பேச்சு:வடித்திறக்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் distillation ஐ வடித்தெடுத்தல் என்றவாறு மொழிபெயர்க்கின்றார்கள். இது இந்தியாவில் இல்லையா? இல்லாவிட்டால் இலங்கை வழக்கு என்று கட்டுரையில் சேர்த்துவிடுகின்றேன். --உமாபதி \பேச்சு 16:56, 8 ஜூன் 2008 (UTC)

செல்வராசு, அ. கி. மூர்த்தி, "அறிவியல் அகராதி" யில் distillation = வடித்துப் பகுத்தல் என்று கொடுத்துள்ளார். நான் ஆவிவடிப்பு என்று பரிந்துரைப்பேன். ஒருக்கால் நீங்கள் வைத்திருக்கும் தஞ்சை பல்கலை அகராதியில் துளித்தெடுப்பு என்று கொடுத்துள்ளார்களோ என்று ஓர் ஐயம் வருகின்றது. பொதுவாக வடித்தெடுத்தல், வடித்து பகுத்தல் என்னும் சொற்கள் பரவலாக ஆட்சியில் உள்ளது என்று நினைக்கிறேன். பிற சொற்களாக ஆவி வடிப்பு, துளித்தெடுத்தல் என்னும் சொற்களைக் குறித்து வைக்கலாமோ என்று தோன்றுகின்றது. உமாபதி, வடித்தெடுத்தல் என்பது தமிழ்நாட்டிலும் வழக்கில் உள்ளது.--செல்வா 17:08, 8 ஜூன் 2008 (UTC)

நன்றி செல்வா, ஆவிவடிப்பு நேரடியாக அர்தத்தை விளங்க வைப்பதால் அதுவே கூடுதல் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. --உமாபதி \பேச்சு 01:57, 9 ஜூன் 2008 (UTC)

செல்வா, உமாபதி, distillationக்கு வடித்திறக்கல், காய்ச்சி வடித்தல் என்று தான் தஞ்சை அகராதி கூறுகிறது. துளித்தெடுத்தல் என்பதை எந்த அகராதியிலும் பார்த்ததில்லை, இராம.கி பதிவைத் தவிர. வடித்தல் என்பது சிறிதும் பொருத்தமில்லாத ஒன்று என்று எனக்குப் படுகிறது. filtration என்பதற்குத் தான் வடித்தல் சரியாக இருக்கும். தஞ்சை அகராதியும் கூட distillate, filtrate இரண்டிற்கும் வடிநீர்மம் என்று கூறுகிறது. இவை இரண்டும் முற்றிலும் வேறான செலுத்தங்கள் (process என்பதற்குச் செலுத்தம் என்று நான் பாவிப்பதும் இராம.கி வழியாகத் தான். அது பற்றியும் கருத்துக்கள் தேவை. வேறு எங்கும் பார்த்திராத சொல் அது). அதனால், distillation என்பதற்குப் புதிய சொல்லாகத் துளித்தெடுப்பு என்பதை ஆளலாம் என்று நினைக்கிறேன். துளித்தல் என்பதற்கு to fall in drops, spray as in mist என்னும் பொருளை Tamil Lexicon தருகிறது. மேலிருந்து கீழ் விழும் நீர்மத்துளிகளூடாகக் கீழிருந்து மேலெழும் ஆவி கலந்து வேதிச்சமனிலை அடைந்து பிரிக்கும் செலுத்தம் என்பதால் துளித்தெடுப்பு பொருந்தும் தானே? இது குறித்துக் கருத்து வேறுபாடு இருந்தால் தெரிவிக்கவும். இங்கே நான் எழுதிய பல இடங்களில் துளித்தெடுப்பு மற்றும் செலுத்தம் இவற்றைப் பாவித்திருக்கிறேன். வேறு சொல் வேண்டுமானால் எல்லா இடங்களிலும் மாற்றவேண்டும். துளித்தெடுப்பு என்று இன்று கூகுளில் தேடினால் இந்தக் கட்டுரை தான் முதலில் வருகிறது :-) --இரா.செல்வராசு 03:06, 9 ஜூன் 2008 (UTC)

