மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், மார்ச் 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், மார்ச் 2008 என்பது இலங்கை இராணுவத்தினரால் 2008 ஆம் ஆண்டு மார்ச் 22 சனிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இலங்கையின் வட மாகாணத்தில் மன்னாரில் மேற்கொண்ட பாரிய படை முன்னகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு அதனை முறியடித்த நிகழ்வைக் குறிக்கும்[மேற்கோள் தேவை].

மன்னாரில் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இரு முனைகள் மீதான இப்படை முன்னகர்வில் பல்குழல் வெடிகணைகள், ஆட்லறித் தாக்குதல், மோட்டார்த் தாக்குதல் மிகச் செறிவான சூட்டாதரவு போன்றன உபயோகிக்கப்பட்டன. அதிகளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறிய இலங்கைப் படையினரின் முன்னகர்வுகளை முறியடிக்கும் விதமாக எறிகணைத் தாக்குதலுடன் கூடிய முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். அன்று மாலை 5:00 மணி வரை நீடித்த இம்முறியடிப்புச் சமரில் 55க்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு 120க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர். காயமடைந்த படையினர் ஊர்திகள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதனால் மன்னார் - வவுனியா சாலைப் போக்குவரத்து இலங்கை இராணுவத்தினரால் தடைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.