வடித்திறக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடித்திறக்கல் அல்லது துளித்தெடுப்பு (distillation) என்பது, கொதிக்கும் ஒரு நீர்மக் கலவையில் இருந்து வேதிப்பொருட்களை அவற்றின் கொதிநிலை வேறுபாட்டைக் கொண்டு பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். வடித்திறக்கல் வேறொரு பெரும் வேதிச்செலுத்தத்தின் பகுதியாக அமையும் என்பதால் இதனை ஒரு அலகுச் செலுத்தமாகவும் கருதலாம். பிரித்தல் செலுத்தங்களில் பழமையானதும் முதன்மையானதும் வடித்திறக்கலே.

கொதிக்கும் கலவையின் வளிமப் பகுதி குறைகொதிநிலை வேதிப்பொருளை அதிகமாகக் கொண்டிருக்கும். அந்த வளிமப் பகுதியை குளிர்வித்து நீர்மமாக்கினால், பிறகு அந்த நீர்மத்தில் பெரும்பான்மையாகக் குறைகொதிநிலைப் பொருளே இருக்கும். உள்ளிட்ட நீர்மத்தில் வளிமமாகாமல் இன்னும் நீர்மமாகவே இருக்கும் பகுதியில் உயர்கொதிநிலைப் பொருட்கள் பெரும்பான்மையினதாக இருக்கும்.

வடித்திறக்கல் செயன்முறைக்கு ஆற்றல் தேவை அதிகம் என்றாலும், இதற்குப் பல பயன்கள் உண்டு. இதில் முதன்மையானது கரட்டுப் பாறைநெய்யை அதன் பல்வேறு பின்னங்களாகப் பகுத்துப் பிரிப்பதாகும். கடல் நீரில் இருந்து உப்பை அகற்றுவதற்கும் துளித்தெடுப்பு உதவும். காற்றில் இருந்து ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கான் போன்ற கூறுகளைப் பிரிப்பதற்கும், நொதிப்புக் கரைசல்களில் இருந்து மதுவைப் பிரிப்பதற்கும் வடித்திறக்கல் செயன்முறைகள் உதவுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடித்திறக்கல்&oldid=3746471" இலிருந்து மீள்விக்கப்பட்டது