விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 21, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டம் எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தபடுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆத்திரேலியா ஆகும். நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. பனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண்டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களாக வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா. ஏழு கண்டங்களாக சீன மக்கள் குடியரசு, இந்தியா, மேற்கு ஐரோப்பாவின் சிலபகுதிகள் மற்றும் பெரும்பாலான ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும்...


டோனி பெர்னாண்டஸ் என்றழைக்கப்படும் டான்ஸ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் (பிறப்பு: 30 ஏப்ரல்1964) ஓர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர். பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். 1977இல் இருந்து 1983 வரை இங்கிலாந்து, சுரே எனும் நகரில் இருக்கும் எப்சோம் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1987-இல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றார். 1987-1989 வரை சர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் இசைத்தட்டு நிறுவனத்தில் நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். 1991 இல் சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் இணை உறுப்பினரானார். 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.மேலும்...