செல்வராசு, வடித்தல், வடிகட்டுதல் என்னும் சொற்களில் வரும் வடி என்பது வளைவது என்னும் வேர்ப்பொருள் கொண்டது. வளைவது என்பது விலகிப் பிரிவது என்னும் பொருள் பெறுகின்றது. எனவே முற்றிலும் பொருந்துவது. வடி என்பது வளைவது என்னும் பொருள் இருப்பதால்தான் வடி என்றால் கயிறு என்னும் பொருளும் கொள்கின்றது. தேர் வடம் எல்லோரும் அறிவது; அதில் வரும் வடம் என்பது கயிறுதான். வடம் என்பதன் வேரும் ஒன்றுதான் (<வடி)). அது மட்டுமல்லாமல், கழகத் தமிழகராதியில் வடித்தல் = தெளித்தெடுத்தல் என்னும் பொருளும் கொடுத்துள்ளது. வடித்தல் என்னும் சொல் கம்பி போன்றவற்றை இழுத்து நீட்டுவதற்கும் பயன்படும் சொல். வடித்தல் = நீளமாக்குதல். எனவே வடித்தல் என்பது சல்லடை போன்ற தட்டு வழியாக வடித்தெடுத்தல் மட்டுமல்லாமல், எதனையும் விலக்கிப் பிரித்தெடுத்தலுக்குப் பொருந்தும் சொல். மேலும் வடித்தல் என்பதற்கு நேரடியாக தெளித்தெடுத்தல் என்னும் பொருளும் தந்துள்ளார்கள். இந்த தெளித்தெடுத்தல் என்பது காய்ச்சி வெவ்வேறாக பிரித்தெடுத்தலுக்கும் பொருந்தும். மேலும், வடி என்னும் சொல்லுக்கே காற்று என்றும் ஒரு பொருள் உண்டு (கழகத் தமிழ் அகராதி பார்க்கவும்). வளி என்பதும் வளையக்கூடியது என்னும் பொருளில் காற்றுக்கு ஏற்பட்ட சொல்தான். எனவே வடித்தல் என்பது காற்றாக்கி (வளிமமாக்கிப்) பிரித்தெடுப்பது என்னும் பொருள் நுணுக்கமாக, குறிப்பாக சுட்டுவது. சொட்டு சொட்டாக, துளித்துளியாக என்பது ஆங்கிலச்சொல்லின் வேர்ப்பொருளாக இருக்கலாம், (Oxford English Dictionary: [ad. L. distill{amac}re, more correctly d{emac}still{amac}re to drip or trickle down, drop, distil, f. DE- I. 1 + still{amac}re to drop: cf. F. distiller (14th c. in Littré) = Pr. distillar, Sp. destilar, It. distillare.] ) ஆனால் நாமும் அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. காற்றாக்கிப் பிரிப்பது என்பது போதுமானது என்று நினைக்கிறேன். மேலும் இச்சொல் பரவலாக வழக்கில் உள்ளது. துளித்தெடுத்தல் என்பதை விட வேர்த்தெடுத்தல் எனலாம். ஆவியாகிக் குளிர்ந்து, துளித்துளியாக மாறுவதற்கு வேர்த்தல் என்பது பேச்சு வழக்கில் உள்ள சொல். ஆனால் இவ்வகையான புதுச்சொற்கள் வேண்டுவதில்லை என்று நினைக்கிறேன். வடித்தல் என்பதன் அடிப்படையான ஒரு சொல்லே முழு நிறைவு தருவது. அடுத்து, செலுத்தம் என்னும் சொல் drive என்னும் பொருள் தருமே அன்றி, process என்பதற்கு சுற்ரி வளைத்துத்தான் பொருள் வரும். சொல்லலாம், ஆனால் ஏதும் முன்னொட்டு தரவேண்டுமோ என எண்ணுகிறேன். செயல் என்னும் கருத்தடியாக வருதல் வேண்டும் என்று நினைக்கிறேன். இராம.கி அவர்கள் இந்திய-ஐரோப்பிய மொழிவழி "going on" (proceed, process) என்பதன் அடிப்படையில் செய்திருப்பார் என்று எண்ணுகிறேன். பொறியியலில்ம் ஒன்றை செய்யும் முறை, பதப்படுத்தும் முறை, பக்குவப்படுத்தும் முறை, படிப்படியான செய்கைகளுக்கு உட்படுத்துவது. CPU Central Processing Unit என்பதில் கூட மையச் செயலி என்று கூறுவது, செயல் என்பதன் அடிப்படியில் எழுவதே. பணி, செயல் என்பது கருவாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.Process = செயல், படிமுறைச் செயல், அடுக்குச் செயல்??--செல்வா 23:53, 9 ஜூன் 2008 (UTC)

