விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 25, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. சென்னையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணரல்லாதோர் மாநாடுகளின் விளைவாக 1917ம் ஆண்டு டி. எம். நாயர், தியாகராய செட்டி ஆகியோரால் இக்கட்சி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. 1920-37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. நீதிக்கட்சி தேசியவாத இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அரசியல் மாற்றாக செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை. 1938 இல் பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றிய பெரியார் கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் “நீதிக்கட்சி” என்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். மேலும்...


பிராகா நகர் குழந்தை இயேசு என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசின் பிராகாவில் உள்ள வெற்றி அன்னையின் ஆலயத்தில் அமைந்துள்ளது. 1628ல் இளவரசி பொலிக்சேனா பிராகா கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதில் இருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்த சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்த சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது. இன்றளவும், பிராகாவின் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகாவின் குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன. மேலும்...