விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 5, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியான்கே-I என்பது சீனாவின் டியான்ச்சினிலுள்ள தேசிய மீத்திறன்கணினி மையத்திலுள்ள ஒரு மீத்திறன்கணினி ஆகும். இது அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள ஒரு சில பெடாஃப்ளாப் நிலை மீத்திறன்கணிகளுள் ஒன்றாகும். அக்டோபர் 2010 நிலவரப்படி அவ்வியந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான தியான்கே-1ஏ உலகிலேயே மிக வேகமான மீத்திறன்கணினியாக உள்ளது. இது 2.5 பெடாஃப்ளாப் என்ற வீதத்தில் செயல்படுகிறது. தியான்கே-1 ஆனது மிகப்பெரிய அளவிலான அறிவியல் கணிப்பீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்டது. இது லினக்சு இயக்க அமைப்பைக் கொண்டது. இது வானூர்திப் பயணப் பாவனையாக்கத்திற்கும் பெட்ரோலியப் பொருள் தேடுதல் தொடர்பான கணக்கீடுகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்..


இராசா சாண்டோ (1894-1943) தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்ப கால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். ராஜா சாண்டோ புதுக்கோட்டையில் பிறந்தார். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பம்பாயில் சண்டை நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக செருமானியப் பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார். 1922ல் பதங்கரின் பக்த போதனா படத்தில் முதன்முறையாக முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற சலனப்படங்கள் அவருக்கு நல்ல நடிகரெனப் பெயர்வாங்கித் தந்தன. தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர். பத்மநாபனின் அசோசியேட் ஃபிலிம் நிறுவனத்திற்காகப் பல சலனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார். பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான சலனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன. மேலும்..