அப்படியே desalination என்ன தமிழ் என்று கூற முடியுமா? --Natkeeran 00:09, 10 ஜூன் 2008 (UTC)

நற்கீரன், desalinationக்கு உப்பகற்றுதல் என்று நான் முன்னர் பயன்படுத்தியுள்ளேன். http://blog.selvaraj.us/archives/205 .
செல்வா, உங்களின் விரிவான விளக்கங்களுக்கும் பொறுமைக்கும் நன்றி. இதன் தொடர்ச்சியாக மேற்சுட்டிய என் பதிவில் processing என்று வரும் இடங்களிலும் பொருந்துமாறு பொதுவான சொல்லாய் இருந்தால் நலம். காட்டாக, food processing, wastewater processing. பிற சொற்கள்: process technology, process engineering, process control, process design? செயல் என்னும் பொதுவான சொல் இங்கெல்லாம் பொருந்துமா? ஒற்றைச்சொல்லாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.
வடித்தல் குறித்த வேர்ச்சொல் விளக்கங்களுக்கும் நன்றி. வடித்திறக்கல், வடித்தெடுத்தல், வடித்தெடுப்பு என்று எதனைப் பாவிக்கலாம் என்றும் சொல்லுங்கள். அதோடு, முன்னர் துளித்தெடுத்தல் என்று எழுதிய இடங்களை எல்லாம் இலகுவாகத் தேடி மாற்ற இயலுமா? --இரா.செல்வராசு 03:47, 10 ஜூன் 2008 (UTC)
நன்றி சொல்வராசு. processing என்பதற்கு முறைவழிப்படுத்தல் என்று பலர் பயன்டுத்துவதுண்டு. செயல்முறையாக்கம் என்றும் சொல்லாம் என்று நினைக்கிறேன். --Natkeeran 11:31, 10 ஜூன் 2008 (UTC)

நற்கீரன், Desalination என்பதற்கு உப்பகற்றல், உப்புநீக்கல், உவரகற்றல் (உவர் = உப்பு; உவர்ப்பு உப்புக்கரிக்கும் சுவை), சேரையகற்றல் (சேரை = உப்பு) போல பல சொற்கள் ஆக்கலாம். உப்பகற்றல் என்பதே எளிதானது. செல்வராசு processing என்பதற்கு என்ன சொல் பயன்படுத்தலாம் என்னும் என் பரிந்த்ரையைப் பின்னர் எழுதுகிறேன். வடித்திறக்கல் என்பது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு வடி என்னும் சொல்லைப் பற்றிய இன்னும் சில செய்திகளை பதிவு செய்கிறேன் (பின்னர் வருவோரின் பயனுக்காக).

  • சென்னை பல்கலைக் கழக அகரமுதலியில், பக்கம் 3476ல் மேற்கோளோடு தந்துள்ளார்கள்: வடித்தல்: "4. To distill, as oil; தைலமிறக்குதல். கடத்துற வடி (தைலவ. தைல. 116)".
  • அதே பக்கத்தில், வடித்தல்: ", 4 v. intr. 1. To drip, trickle, as water; ஒழுகுதல். சீழ் வடிகின்றது."
  • அதே பக்கத்தில், வடித்தல்: "v. tr. Caus. of வடி¹-. 1. To cause to flow out; to shed, as tears; to drain; வடியச் செய்தல். கட்புனல் வடித்து (தனிப் பா. i, 351, 73)."

