விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 22, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசு கிறித்து (கி.மு. 4 – கி.பி. 30) கிறித்தவ சமயத்தின் மைய நபரும், கிறித்தவர்களால் கடவுளின் மகனாக வழிபடப்படுபவரும் ஆவார். இவர் நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்றும் அழைக்கப்படுகிறார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர், இரட்சகர்) என்றும் நம்புகின்றனர். மேலும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த இயேசு, சாவை வென்று மீண்டும் உயிர்பெற்றெழுந்ததாகவும், அவர் மூலமாகக் கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து விடுவித்ததாகவும் ஏற்கின்றனர். கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக, இசுலாம் மற்றும் பகாய் போன்ற சமயங்கள் இயேசுவை ஒரு இறைத்தூதராகக் கருதுகின்றன. இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் இறையடியார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை. மேலும்...


திருச்சிராப்பள்ளி (திருச்சி) நகரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருள், திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது. முற்கால சோழர்களின் தலைநகராக கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர் தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. 5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான். மேலும்...