம், முருகர்., 2008. பக் 160-161
  2. டி குவைரோஸ், பேர்னாவோ., 1992. பக் 246
  3. 3.0 3.1 டி குவைரோஸ், பேர்னாவோ., 1992. பக் 250
  4. டி குவைரோஸ், பேர்னாவோ., 1992. பக் 250-252