விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 27, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1000மீ உயரத்துக்கு மேலாக அமைந்துள்ள சூழலியற் பகுதி உள்ளடக்குகின்ற காடுகள் ஆகும். வளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ள இப்பகுதி உலக வாழ் உயிரினங்கள் பலவற்றிலும் தனிச் சிறப்பு மிக்க இனங்கள் ஏராளமாக வாழும் இடமாகும். இக்காடுகள் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்க மிக்க குளிர்ச்சியானவையாகும். இதன் காரணமாக, இக்காடுகளில் மேகக் காடுகள் உருவாவதற்குத் தேவையான சூழற் தகைமை காணப்படுகிறது. இலங்கைக்குத் தனிச் சிறப்பான பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் தனிச் சிறப்பான முள்ளந்தண்டுளிகள், இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் பெரும்பாலானவை இக்காடுகளிலேயே காணக் கிடைக்கின்றன. அவ்வாறே, ஏராளமான ஓர்க்கிட், பாசி, பன்னத் தாவரங்களும் இக்காடுகளில் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன. இக்காடுகளில் மரங்கள் 10-15மீ உயரம் வளர்கின்றன. இவை இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளில் காணப்படும் மரங்களைவிட உயரம் மிகக் குறைவானவையாகும். மேலும், இவ்வுயர் நிலக் காடுகள் இலங்கையின் முக்கிய ஆறுகள் பலவற்றிற்கும் நீர்தாங்கு பகுதிகளாகக் காணப்படுகின்றன. மேலும்..


அன்னி வூட் பெசண்ட் (18471933) பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர். ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் பிறந்தவர், தனது 19வது வயதில் பிராங்க் பெசண்ட் என்ற மதகுருவை மணந்தார். இறைமறுப்புவாதியான அன்னி, கணவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்தார். பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார். பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். அச்சபையின் சார்பில் 1893 இல் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார். 1893 இல் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துப் பல நூல்களை எழுதினார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார். மேலும்..