எனவே கண்ணீர் வடிதல், கண்ணீர் வடிக்கிறாள், இரத்தம் வடிதல், இரத்தம் வடித்தான் என்பதில் சொட்டு சொட்டாக என்னும் பொருள் உள்ளது. கண்ணீர் சிந்தாதே, கணீர் விடாதே என்பதிலும் இதே பொருள்தான். எனவே வடிதல், வடித்தல் என்பது பொருந்தும். இவற்றை ஒரு பதிவிற்காக மட்டுமே சேர்த்துள்ளேன், செல்வராசு. தொடர்புடைய கருத்துக்கள் ஓரிடத்தில் இருக்கட்டுமே என்று.

--செல்வா 12:07, 10 ஜூன் 2008 (UTC)

ஆமாம், உப்பகற்றல் நல்ல சொல். நன்றி. --Natkeeran 12:28, 10 ஜூன் 2008 (UTC)

செல்வா, மிகவும் பயனுள்ள குறிப்புகள். மீண்டும் நன்றி. distillationக்கு வடித்திறக்கல் என்றே வைத்துக் கொள்வோம். குறிப்புக்காக, Process/processing ஒட்டிய தஞ்சைப் பல்கலைக்கழக அகராதிச் சொற்கள் கீழே:
process - செயற்பாடு
process control - செயன்முறைக் கட்டுப்பாடு
process design - செயற்பாங்கு வடிவமைப்பு
process engineering - செய்முறைப் பொறியியல்
processing - பதப்படுத்தல்
process industry - பதனீட்டுத் தொழிலகம்
batch process - தொகுதிச் செயலாக்கம்
--இரா.செல்வராசு 12:56, 10 ஜூன் 2008 (UTC)

Process-processing[தொகு]

செல்வராசு, த.ப. அகராதிச் சொற்களை இங்கு இட்டுப் பகிர்ந்தமைக்கு நன்றி. அவை நல்ல சொற்களாகவே எனக்கும் படுகின்றன. தக்கச் சூழலில் பயன்படுத்திப் பார்த்தால் பொருந்துவதும் இடறுவதும் தென்படக்கூடும். இவற்றோடு சேர்ந்தெண்ண என் பரிந்துரைகள் சில:

  • Process technology = செய்நுட்பம், செய்நுட்பியல்.
  • Process engineering என்பதற்கு ஒரு சில வகைகளில் விளக்கம் தருகிறார்கள். ஆங்கில விக்கி, "Process engineering is often a synonym for chemical engineering" என்கிறது. இங்கே, "the design of a series of unit operations, actions, or activities that produce a desired product or end result.." என்கிறது. எனவே வேதிப் பொறியியல் வழிப்பட்டதாயின், வேதிப் பதநுட்பம் எனலாம். படிப்படியாய், பற்பல வழிகளில், தனித்தனி செய்முறைகளால்செய்து உருப்பெறும் பொருள் அல்லது விளைவுக்குப் படிநுட்பம் என்று கூறலாம். நான் பணியாற்றும் துறையில் microelectronic processing technology என்றும் ஓர் உள்துறை உண்டு. அதனை மின் தொகுசுற்றுச் செய்நுட்பம் (integrated circuit process technology) எனலாம் அல்லது தொகுசுற்று படிநுட்பம் எனலாம். இங்கே படி என்பது வேறொரு பொருளிலும் நுட்பமாய் பொருள் சுட்டும் சொல்லாட்சி. படிப்படியாய் ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வது என்பது ஒரு பொருள், ஆனால் படலம் படலமாக, பல்வேறு நிலைகளில் மின்நுட்பக் கருவிகள் வட்டைகளில் படி வளர்ச்சி அடைந்து உருப்பெறுவதையும், அவற்றில் பல்வேறு நிலைகளில் சில பகுதிகளை வேதிவினைகளால் அரித்தெடுத்து விடுவதால் படிப்படியாக (ஏற்றத்தாழ்வுகள் உள்ள படிகளாக) நுண்ணோக்கியில் காட்சி தருவதாலும், அதனை படிநுட்பம் எனலாம் :)
  • Process control = செயன்முறைக் கட்டுப்பாடு என்பதே நல்ல சொல். செய்நுட்ப/படிநுட்பக் கட்டுப்பாடு என்றும் சொல்லலாம்.
  • Process design = செயன்முறை வகுதி (வகுதி = design)
    ஒப்பு நோக்குக:
    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
    . (திருவள்ளுவர்)

    Design என்பதற்கு இங்கு ஏற்பாடு என்றும் சொல்லாம். எவ்வெப்பொழுது என்னென்ன செய்ய வேண்டும் என்னும் திட்டப்பாடு ஏற்பாடு. இதில் எப்படிச் எய்வது என்பதும் அடங்கும். ஒழுங்குபாடு. வடிவமைப்பு என்றும் சொல்லலாம், அதுவும் பொருந்தும், ஆனால் வேறு வேர்ப்பொருளில்: வடி = பிரி, வகு. ஏற்பாடு என்னும் சொல் protocol என்னும் சொல்லுக்கும் பொருந்தும். process architecture என்பதற்கு செய்நுட்ப ஒழுக்கு எனலாம். process flow என்பதற்கு செய்நுட்ப வரன்முறை அல்லது செய் வரன்முறை எனலாம்.
  • Batch process = தொகுதிச் செயலாக்கம் நல்ல சொல். படை ஆக்கம், தொழுதிப்படை ஆக்கம் ( தொழுதி = கூட்டம், திரளாக இருக்கும் நிலை; மாட்டுத் தொழுவம் என்பது மாடுகள் கூட்டமாக நிற்கும், கட்டி வைக்கும் இடம்; தொழுதி என்றால் பறவைக் கூட்டம். தொழு என்றால் உள்ளம் ஒன்றி சேர்ந்து வழிபடு, இரண்டு கைகளும் சேர்ந்து கும்பிடு. கும்பிடு என்பதும் சேர்வதுதான். இசுலாமியர் கூட்டமாகச் சேர்ந்து தொழுகைக்குச் செல்லுதலும், பிற சமயத்தாரும் தத்தம் கோயில்களுக்குச் சென்று சேர்ந்து கும்பிடுவதற்கும் தொழுகை. தொழுதி = கூட்டம், திரட்சி. ).
  • food processing = உணவுப் பொருளாக்கம் என்பதே போதும். Food processing technology என்பதை உணவுப்பொருள் செய்நுட்பம் எனலாம். உணா என்றால் உணவு. எனவே உணாநுட்பியல் (food processing technology) எனலாம். உண்பொருள் நுட்பியல் என்றும் சொல்லலாம். (இயன்றளவு சுருக்கம், செறிவு தேர்தல் வேண்டும்)
  • Waste water processing technology = கழிநீர் தூய்நுட்பம். கழிநீர் பயன்வடி நுட்பம்.
--செல்வா 12:25, 11 ஜூன் 2008 (UTC)
தமிழின் செறிவு ஒவ்வொருமுறையும் மெய்யாகவே மெய்சிலிர்க்கச் செய்கிறது! வள்ளுவத்தில் teleological (இயலுள்நோக்கக் கோட்பாடு?) சார்பு இருப்பினும் வகுத்தல் வினையை அழகாகப் பயன்படுத்தியுள்ளார். இன்று வரை பாதை வகுத்தல் வழி வகுத்தல் போன்ற தொடர்களில் ஒத்த பொருள் தருவதைப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:37, 11 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடித்திறக்கல்&oldid=253446" இலிருந்து மீள்விக்கப்பட்டது